Sunday, February 18, 2007

பெண்ணுரிமை..ஒரு பார்வை

சகோதரி லட்சுமியின் பெண்ணுரிமை பற்றி பேசுவது தேவையா
என்ற பதிவும்,பால பாரதியின் 'ஆதலினால்' பதிவும் என்னுடைய இந்தப் பதிவுக்கு காரணமானது.
முதலில் பா.பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.[நட்சத்திர வாரத்திற்கும்,பெண்ணியம் பற்றிய கருத்துக்கும்].
சாதி,மத பாகுபாடுபோல் ஆண் பெண் பாகுபாடும் ஒரு விவாதப் பொருளாகிப் போனது வேதனைகுறிய விஷயம்.
இந்த சமூகத்தில் ஒரு ஆண் செய்வதை பெண் செய்தால் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விடுவர்.பா.பாரதியின் நண்பரைப்போல் 1,2,3 முறை என ஒரு பெண் காதல் வயப்பட்டால் அதைப் பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.கூசாமல் பட்டம் கட்டி விடுவர்.இதையே ஒரு ஆண் செய்யும் போது தப்பாகத் தெரியாது. அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.ஒரு சிலரைத் தவிர,மொத்தத்தில் பெண்கள் காதலுக்கு நேர்மையானவர்களே.அந்த ஒரு சிலரை வைத்து பெண்களை எடைபோடுவது சமூக இயல்பாகி விட்டது.
அனைத்துத் துறையிலும் பெண்கள் சாதித்தே வருகின்றனர்.
பெண்ணுக்கு பெண் எதிரியாம்.ஆணுக்கு ஆண் எதிரியாவதில்லையா? எந்த ஒரு கோணத்திலிருந்து விவாதித்தாலும்,அது ஆண்பெண் இருவருக்குமானது தானே.
பெண்ணிடம் சில மேன்மைகளும்,ஆணிடம் சில ஆளுமைகளும் இருக்கலாம்.ஆனால் யாரும் யாரைவிடவும் உயர்த்தி,தாழ்த்தி இல்லை.
அவதூறுகளுக்கும்,ஆபாசங்களுக்கும் அஞ்சியே எப்போதும் பெண் அமைதி காத்து,கவசம் அணிகிறாள்.
பெண்ணுரிமை பேசும் எந்த ஆண்மகனும் தன் வீட்டுப் பெண் அடங்கி [அடக்கமாக] இருக்கவே விரும்புவான். அடுத்த வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும் யாரும் தன் வீட்டுப் பெண் விமர்சிக்கப் படுவதை விரும்ப மாட்டார்கள்.
காதலோ,கற்பு நெறியோ கல்வியோ,வேலை வாய்ப்போ
திருமணமோ,குடும்ப பாரம் சுமத்தலோ பிள்ளை வளர்ப்போ,வரவுசெலவோ இருவருக்கும் பொது என்ற மனப்பான்மை வரும்வரை பெண்ணுரிமை என்பது விவாதமாகவே தான் இருக்கும்.
புஷனைக் கூடையில் சுமந்து செல்ல பெண்கள் நளாயினிகள் இல்லை.தப்பென்றால் தட்டிக் கேட்போம்.
தவறென்றால் திருத்தியும் கொள்வோம்.
உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.
ஒரு பெண் கணவனுக்கு மனைவியாகவோ,பிள்ளைக்குத் தாயாகவோ ஒரு குடும்பத்தின் அங்கமாகும் போது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும்.அதுதான் உண்மையான பெண்ணுரிமை.