Showing posts with label ஆரோக்யம். Show all posts
Showing posts with label ஆரோக்யம். Show all posts

Monday, August 10, 2009

நட --------- ராஜா

எல்லா காலத்திற்கும் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு உடற்பயிற்சி இருக்குமானால் அது 'வாக்கிங்' தான் என்பதில் சந்தேகமில்லை.
நடைப் பயிற்சி நம் உடல் உறுப்புகளை மட்டுமல்லாது மனதுக்கும் புத்துணர்வைத் தருகிறது.
மனித உடலின் பல உறுப்புகள் இயல்பாகவே நடத்தலோடு தொடர்புடையவை.
பாதம் ,கால்கள் ,இடுப்புப் பகுதியோடு,வயிற்றுத் தசைகளும் ஒத்துழைக்கின்றன.நடக்கும் போது உதரவிதானம் ,விலா எலும்புகள் நன்றாக வேலை செய்வதால் நாம் வேகமாக மூச்சை இழுத்து விட முடிகிறது.
இப்போதெல்லாம் 'வாக்கிங்' என்பது ஆரோக்யத்துக்காக இல்லாமல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவும் ஆகி விட்டது.
வேலைக்குப் போகும் பெண்கள் வாக்கிங் போக எனக்கெங்கே நேரமிருக்கு என்பதும்,வீட்டிலிருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு நூறு முறை நான் அடுப்படிக்கும் தெருவாசலுக்கும் நடையா நடக்கிறேன் இதுல தனியா என்ன வாக்கிங் வேண்டியிருக்குன்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அலுவலகம்,அன்றாட வேலை,வீடு இங்கெல்லாம் அடிக்கடி நடப்பது மாடி ஏறி இறங்குவது என்பதெல்லாம் முறையான நடைப் பயிற்சி ஆகாது .உடற்பயிற்சியும் ஆகாது என்பது மருத்துவர்களின் கூற்று.
நாளொன்றுக்கு சுமார் 30 முதல் 45 நிமிடமாவது சீரான வேகத்தில் குறைந்தது 2 கி.மீ தூரம் நடப்பதென்பதே சரியான நடைப் பயிற்சியாகும்.
நடைபயிற்சி என்னென்ன விதமாக நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதைப் பாருங்கள் .பிறகு நாலு தெரு தள்ளிப் போய்வருவது என்றாலும் டூ விலரை எடுக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள்.
ஏரோபிக்:
நடைப் பயிற்சி உடலை உறுதியாக வைக்க உதவுகிறது. ஓடுதல்,பளு தூக்குதல் போன்ற மற்ற கடினமான உடற்பயிற்சிகள் போல இல்லாமல் ,நடக்கும் போது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைக்கிறது.இதனால் உடலின் எந்த திசுக்களும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் திணறுவது இல்லை.எனவேதான் 80,90 வயதானாலும் நடைப் பயிற்சி சாத்தியம்.
சுவாசம்:
சீரான நடைப் பயிற்சி நுரையீரல் மார்பு தசைகளுக்கு பயிற்சியளித்து நல்ல சுத்தமான காற்றை அதிக அளவில் சுவாசிக்கவும்,தேவையில்லாத காற்றை வெளித்தள்ளவும் செய்கிறது.
இதயம்:
இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் நல்ல பயிற்சியளித்து அடைப்பு வராமல் தடுக்கிறது.இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை [HDL-high density lipoprotein]அதிகரிக்கச் செய்கிறது.உடல் முழுவதற்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி செய்வதால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக் போன்ற அபாயங்களிலிருந்து காக்கிறது.
இரத்தக் கொதிப்பு:
இரத்தக் கொதிப்பு எனப்படும் 'பிளட் பிரஷர்' [BP] சர்வசாதாரண்மாக இளையவர் முதல் முதியவர் வரை உள்ளது.இப்போதுள்ள வாழ்க்கை முறைகள்,உணவுப் பழக்க வழக்கங்களே இதற்கு காரணம்.இந்த பி.பி க்கு ஒரு சிறந்த 'கடிவாளம்' நடைப்பயிற்சி என்றால் மிகையாகாது. மன அழுத்தத்தைக் குறைத்து இரத்தக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை சமனப் படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுப்பதால் குறைந்த அல்லது அதிக இரத்த அழுத்தம் எட்டிப் பார்க்காது.
நீரிழிவு:
சர்க்கரை நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு மருந்து நடைப் பயிற்சி.நடைப்பயிற்சியால் ஏற்படும் எடைக் குறைப்பு சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது.
எலும்பு:
உடலின் எலும்புகளை மூட்டுக்களை உறுதியாக்குகிறது.வயதான காலத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரிசிஸ் வராமல் எலும்புகளை உறுதிப் படுத்துகிறது.
சக்தி:
அதிகப்படியான கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மன இறுக்கத்தைத் தளர்த்தி புத்துணர்வைக் கொடுக்கிறது.
எப்படி நடப்பது?:
நிச்சயம் தினசரி பயிற்சியாக இருக்க வேண்டும்.ஆரம்பத்தில் ஆர்வமாக வாக்கிங் செய்து விட்டு விட்டுவிட்டால் அதுவரை கிடைத்த நன்மைகள் காணாமல் போய்,திரும்ப முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.
எடுத்த எடுப்பிலேயே 4,5 கி.மீ நடக்கிறேன் பேர்வழி என ஆரம்பிக்கக் கூடாது.
never bite off more than you can chew என்பது போல் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும் , நடக்க வேண்டிய தூரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை:
இருதயக் கோளாறு உள்ளவர்கள்,
அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
உடல் ரீதியான தொந்தரவு உள்ளவர்கள்
நடைப்பயிற்சியின் போது தலை சுற்றல்,மயக்கமடைபவர்கள்
மார்புப் பகுதியில் வலி ,இறுக்கம் உணர்பவர்கள்
இவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு செய்யலாம்.

இனியென்ன?இத்தனை நன்மைகள் இருக்கும் போது அலட்சியம் ஏன்?தொடங்க வேண்டியதுதானே?
நட.....ராஜா

Saturday, August 08, 2009

கிரீன் டீ

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானம் 'டீ' எனப்படும் தேநீர்.

'கேமில்லா சினன்சிஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டுதோறும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடி சாறே தேநீர் ஆகும்.
தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் மாறுபடும்போது டீ பலவகையாக வகைப் படுத்தப் படுகிறது. ஒய்ட் டீ,மஞ்சள் டீ,கறுப்பு டீ,கிரீன் டீ என வகைப்படுத்தப் படுகிறது.

பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.

கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய 'பாலிபீனால்கள்' சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
கிரீன் டீயில் உள்ள வேதிப் பொருட்களின் பெயர்கள் நமக்குத் தேவையில்லையென்றாலும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கிரீன் டீயில் எபிகேடசின்,எபிகேடசின் -3-கேலேட், எபிகேலோகேடசின்,எபிகேலோ கேடசின் -3-கேலேட்ஆகியவற்றோடுஃபுளூரைடுகள்,மாங்கனீசு,பொட்டாசியம்,
அரோடினாய்ட்ஸ்,காஃபின்,தெயோப்ஃலின்,தெயோஃபிளேவின்போன்ற சேர்மங்கள் உள்ளன.

உடலுக்குத் தேவையான 'ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்' கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது.வைட்டமின் 'சி' யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் 'ஈ' யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கிரீன் டீ எந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்டது என்பதை பாருங்கள்.
கேன்சர்:
கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு:
கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது 'இன்சுலீனின்'செயல்பாட்டையும்'அதிகரிக்கிறது.
இதயம்:
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்:
ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டாம்.
ஒபிஸிட்டி:
உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.
முதுமை:
வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுக்கலாமே.உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப் படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.
பல்:
கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு:
கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறதாம்.

பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.