Wednesday, April 11, 2007

மனதைப் பாதித்த மரணங்கள்

மரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.

சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில் நடித்தவர்.டான்ஸ் ஆடுவதற்கான காலேயில்லாமல் டான்ஸ் ஆடியவர்.ஆக்ஸிடெண்டில் பறிபோன ஒற்றைக் காலுடன் டான்ஸ் ஆடி பலரின் கவனத்தையும் கவர்ந்தவர். இயக்குனர் கேயாரின் 'டான்ஸர்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்.அதுமட்டுமல்லாமல் ஐந்தாயிரத்திற்கும் மேல் 'ஸ்டேஜ் ஷோ'க்களில் ஆடியவர் இந்த மாதம் பரமக்குடியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவிற்கு ஆடப்போன இடத்தில் அவர் தங்கியிருந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பொது 'பேலன்ஸ்' தவறி விழுந்து இறந்து விட்டார்.
ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் அதே ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்யத் தோற்று மரணத்தை அழைத்த கொடுமையை என்னென்பது?

இன்னொரு அநியாய மரணம் 'செண்டூர்' வெடிவிபத்து.சாலையோர டீக்கடையில் நின்றவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் என என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே உயிர்விட்ட மக்கள்.எல்லவற்றிலும் தலை விரித்தாடும் அரசியல் சுயநலம் செல்வாக்கால் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அப்பாவிகளின் உயிர் குடித்த அவலம்.

படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட இத்தகைய கொடூர மரணங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நேரடிக்காட்சியாக ஒளிபரப்பப் பட்ட பாகனின் மரணம்.திருவிழாவுக்கான ஒளிபரப்பாக இருந்தாலும் இப்படியொரு கொடுமையைத் தொடர்ந்து படம் பிடித்த அந்தக் கொடுமையை என்ன சொல்வது.துணியைப்போல துவைத்துப் போடப்பட்ட அந்த பாகனின் அலறல் இன்னமும் ஒலிப்பதுபோல் இருக்கிறது.எதிர்பாராமல் நடந்த ஒன்று என்றாலும் அதை ஒளிபரப்பத்தான் வேண்டுமா?
இப்படி பல யானைகளை வைத்து விழா நடத்தும் இடத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.இந்த நிகழ்வுக்குப் பிறகே வன அலுவலர்கள் மயக்க மருந்தை துப்பாக்கியில் பிரயோகித்து மதம் கொண்ட யானையை அடக்கியிருக்கின்றனர்.
வீட்டில் வளர்க்கும் நாய்,பூனைகளே சில நேரம் கட்டுக்கடங்காத போது இத்தகைய பெரிய வனவிலங்குகள் நாட்டிற்குள் தேவையா? யானை ஒரு மங்களகரமான ,பூஜிக்க தக்க ஒன்றாகவே இருப்பினும் அதை வைத்துப் பராமரிப்பதும் பொது இடங்களில் அழைத்து வருவதும் தேவையா?
யானையோ,மாடோ,மயிலோ,மூஞ்சூறோ எது வேண்டுமானாலும் கடவுளின் அம்சமாக வாகனமாக இருக்கட்டுமே அவை அவை அவற்றின் இடத்தில் இருந்தால்தான் பாதுகாப்பு.
வனவிலங்கு சரணாலயங்களிலும் காட்டிலும் இருக்க வேண்டியவை அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட சூழலில் வசிப்பதும்,பல துன்புறுத்தல்களுக்கு உட்படுவதும் அவைகளை மூர்க்கமடைய வைக்கிறது.பக்தி இருக்க வேண்டியதுதான் அது இத்தகைய அவலங்களுக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

பாரதி தொடங்கி இந்த விபரீதம் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

Sunday, April 08, 2007

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா???

கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை..
இன்னார்க்கு இன்னாரென்று
எழுதி வைத்தானே தேவன் அன்று..
இது கமல் ஒரு படத்தில் பாடும் பாடல்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது பழைய வழக்கு.
சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,மண்டபத்திலோ கோயிலிலோ உறுதிபடுத்தப் பட்டு நீதிமன்றங்களில் முடிவுக்கு வருகின்றன என்பது இன்றைய நடைமுறை.

முன்பெல்லாம் திருமணம் பால்யத்திலே செய்யப்பட்டு பெண்கள் வயதுக்கு வரும்வரை பிறந்த வீட்டிலிருந்துவிட்டு பூப்பெய்திய பின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.

இன்னாளில் பால்ய விவாகங்கள் இல்லையென்றாலும் , சிதம்பரத்து தீட்ஷிதர் குடும்பங்களில் சபையில் பூஜை செய்யும் தகுதி வேண்டி இன்னமும் நடைமுறையில் உள்ளது.

இப்போதெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களில் எழுதும் அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. திருமணச் சடங்குகளும் பல வழிகளில் முற்போக்குச் சிந்தனையுடன் மாற்றம் கண்டிருக்கின்றன.

முன்பெல்லாம் பெற்றவர் நிச்சயித்து பெரும்பாலும் அத்தை,மாமன்வழி உறவுகளிலேயே திருமணம் முடிப்பர்.பெண்கள் திருமணம்வரை மாப்பிள்ளை முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.என் உறவுக்கார பாட்டியைப் பற்றி கிண்டலாகச் சொல்வார்கள்,'பாட்டி தாத்தா முகத்தக் கூட நேரா பார்க்கமாட்டாள் ஆனாலும் பத்து புள்ளை பெற்றுவிட்டாள்' என்று.

அதற்குப் பிறகு காதல் திருமணங்கள் பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியபோதும் பரவலாக வரவேற்கப்பட்டே வந்திருக்கிறது.காதலில்தான் இப்போது எத்தனைவகை.
பார்த்த காதல்,பார்க்காத காதல் ,கேட்ட காதல்,கேட்காத காதல் ,போன் காதல்,இண்டெர்நெட் காதல் என்று பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.

நிச்சயிக்கப்பட்டதோ அல்லது காதல்வகைப் பட்டதோ
அந்த திருமண முறைகளில் எத்துணை முன்னேற்றம்.

பத்து நாள் நடக்கும் கல்யாண கலாட்டக்கள் இப்போது அரிது.எழுத்தாளர் சாவியின்'வாஷிங்டனில் திருமணம்' படித்தவர்கள் அதன் அருமை பெருமைகளை அறிவர்.
இப்போது இரண்டே நாள். முதல்நாள் ரிசப்ஷன் மறுநாள் கல்யாணம் மூன்றாம் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் அமெரிக்காவில் என்றாகிவிட்டது.

சாத்திர சம்பிரதாயங்களோடு செய்யப்படும் திருமணங்கள்

சீர்திருத்த முறைப்படி மந்திரம் ஓதாமல் பெரியவர்கள் ஆசியுடன் செய்யப்படும் திருமணங்கள்

வாழ்க்கைத்துணை ஒப்பந்த என்ற முறைப்படி மணமக்கள் திருமண உறுதிமொழி எடுத்து செய்யப்படும் தமிழர் திருமணமுறைகள்

இரண்டே இரண்டு சாட்சிக் கையெழுத்துக்களுடன் நடத்தப்படும் பதிவுத் திருமணங்கள்

இப்போது புதிதாக இன்னொரு புரட்சியாக வந்திருக்கும் 'டைனமிக்'திருமணச் சடங்குகள் [மாப்பிள்ளை வீட்டார்,மணப்பெண் வீட்டார் அனைவரும் வயது வித்தியாசமின்றி கட்டி அணைத்து உறவு பாராட்டுவதுதான் 'டைனமிக்கின் சிறப்பம்சம்']

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல இன்னொரு புதிய திருமணக் கலாச்சாரம்
ஆரம்பித்திருக்கிறது.

அதுதான்'லிவிங் டுகெதர்' முறை.

திருமணம் செய்யாமலே ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழும் முறை.ஒரு வயது வந்த பெண் ஆடவருடன் பேசினாலே கதைகட்ட காத்திருக்கும் இந்த சமுதாயத்தில் 'லிவிங் டுகெதர்' என்பதற்கு மிகுந்த மனத்திண்மை வேண்டும்.மேல் நாடுகளில் இது சர்வசாதாரணமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் இது இன்னமும் ஏற்புடையதல்ல.

இருப்பினும் அங்கொன்று இங்கொன்றென சிலர் அவ்வாறு வாழ்கின்றனர்.சமீப காலத்தில் ஒரு சின்னத்திரை ஜோடி [ராஜ் கமல்-பூஜா] இது பற்றி பேட்டியும் கொடுத்திருந்தனர்.

அனைவருக்கும் பரிச்சயமான இன்னொரு மூத்த கலையுலக ஜோடி
கமல்-கௌதமி.இருவரும் இருவரின் பிள்ளைகளோடும் ஒன்றாய் வாழ்வதைப் பார்க்கும்பொது எப்போதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

'உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும்
நம் பிள்ளைகளோடு
விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'

திருமண பந்தம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதல்ல பிரச்சினை.நிச்சயிக்கப்பட்ட பந்தமோ
காதல் திருமணமோ,தாலிகட்டாத சீர்திருத்த கல்யாணமோ அல்லது ல்விங் டுகெதர் முறையோ எதுவாயினும் தம்பதியர் எவ்வாறு வாழ்கின்றனர்.தம் மணவாழ்வில் திருப்தியடைகின்றனரா?கருத்தொருமித்து அனுசரித்துப் போகின்றனரா
என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
எத்தனைச் சீக்கிரம் ஒரு பந்தம் உருவாகிறதோ
அதே வேகத்தில் முறிவும் ஏற்பட்டுவிடுகிறது.

காதல் திருமணம் என்றால் அப்படித்தான் என்றும்,இல்லை நிச்சயிக்கப் பட்டதில் புரிதல் இருக்காது அதுதான் காரணம் என்றும் பட்டிமன்ற விவாதத்திற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கலாம் .ஆனால் பிரிவதற்காகவா ஒரு பந்தம்?

சீதா,நளினி சரிதா,பிரசாந்த்,சொர்ணமால்யா என்று கலைத்துறையினர் மட்டுமல்ல சாதாரண நடுத்தரவர்க்கமும் குடும்பநல கோர்ட் ஏறிக் கொண்டுதானிருக்கிறது.
இதற்கு என்னதான் தீர்வு?பலமுறை யோசித்து ஒருவர் குணம் மற்றவருக்கு உடன்பாடானதா என்று அறிந்து திருமணபந்தம் ஏற்படவேண்டும்.அதற்காக நமக்கு ,நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத லிவிங் டூகெதர் முறை சரியென்று சொல்லவில்லை.தம்பதியர் ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்து மதித்து நடந்தாலே போதும்

'ஒத்த கருத்துடையவராக இல்லாத போதும்
ஒத்துப் போகும் தன்மை இருக்க வேண்டும்'

அப்போதுதான் திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.