Friday, January 04, 2008

கீட்டாமைன்...விஷமாகும் போதைப் பொருள்



கீடாமைன் என்ற போதைப் பொருள் இப்போது இளைஞர்களிடையே பிரசித்தம்.
K அல்லது ஸ்பெஷல் K அல்லது காட் வாலியம் என்று சொன்னால்தான் தெரியும்.

K என்பது ஒரு போதை தரும் வேதிப் பொருள்.இது இயற்கையாக நீர்மநிலையில் இருக்கும்.
இதன் ஃபார்முலா C13H16NCLO ஆகும்

2-(-2குளோரரோஃபீனைல்)-2மெதைல் அமீன்-சைக்ளோஹெக்சே-1-னோன் என்பது இதன் வேதிப் பெயர்.
இதுதான் K ,Special K ,CAT VALIUM என்ற பெயர்களில் மற்ற போதை மருந்துகளுடன் அல்லது புகையிலையுடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளப் படுகிறது.

இது கண்டு பிடிக்கப் பட்ட போது கால்நடை மருத்துவத்தில் வலி நிவாரணியாகவும் மயக்கமூட்டும் பொருளாகவும் பயன் படுத்தப் பட்டது.

பிறகு மருத்துவத் துறையிலும் மயக்கம் கொடுக்கப் பயன் படுத்தப் படுகிறது.
இது மிக மெதுவாக வினை புரிந்து நரம்பு மண்டலத்தை உணர்விழக்கச் செய்வதால் விபத்து போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் முன் மருத்துவ குறிப்பு ஏதும் தெரியாத சூழ்நிலைகளில் பாதுகாப்பான மயக்க மூட்டியாகக் கருதப் படுகிறது.

இப்போதோ இந்த வேதிப் பொருள் தரும் போதைக்காக இது 'கிளப் டிரக்'என்ற பெயரில் மரிஜுவானா,ஹெராய்ன் போன்ற வற்றோடு சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இயற்கையில் திரவநிலையிலிருக்கும் இது ஆவியாக்கப் பட்டு வெண்மை நிற பொடியாகக் கிடைக்கிறது.
பொடியாகக் கிடைப்பது குடிக்கும் பானங்களில் கலந்து அத்துடன் ஜுர மாத்திரையையும் கலந்து போதை பொருளாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

திரவ நிலையில் இது ஊசி மூலம் போதைக்காக உட் செலுத்தப் படும் போது மருந்து முழுவதும் செலுத்தப் படுவதற்குள்ளேயே மயக்கம்,தள்ளாடுதல் போன்ற நிலைக்கு உட்பட நேரிடும்.

இந்த போதைப் பொருள் தரும் உச்ச கட்ட போதை 'கே ஹோல்['K Hole ]அதாவது
உடல் வேறு உயிர் வேறாக பறப்பது போன்ற மெய்மறந்த போதைத் தருவதாலேயே இதை நாடும் இளைஞர்கள் இதனாலேற்படும் பின் விளைவுகளை யோசிப்பதில்லை.

இது போதையை ஏற்படுத்து மாயினும்,மனச்சிதைவு,மூளை கலங்கிய நிலைக்கும் ஆளைத் தள்ளிவிடும்.நரம்பு மண்டல பாதிப்புகளோடு சிறுநீர்ப்பை பிரச்சினை,ஹார்மோன்கள் பாதிப்பால் விநதணு குறைபாடுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இந்த மருந்தை முயற்சித்த சில இளைஞர்கள் மரணத்தைத் தழுவியும்,சிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும் ஆகியுள்ளனர்.

மன அழுத்தம்,வேலைப் பளுவினால் அமைதி நாடும் இளைஞர்கள் அறியாமையாலும் அந்த சில மணி நேர போதைக்காகவும் மரணத்தைத் தழுவாமல்,மனச் சிதைவுக்கு ஆளாகமல் இருக்க வேண்டும்.
இசை,ஓவியம்,நடனம் போன்ற வேறு பல ஆக்கபூர்வ கலைகளில் மனதைச் செலுத்தி அமைதி காண முயல வேண்டும்.