Wednesday, December 27, 2006

கனவின் வண்ணங்கள் நூறு

சமீபகாலமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'அஞ்சலி' என்ற தொடரின் 'டைட்டில்' பாடல்வரிகள் இவை.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பது:
"எப்போதும் கனவின் வண்ணம்
கருப்பு வெள்ளைதான்
கனவுக்கு நிறங்கள் இல்லைதான்
நான்காணும் கனவு மட்டும் ஏழு வண்ணம்தான்
சமயத்தில் நூறு வண்ணம்தான்''
நான் மிகவும் ரசித்துக்குக் கேட்கும் வரிகள்.எத்தனை அர்த்தப் பொதிவுகள்.வாழ்க்கையே நம் கனவுகளில் தானே மையம்கொண்டிருக்கிறது.நேற்றைய கனவு இன்று பொய்த்துப்போனாலும் நாம் நாளைய கனவில் மிதந்து கொண்டுதான் இருக்கிறோம்.
கனவுகள் நம் இலட்சியத்தின் கதவுகள் என்றால் ந்ம் முயற்சிகள் தான் அதன் திறவு கோல்.அதனால் தான் நம் குடியரசு தலைவர்கூட இளைஞர்களை கனவு காணச் சொன்னார்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் தேர்வு தோல்விகளுக்கும்,காதல் தோல்விகளுக்கும் தம் வாழ்வை பணயம் வைக்கிறார்கள்.
தங்க மெடல் வாங்கி படிப்பில் முதலிடம் வந்தவர்கள் அரசாங்க பதவியில் கீழ்நிலையிலும்,தோற்று பின் ஜெயித்தவன் அதைவிட உயர்ந்த பொறுப்பிலும் இருக்கும் பல சாட்சியங்கள் என்னிடம் உண்டு.ஏன் நீங்களே கூட அறிந்திருக்கலாம்.
குடும்ப பிரச்சினைகள்,காதல் தோல்விகளை எதிர் கொள்ள முடியாமல் மாண்டுபோவோர் எண்ணிக்கை அதிகரித்திக் கொண்டேதான் இருக்கிறது.
தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான்.சறுக்கியவன் மீண்டும் எழுவதும் நடப்பதும் தானே நியதி.தோல்வியைக் கண்டு துவளாமல் எங்கு தவறினோம் என்பதை நேர் செய்தால் அடுத்து வெற்றி மேல் வெற்றிதான்.
கனவுகள் காண்போம் அது ந்னவாகும் வரை.......

Monday, December 25, 2006

புத்தாண்டே வருக! பொலிவுடனே வருக!!வருக2007

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி,எதிர்பார்ப்பு,நம்பிக்கை.
பழைய ஆண்டின் விரும்பத்தகாத நிகழ்வுகளோ,கசப்போ இந்த ஆண்டும் தொடரக்கூடாது என்பதே அனைவரின் தலையாய விருப்பமாக அமையும். பழைய ஆண்டைவிட இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
புத்தாண்டு பிறப்பின் வரலாறு பலவாறாகக் கூறப்படுகிறது.
பூத்துக் குலுங்கும் மலர்கள்,செழித்து விளைந்த பயிர்கள்,பழுத்துத் தொங்கும் கனிகள் யாவும் வசந்தத்தின் வரவுக்கு கட்டியம் கூறும் காலமே ஒரு புதிய ஆண்டின் துவக்கமாக கருதப்பட்டு வந்தது.பின்னாளில் வருடத்தின் துவக்கமாக ஜனவரி1 புத்தாண்டு தினமானது.பழமையை விடாது ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை கேலி செய்து வந்ததுதானாம் 'முட்டாள்கள் தினம்' .
பண்டைய நாட்களிலேயே புத்தாண்டு பல நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது.
வட்டவடிவ பொருட்களை உண்பது ,பயன்படுத்துவது ஆண்டின் முழுமையைக் குறிப்பதாகவும்,முட்டை கோஸின் இலைகள் பணத்தாள்களை போல செல்வ செழிப்பைக் குறிப்பதாகவும் நினைத்தனர்.நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களை உண்பதும்,அரிசி சோறும் கூட அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப் பட்டது.
இன்றைய காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம்?
புது வருடத்துவக்கத்தில் கிடைக்கும் அத்துனை அதிர்ஷ்டமும் ஆண்டு முழுதும் நிலைக்க வேண்டும் என்று விரும்புவோம்.ஆடை அணிகலன்கள்,தள்ளுபடி எனக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் தெரிந்தே ஏமாறும் நாம் வாங்கும் பொருட்கள் என ஒவ்வொரு புது வருடமும் நல்ல துவக்கமாகவே இருக்கும்.
வாழ்த்துக்களுக்கும் ,வாழ்த்து அட்டைகளுக்கும் முன்னுரிமை இருந்த போதிலும்,கை பேசி குறுஞ்செய்திகளும்,,ஈ கார்டு வாழ்த்துக்களும்,மின்னஞ்சல்களும் அவற்றை புறம் தள்ளி முன்னிற்கும்.
இவையனைத்துக்கும் மேலாக தங்கள் அபிமான நடிகர்களின் திரைப்படவெளியீடும் அதை அன்றே பார்ப்பதுதான் தன் பிறவிப்பயன் என்போரும் உண்டு
நள்ளிரவு பார்ட்டிகள்,டிஸ்கொதெ போன்ற மேல்நாட்டு கலாச்சாரமும் நாம் விட்டு வைப்பதில்லை.
இத்துடன் அவரவர் வசதிக்கு ஏற்ப குடும்பத்தினருக்கோ,காதலருக்கோ,நண்பர்களுக்கோ உயர் அதிகாரிகளுக்கோ நம்மால் முடிந்தபரிசளிப்புகளும் உண்டு.
இந்த கோலாகலங்கள் முடிந்த பிறகு பெரும்பாலனோர் மனதில் எடுக்கும் தீர்மானம் இந்த வருடத்திலிருந்து ஒழுங்காக 'டையரி' எழுத வேண்டும் என்பது.
தீவிரமாக எழுத ஆரம்பிப்போம் ஆனால் எத்தனை நாள்வரைஎன்று நமக்கே தெரியாது.வருடம்365 நாட்களும் தவறாது யாரேனும் எழுதி இருந்தால் சொல்லுங்கள் தலை வணங்குகிறேன்
இது போகட்டும் இந்த 'புது வருட தீர்மானங்கள்' எப்படி?
இந்த வருடம் முதல்,அதைச்செய்யமாட்டேன்[குடி,புகை]
இதை தவறாமல் செய்வேன்[டையரி] போன்ற
சில 'தீய விட்டொழித்தல்களும்' பல நல்ல 'ஆரம்பித்தல்களும்' அரசியல்வாதிகளின் வாக்குறுதியாய்த்தானே போகின்றன.
ஒவ்வொரு வருடமும் நாம் வாங்கும் டைரியில் சில பக்கங்களே எழுதப்பட்டு பின் பிள்ளைகள் கிறுக்கவோ,வீட்டம்மா பால்,சலவை கணக்கு எழுதவோ பயன்பட்டு வருட முடிவில் பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைகிறது. நானும்
ஒருமுறை வருட கடைசியில் இப்படி எழுதினேன்:
"வீணாய்ப் போனது டைரியின் தாள்கள் மட்டுமில்லை
என் வாழ்க்கையின் நாட்களும் தான்"
எனக்கு நேரமே கிடைப்பதில்லை என்ற பிரம்மாஸ்திரம் உள்ளவரை நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
போனது போகட்டும்...இதுவரை
வாருங்கள் இனி என்னசெய்யலாம் இந்த புத்தாண்டிலிருந்து என்று யோசிப்போம்.
சின்ன சின்னதாக நம்மால் முடிந்தவரை...
நம் குடும்பத்தாருக்கு...
நம் நண்பர்களுக்கு......
நம் அண்டை அயலாருக்கு...
நாம் வாழும் ஊருக்கு.....
நம் நாட்டுக்கு......
இயற்கையை காக்க சுற்று சூழலுக்கு.......
எடுப்போமே புது தீர்மானங்களை இந்த புது ஆண்டிலிருந்து.......

Friday, December 22, 2006

ஒரு புதிய இணைப்பு பதிவு

ஒரூ புதிய இணைப்பு பதிவாக இந்த 'பிரார்த்தனை நேரம்'
தொழில் நுட்பம் தெரியாததால் என் பதிவிலேயே இணைத்து உங்களை அழைக்கிறேன்
அன்புடன் கௌசி

Tuesday, December 19, 2006

பதக்கப் பறிப்பின் பின்னணி....

இரண்டு நாட்களாக மனதை குடைந்த கேள்விக்கு இன்று விடை தேடிக் கண்டுபிடித்தேன்.
பாலினப் பிரச்சினையில் சாந்தியின் பதக்கம் பறிப்பு என்றதும் தாங்க முடியாத கோபம்தான் வந்தது.
ஒருவர் ஆணோ,பெண்ணோ அது தீர்மானிக்கப் படுவது பிறப்பின் மூலம் தானே இதில் சாந்தியின் தவறென்ன என்று ஆராய முனைந்தேன்.
ஒலிம்பிக் விளையாட்டுக்ளில் பெண்கள் பங்கேற்க தொடங்கிய காலத்திலிருந்தே இந்த 'பாலின தெரிவு சோதனை"யும் தொடங்கி விட்டது
பெண்கள் மட்டுமே பங்கு பெறும் விளையாட்டுகளில்,கள்ளத் தனமாக பெண் போல் நுழைந்து வாகை சூடும் தந்திரத்தை ஆண்கள் கையாண்டதே இந்த 'சோதனை' உருவாக கருவாக அமைந்தது.
1912 மற்றும்1936 களில் பேசப் பட்டாலும் முதன் முதலில் 1966 ல் தான் தீவிரமடைந்தது.
அந்த கால கட்டத்தில் மிகவும் மோசமான நடைமுறைகள் கையாளப் பட்டது.
பெண் மருத்துவ வல்லுனர்கள் முன்பாக நிர்வாண அணிவகுப்பு முறை அத்துடன் நேரிடையாக பிறப்புறுப்பை பரிசோதித்தல்
பின்னாளில் இம்முறைகள் கைவிடப் பட்டு,1968 ல் நடைபெற்ற மெக்சிகோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிவியல் பூர்வமான சோதனை நடத்தப் பட்டது.
வாயின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை [sample tissues taken from the inner layers of the cheeks]பரிசோதனை முறை
[Buccal smear test] அமுல் படுத்தப் பட்டது.பாலூட்டிகள்[MAMMALS] அனைத்தும்
[மனிதன் ஒரு பாலூட்டி வகை நன்பதை கருத்தில் கொள்க]
குரோமசோம் அடிப்படையிலேயே ஆண்,பெண் என்று வகைப்படுத்தப் படுகின்றன.
XX வகை குரோமசோம் பெண்ணுக்கென்றும்
XYவகை குரோமசோம் ஆணுக்கென்றும் உள்ளது.
இதில்'பெண்மை' பரிசோதனைக்கு உட்படும் வீராங்கனைகள் Y வகை கொண்டிருந்தால் ஆண் தன்மையுடையவர்களாக கருதப் படுகிறனர்.70,80களில் இது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வந்தது.ஏனெனில் இது ஒரு 'ந்ம்பிக்கைக்குகந்த' சோதனையாக கருத முடியாத நிலை.பிறப்பிலேயே இந்த 'குரோமசோம்கள் [மரபணுக்கள்] குறைபாடு உள்ளவர்கள் இந்த சோதனை முடிவில் ஆணாக[பாலின தோல்வி] கருதப்படும் வாய்ப்பு அதிகம் கொடுமை என்னவென்றால்,ஒரு பெண் பாலின் சோதனையில் தோற்றால்[ Y வகை கொண்டிருந்தால்]மொத்தமாக போட்டியிலும் தோல்வி
ஆனால் ஒரு ஆண் பாலின சோதனையில் தோற்றாலும் போட்டியில் தோல்வி இல்லை.
1991 வரை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மகளிர் தங்கள் புகைப்படத்துடன் IOC யால் பரிந்துரை செய்யப்பட்ட பாலின தெரிவு சோதனைக்கான அட்டை சமர்ப்பித்தல் வேண்டியிருந்தது.
இந்த BUCCAL SMEAR நம்பகமானது இல்லை என்று கருதப் பட்டதால்,1992 பார்சிலோனாவில் ந்டைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்,நுட்பமான ஒரு அறிவியல் முறை செயல்படுத்தப் பட்டது.
POLYMERASE CHAIN REACTION [PCR] எனப்படும் Y குரோமோசோம்களில் உள்ள DNA பற்றி ஆராயும் ஒரு மரபணு சோதனை நடத்தப் பட்டது.தலைமுடியின் உரோமக்கால்களில் சுரக்கும் ஒருவித சுரப்பு மூல்ம் Y குரோமசோம் உள்ளதா
என சோதிக்கப்பட்டது.
ஆயினும் மீண்டும் 1996 ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் மறுபடியும் 'பக்கல் ஸ்மியர்' நடத்தப் பட்டது.
ஆண்களின் கள்ளத்தனத்தால்,இந்நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க,தொடர்ந்த கடுமையான பயிற்சிகள் மூலமாகவோ அல்லது பிறவிக்கோளாறு காரணமாகவோ மரபணு குறைபாடு கொண்டவ்ர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதும்,பதக்கங்கள் ப்றிக்கப் படுவதும் எந்தவிதத்தில் நியாயம்.?உருவளவில் பெண்ணாகவும் மரபணு குறைபாட்டால் ஆணாகவும் கருதப்படும் அவலம் என்று மாறும் ?இதற்கு தீர்வுதான் என்ன?
உடம்பில் ஏற்படும் 'ஹார்மோன்' கோளாறுகளால் முகத்தில் முடிமுளைத்து காண்ப்படும் பெண்கள்,அதே ஹார்மோன் பிரச்சனையால் மார்பு பெருத்தும் பெண் குரல் உள்ள ஆண்கள் இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
சரி சர்வதேச அளவில் ந்டை பெறும் ஒலிம்பிக் போட்டிக்குத்தான் இந்த நெறி முறைகள் என்றால்,இரயில்வே துறையில் பணிக்கு விண்ணப்பித்த் 'இதே சாந்திக்கு' ஏன் வாய்ப்பு ம்றுக்கப் பட்டது?
ஆணாகவும் கருதாமல், பெண்ணாகவும் கருதாமல் இவர்களை என்னவென்பது?மானிடர்கள?இல்லை மாக்களா?
இப்போது புரிகிறது..மானிடராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திட வேண்டும் என்று ஏன் சொன்னார்கள் என்பது...
இப்போது அதையும் திருத்தி...மகளிராய் பிறப்பதற்கும் நல்ல மா தவம் செய்தே ஆக வேண்டும்

Saturday, December 16, 2006

ரசிகர் மன்றங்கள் தேவையா???

வெகு நாட்களாகவே எனக்குள் உள்ள ஒரு கேள்வி ரசிகர் மன்றங்கள் தேவையா என்பது.
ஒரு பாரதிக்கோ,பாரதி தாசனுக்கோ,வள்ளுவருக்கோ ரசிகர் மன்றங்கள் இருந்திருந்தால்,இந்த கேள்வி எழும்பி இருக்காது.
இன்று நாட்டில் ரசிகர் மன்றம் யாருக்கு நடிகர்களுக்குத்தானே?
ஒரு நடிகர் என்பவர் யார்?ஒரு தொழிலாளி!
ஒரு இராணுவ வீரர்,ஒரு வக்கீல்,ஒரு டாக்டர்,ஒரு ஆசிரியர்,ஒரு அலுவலக ஊழியர் போல் அவரும் ஒரு தொழில் செய்பவர்.
தன் நடிப்பால்,தனித்தன்மையால் மக்களை வசீகரிப்பவர்.
அவர்கள் நடிப்பை இரசிக்கலாம்,ஆராதிக்கலாம் தப்பில்லை.
ஆனால்,அவர்கள் துதி பாட மன்றங்கள் ஏன்?
எல்லையில் போர் புரிந்து சாகசம் புரிந்த அல்லது புரிந்து கொண்டு இருக்கும் ஒரு இரணுவ வீரருக்கு ரசிகர் மன்றம் உண்டா?
மருத்துவத் துறையில் சாதித்து பல உயிர்களைக் காத்து தெய்வம் போல் இருக்கும் மருத்துவருக்கு உண்டா?
வருங்கால சமுதாயம் எனப்படும் மாணவகளை உருவாக்கும் சிறந்த ஆசிரியர் பலர் உண்டு.அவர்களில் யாருக்கேனும் மன்றம் உண்டா?
தமிழ்,இலக்கியம்,அறிவியல்,பொருளாதாரம் என பல்துறை சாதனையாளருக்கு ரசிகர் உண்டா?மன்றம் உண்டா?
70 ,80 களில் நடிப்பால் சாதித்து இமயமாய் இருந்தவர் பலர்.
மேற் சொன்ன துறைகளில் உழைத்து ஒருவர் தன் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாததை,
கோடி,கோடியாய் ஒரே படத்துக்கு ஊதியமாய் பெறும் நடிகர்கள்
என்ன சாதிக்கிறார்கள்?
நல்ல் நடிகரைப் பிடிக்கும்,நல்ல நடிப்பை உற்சாகப் படுத்துவோம்
தவறில்லை ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டாமே
"உலகின் எட்டாவது அதிசயமே"
21 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகமே"
ஆணை இடு தலைவா செய்து முடிக்கிறோம்"
உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு"
இது போன்ற புதுமை தலைப்புகளை போட்டியிட்டு,போஸ்டர் அடித்து தன் அபிமான நடிகரின் பிற்ந்த நாள் கொண்டாடும் ரசிகன் தன் குடும்பத்தாரின் பிறந்த நாள் அறிந்திருப்பானா சந்தேகமே
பொண்டாட்டி,பிள்ளையின் நகையை அடமானம் வைத்து,சர்க்கரைப் பொங்கல் வைப்பான் ,அந்த நடிகரோ வெளி நாட்டில் தன் குடும்பத்தோடு பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்.
நான் நடிகர்களை குற்றம் சொல்லவே மாட்டேன்.கண்மூடித்தனமாய் தனிமனித ஆராதனை செய்யும் நம் மடத்தனத்தை சாடுவேன்.
நடிகையா கோயில் கட்டச் சொன்னார்?நாமல்லவோ செய்தோம்.
செய்யும் தொழிலை மதிப்போம்,அவர்தம் நற்பண்புகளை போற்றுவோம் ,தனி மனித ஆராதனையை நிறுத்துவோம்.இன்றைய கால் கட்டத்தில்
ரசிகர் மன்றங்கள் எல்லாம் அரசியல் நோக்கோடுதான் செயல்படுகின்றன.
ஓட்டுப் போடுவது தனிமனித உரிமை.இன்னாரை ஆதரிக்கிறேன் என்று சொல்வது மறைமுகமாகமாக இன்னாருக்கு போடச் செய்யும் தூண்டுதல் அல்லவா?
ரத்த தானம்,கண் தானம் செய்யும் மன்றங்களும் உண்டு என்பதை மறுப்பது முறையாகாது.
இருப்பினும் பொதுச் சேவையை தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யலாம் அதற்கு மன்றங்கள் தேவை இல்லை.
அனைவரும் சமமே.
உழைப்பும்,ஊதியமும் மாறலாம்.ஆனால் சுய தன்மையை விட்டுக் கொடுத்து தனி மனித துதி தேவையா?சிந்திப்போம்.

Thursday, December 14, 2006

இதுவும் ஒரு கட்டிப்புடி வைத்தியம்

வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய சந்தோஷம் தரும்
வசூல் ராஜா M.B.B.S B படத்தில் கமல் கட்டிப்புடி வைத்தியம் செய்வார்.ஹாஸ்பிட்டல் சுத்தம் செய்யும் தொழிலாளி மனம் உருகி சந்தோஷப்படுவார்.
அது போல இன்னுமொரு சின்ன விஷயம்[வைத்தியம்] நினைவு கூர்தலும் வாழ்த்துதலும்
நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள்,உறவினர்கள் பிறந்த நாள்,திருமணநாள்,மேலும் பல முக்கியமான நாட்கள் நினைவு கூர்ந்து வாழ்த்துங்கள் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள்
ஒவ்வொரு வருடமும் நான் பணிக்கு சேர்ந்த நாளை என் சக ஆசிரியர் நினைவு கூர்ந்து வாழ்த்தும் போதும் என் மாணவ்ர்கள் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லும் போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.
என் வீட்டில் வேலை செய்த பிள்ளைக்கு ஒருநாள் இனிப்பு தந்து வாழ்த்தினேன் ."அக்கா இன்று என்ன ? என் பிறந்தநாள் கூட
எனக்கே தெரியாதே" என்றாள்.
இருக்கட்டுமே இன்று நீ எங்கள் வீட்டுக்கு வந்த நாள் என்றதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு விலையே இல்லை
நான் இன்னும் கொஞ்சம் ஓவரான 'லொல்லு பார்ட்டி'.
எங்கள் வீட்டு செல்ல நாய்க்குட்டி ஸாரி...ஜீனோ அவன் பெயர்[சுஜாதாவின் என் இனிய இயந்திரா ஜீனோ வால் ஈர்க்கப்பட்டு வைத்த பேர்].அவன் பிறந்த நாள் கூட ஞாபகப்படுத்தி மகழ்வேன்
என்னுடன் பணிபுரியும் நண்பர்கள்,உறவினர்,அண்டை அயலார்
இவர்களை வாழ்த்தும் போது உருகித்தான் போவார்கள்.
இந்த உளவியல் ரீதியான அணுகுமுறையை நான் எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை.என் மாமியாரிடமிருந்துதான்
கற்று அறிந்தேன்.வாழ்த்துதல் மட்டும் அல்ல் வாழ்த்தப்படுதலும் உற்சாகப் படுத்தும்.முக்கியமாக 'நினைவு கூர்தல்' அவர்களே மறந்து போனதை நாம் ஞாபகத்தில் கொண்டு வாழ்த்தும் போது அவர்கள் எத்தனை மகழ்ச்சி அடைகிறார்கள். பணம் காசு செலவு பண்ண வேண்டாம் உங்கள் மீது அக்கறை இருக்கு நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று காட்டுவது கோடி கொடுப்பதற்கு சமம்.
பிற்கென்ன 'கௌசி ஆன்ட்டி'யை எல்லோருக்கும் பிடிக்கும் இரகசியம் தெரிந்து விட்டதா?

Monday, December 11, 2006

கனவு மெய்ப்படுமா???

பாரதியின் பிறந்தநாள் இன்று..

வருடத்தில் ஒரு முறை மட்டுமே நினைவிற்கு வரும் நாட்கள் சில..
டிசம்பர் 11 பாரதியும்
அக்டோபர் 2 காந்தியும்
நவம்பர் 14 நேருவும்
செப்டம்பர் 15 பெரியாரும்,அண்ணாவும்
வருடம் ஒருமுறை மட்டுமே நினைக்கப்படுவார்கள்.
விடுமுறைக்காக அம்பேத்கார்,காமராசர் போன்றோர் பிறந்த நாட்களும்,
சுதந்திர தினமும்,குடியரசு தினமும் நினைவு கோரப்படும்
இல்லையென்றால்,இந்த அவசர யுகத்தில் என்றோ மறந்திருப்போம்
சரித்திர பாடத்தில் பார்க்காவிட்டால்,அவர்தம் முகம் கூட நினைவிருக்காது நமக்கு...
சூப்பர் ஸ்டார்,சுப்ரீம் ஸ்டார்,இளைய தளபதி,காதல்மன்னன்,அல்டிமேட் ஸ்டார்களின் பிறந்த நாட்களை கொண்டாடவும்,கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யவே நம் மக்களுக்கு நேரம் போதவில்லை பாவம்...
இதில் பாரதி கனவு நனவாகும் என்று கனவு காண்கிறோம்....
நல்ல கூத்து போங்கள்.......

Thursday, December 07, 2006


வாழ்க்கையை சற்றே திரும்பி பார்ப்போமா......
நேற்று என்ன சாதித்தோம்.....சொல்லும்படி ஏதும் இல்லையா?
போகட்டும்......நாளை பார்த்துக்கொள்வோமா?
நாளை நிச்சயமா?....நண்பனே.....
இன்றே செய்வோம் நம்மால் முடிந்ததை...
பாலம் கட்ட உதவிய குட்டி அணில் போல...
சிறியதோ...பெரியதோ...இன்றே தொடங்குவோமே..

Wednesday, December 06, 2006

ஓர் கவிதை


ரோஜாவுடன் ஓரு நாய்ககுட்டி
அதன் அழகும் மணமும் புரியாமலே
முட்களை மட்டும் உணருமோ
மனிதன் கையில் வாழ்க்கையும் அப்படியே
அன்பு நட்பு தியாகம் புரியாமல்
வலிகள் மட்டும் அறிகிறோம்
வாழ்ககையை வெறுக்கிறோம்
மாறுவோமே-------