Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Wednesday, April 11, 2007

மனதைப் பாதித்த மரணங்கள்

மரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.

சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில் நடித்தவர்.டான்ஸ் ஆடுவதற்கான காலேயில்லாமல் டான்ஸ் ஆடியவர்.ஆக்ஸிடெண்டில் பறிபோன ஒற்றைக் காலுடன் டான்ஸ் ஆடி பலரின் கவனத்தையும் கவர்ந்தவர். இயக்குனர் கேயாரின் 'டான்ஸர்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்.அதுமட்டுமல்லாமல் ஐந்தாயிரத்திற்கும் மேல் 'ஸ்டேஜ் ஷோ'க்களில் ஆடியவர் இந்த மாதம் பரமக்குடியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவிற்கு ஆடப்போன இடத்தில் அவர் தங்கியிருந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பொது 'பேலன்ஸ்' தவறி விழுந்து இறந்து விட்டார்.
ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் அதே ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்யத் தோற்று மரணத்தை அழைத்த கொடுமையை என்னென்பது?

இன்னொரு அநியாய மரணம் 'செண்டூர்' வெடிவிபத்து.சாலையோர டீக்கடையில் நின்றவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் என என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே உயிர்விட்ட மக்கள்.எல்லவற்றிலும் தலை விரித்தாடும் அரசியல் சுயநலம் செல்வாக்கால் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அப்பாவிகளின் உயிர் குடித்த அவலம்.

படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட இத்தகைய கொடூர மரணங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நேரடிக்காட்சியாக ஒளிபரப்பப் பட்ட பாகனின் மரணம்.திருவிழாவுக்கான ஒளிபரப்பாக இருந்தாலும் இப்படியொரு கொடுமையைத் தொடர்ந்து படம் பிடித்த அந்தக் கொடுமையை என்ன சொல்வது.துணியைப்போல துவைத்துப் போடப்பட்ட அந்த பாகனின் அலறல் இன்னமும் ஒலிப்பதுபோல் இருக்கிறது.எதிர்பாராமல் நடந்த ஒன்று என்றாலும் அதை ஒளிபரப்பத்தான் வேண்டுமா?
இப்படி பல யானைகளை வைத்து விழா நடத்தும் இடத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.இந்த நிகழ்வுக்குப் பிறகே வன அலுவலர்கள் மயக்க மருந்தை துப்பாக்கியில் பிரயோகித்து மதம் கொண்ட யானையை அடக்கியிருக்கின்றனர்.
வீட்டில் வளர்க்கும் நாய்,பூனைகளே சில நேரம் கட்டுக்கடங்காத போது இத்தகைய பெரிய வனவிலங்குகள் நாட்டிற்குள் தேவையா? யானை ஒரு மங்களகரமான ,பூஜிக்க தக்க ஒன்றாகவே இருப்பினும் அதை வைத்துப் பராமரிப்பதும் பொது இடங்களில் அழைத்து வருவதும் தேவையா?
யானையோ,மாடோ,மயிலோ,மூஞ்சூறோ எது வேண்டுமானாலும் கடவுளின் அம்சமாக வாகனமாக இருக்கட்டுமே அவை அவை அவற்றின் இடத்தில் இருந்தால்தான் பாதுகாப்பு.
வனவிலங்கு சரணாலயங்களிலும் காட்டிலும் இருக்க வேண்டியவை அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட சூழலில் வசிப்பதும்,பல துன்புறுத்தல்களுக்கு உட்படுவதும் அவைகளை மூர்க்கமடைய வைக்கிறது.பக்தி இருக்க வேண்டியதுதான் அது இத்தகைய அவலங்களுக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

பாரதி தொடங்கி இந்த விபரீதம் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

Monday, March 05, 2007

ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்

ஆட்டக்கடிச்சி,மாட்டைக் கடிச்சி கடைசியிலே மனுஷனைக் கடிச்ச கதைன்னு சொல்றது போல
பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப் படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி,ஏத்துக்கூலி,வண்டி வாடகை ,எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர்.இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும் ,இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டு
வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளூ வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம்.இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை.எடை மோசடி,சுகாதாரமற்ற சூழல் மாறும்.விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்கு தேவையான முன்பணம் கொடுத்து,பின்னர் கொள்முதல் செய்கிறோம் என்வே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
சுத்தம்,சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதை கனவில்கூட நினைக்க முடியுமா?
சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில்,12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும் .இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது.மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம் .கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.

Monday, January 29, 2007

சத்தியத்தின் வயது நூறு

மகாத்மாகாந்திஜி தொடங்கிய சத்யாகிரக போராட்டத்தின் வயது நூறு.இதை இரண்டு நாள் விழாவாக இன்றும் நாளையும் தில்லியில் கொண்டாடுகிறார்கள்.
இதைப் போற்றும் முகமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று தீண்டாமை உறுதிமொழி எடுக்கப் பட்டது.
இந்நாளில் மார்ட்டீன் லூதர் கிங்கின் ஒரு கவிதை..இதோ

''சம வாய்ப்புக்கான கனவு
சொத்துக்கள் சமமாக பங்கீடு
செய்வதற்கான கனவு
ஒரு சிலர்மட்டுமே சுகபோகத்தில் வாழாதிருக்கும் கனவு
ஒரு மனிதனின் நிறங்கொண்டு
அவன் குணத்தை அளவிடாதிருக்கும் கனவு
நாட்டின் வளங்கள் அனைத்தும்
ஒரு சிலரின் உரிமையாகாமல்
மனுக்குல மேம்பாட்டிற்கான
கருவியாகும் கனவு
ஒவ்வொரு மனிதனும் மாண்போடும்
முழு ஆளுமையோடும் வாழ்வதற்கான கனவு
.... ..... ....... ....... ....... ....... ...... என்று
மக்களை பாகுபடுத்தாத கனவு.....
மார்ட்டின் லூதர்கிங்

Saturday, January 06, 2007

பால் அருந்தும் அன்னங்கள்

தமிழ்மணத்தில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது மனதில் தோன்றியது இந்தப் பதிவுக்கான கரு.
ஒரு ஊரில் தலை சிறந்த ஒரு ஓவியர் இருந்தாராம்.
அவருடைய ஓவியங்கள் பலராலும் இரசிக்கப்பட்டு வந்தன.
இருந்தும் அந்த ஓவியருக்கு தன் ஓவியங்களை எந்த அளவிற்கு மக்கள் இரசிக்கிறார்கள் என அறியும் ஆசை வந்தது.
தன்னுடைய மிகச் சிறப்பான ஓவியம் ஒன்றை நகரின் முக்கிய வீதியில் வைத்து அதன் அருகில்
"இந்த ஓவியத்தில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் கருதும் பகுதியை பச்சை வண்ணத்தின் மூலம் குறிப்பிடவும்"
என்று ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார்.
மறுநாள் ஓவியர் கடை வீதிக்கு வந்து பார்த்தபோது,ஓவியம் முழுவதும் பச்சை வண்ணமயமாக காணப்பட்டது.
சந்தோஷமடைந்தாலும்,ஓவியருக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை நன்றாக இல்லாத பகுதியை மட்டும் குறிப்பிட சொல்லியிருக்க வேண்டுமோயென்று.
மறுபடியும் அதே ஓவியத்தின் மற்றொரு பிரதியை அங்கு வைத்து,நன்றாக இல்லாத பகுதியை சிவப்பு வண்ணத்தில் குறிக்கும்படி ஒரு போர்டும் வைத்தார்.
மறுதினம் பார்க்கையில் முன்பு போலவே ஓவியம் முழுதும் சிவப்பு மையினால் மெழுகப் பட்டிருந்தது.
பிறகுதான் ஓவியர் உணர்ந்தார் மனிதர்களுடைய பார்வைகளும் கோணமும் இரசனையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதை.

இதைப் போலத்தான் இருக்கிறது தமிழ்மணப் பதிவுகளும் ,இரசனையும்.
இலக்கியம்,தமிழ் ,ஆன்மிகம்,ஈழம்,பெரியாரிஸம்,பார்ப்பனீயம்சினிமா,நகைச்சுவை கணிணி தொழில்நுட்பம்,சமையல்,அனுபங்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் பதியப்படுகின்றன.
பிடித்தவர்கள் பிடித்ததைப் படிக்கவோ பின்னூட்டம் இடவோ செய்யலாம்.
பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம்.
ஆனால் சில பதிவுகளில் ஆபாசமான்,தரக்குறைவான மூன்றாந்தர பின்னூட்டங்கள் வருகிறது.
குறைந்தபட்சம் பதிவர்களாவது அதை நீக்கி விடலாம்.அவர்களும் செய்வதில்லை ஏனோ?
இதை எழுதவோ,விமர்சிக்கவோ கூட எனக்கு அதிகாரம் இல்லைதான் ஏனெனில் அது அது அவரவர் விருப்பம்.
இருந்தாலும் மனதில் பட்டதால் சொல்கிறேன்
பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டுமே பருகுமாம் அன்னப் பறவை. அதுபோல எவ்வளவோ பதிவுகள் தினமும் பதிவிடப் படுகிறது.நமக்கு பிடித்ததை உடன்பாடானதை படிக்கலாம்.
மாறுபட்ட கருத்து இருந்தால் விமர்சிக்கலாம்,ஆனால் வரைமுறை மீறவேண்டாம் என்பது என் சொந்தக் கருத்து
[இதற்கு எத்தனை வசவு வருமோ]
அன்னியனாய்...தண்டிக்காமல் அன்னப் பறவையாய் இருப்போம்[இது சமுதயத்திற்கு அல்ல.தமிழ்பதிவுகளுக்கு மட்டுமே]