Tuesday, August 12, 2008

ஒபிசிட்டியும் ....BMI யும்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு எய்ட்ஸ் விழிப்புணர்வு இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுவது ஒபிசிட்டி அல்லது ஒபிஸ் எனப்படும் உடல் பருமன் கோளாறுதான்.

இது ஒரு நோயாக கருதப் படாவிட்டாலும் பலப்பல வியாதிகளுக்கு அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

எல்லோருக்கும் இஞ்சி இடுப்பும் ஸ்லிம்மான தோற்றமும் இருக்கனும் என்ற ஆசை இருந்தாலும் நம் வாழ்க்கை முறை உணவுப் பழக்க வழக்கங்கள் பரம்பரை உடல்வாகு என நம் ஆசை நிறைவேறுவதில்லை.

ஓரளவு குண்டாக இருக்கலாம்.ஆனால் ஓபிஸ் [அதிக பருமன்] ஆக இருக்கக் கூடாது.
சிலபேர் சொல்லுவாங்க,'நான் கொஞ்சம் குள்ளம் அதான் குண்டாத் தெரிகிறேன்'
சிலர் நல்ல உயரமா இருப்பதால் எவ்வளவு பருமனாக இருந்தாலும் சட்டெனத் தெரியாது.



LARGER THE WAIST LINE
SHORTER THE LIFE LINE
எனச் சொல்லப் படுகிறது.

ஒல்லியான அல்லது பருமனான உடல்வாகு என்பது பார்க்கின்ற வெளித் தோற்றத்திலேயே தெரியக் கூடியது என்றாலும் உடல்நல அடிப்படையில் பார்த்தால் அதை பிஎம்ஐ எனப்படும் பாடி-மாஸ்-இண்டெக்ஸ் வைத்து கணக்கிட முடியும்.
பிஎம்ஐ என்பது உடம்பு[பாடி வெய்ட்] எடையை உயரத்தின் வர்க்கத்தால் [ஸ்கொயர் ஆப் ஹெய்ட்] வகுத்துக் கிடைப்பது.

BODY WEIGHT/HEIGHT^2= KG/M^2=BMI

இப்ப புதுசா வரும் எல்லா மொபைல் மாடல்களிலும் இந்த BMI அளவைக் காணும் வசதி உள்ளது.நாமே நம் உடல் எடை ,உயரம் கொடுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.ஓரளவு விழிப்புணர்ச்சியாவது கிடைக்கும்.

பிஎம்ஐ மதிப்பு 25 முதல் 29.9 ஆக இருப்பது சராசரி பருமன் எனவும் >30 என்பது ஒபீஸ் எனவும் வரையறுக்கப் பட்டுள்ளது.

உலக ஒபிஸிட்டி விழிப்புணர்வு வாரமாக [world obesity awareness week]ஆக வருடா வருடம் அக்டோபர்15 முதல் 19 வரை கொண்டாடப் படுகிறது.

உலக மக்கட் தொகையில் சுமார் 2.7 பில்லியன் பருமன் கோளாறு உள்ளவர்கள் என்றால் இந்தியாவில் மட்டும் சுமார் 97 மில்லியன் பேர் அதிக உடற்பருமன் கொண்டவர்களாம்.

பொதுவாக உணவுப் பழக்க வழக்கம் உடற்பயிற்சியினமை சோம்பிக் கிடத்தல் காரணமாக இருந்தாலும் மரபணுக் கோளாறும் காரணமாகிறது.
குழந்தைகளைப் பொறுத்த மட்டில் ஜெனெடிக் எனப்படும் மரபணுத் தன்மையால் பருமன் ஏற்பட்டாலும் அவர்களின் உணவுப் பழக்கம்,வாழ்க்கைமுறையே பெரும் காரணமாகிறது.
ஜங்க் புஃட் எனப்படும் அதிக கலோரி கொண்ட சத்தற்ற நொறுக்குத் தீனிகள்,ஐஸ்கிரீம்,பால் பொருட்கள் இனிப்பு வகைகள் அதிகம் உண்பது ,பகல் தூக்கம் முறையான உடற்பயிற்சியின்றி எந்நேரமும் கணிணி விளையாட்டு,வீடியோ கேம்ஸ் ,கார்ட்டூன் சேனல்கள் என ஒரே இடத்தில் பல மணி நேரம் சோம்பிக் கிடப்பதே இளம் வயது ஒபிஸிட்டி க்கு காரணமாகிறது.

பெற்றவர்கள்தான் கடமையுணர்ச்சியோடு புரிய வைத்து நல்ல சத்துள்ள குறைவான கலோரி உணவுப் பொருட்கள்,பழங்கள் சாப்பிடப் பழகவும்,நிறைய நீர் அருந்தவும்,தவறாது உடற்பயிற்சி செய்யவும் பழக்க வேண்டும்.
பெரியவர்களைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்களோடு ஆண்களானால்,மது ,புகை,போதை மருந்துகள் போன்ற பழக்கங்கள் சேர்ந்து விடுகின்றன.
பெண்களுக்கு இந்தப் பிரச்சினை பருவமடையும் சமயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது.பின்னர் பிள்ளைப் பேறு சமயத்திலும் ,மாதவிடாய் நிற்கும் சமயம் அல்லது மாதவிடாய்க் கோளாறுகளாலும் இந்த உடற்பருமன் அதிகரித்து விடுகிறது.
சிலருக்கு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும் ஹார்மோன் குறைபாடும் காரணமாகிறது.

உடற்பருமன் என்பதை'உடம்புல கொழுப்பு' வச்சிடுச்சு எனக் கொச்சையாகச் சொன்னாலும் உண்மை அதுதான்.
கொழுப்பு என்பது நம் உடலில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் ஆற்றல்.நம் உடல் இயக்கங்களுக்கு வேண்டிய போது செலவிடப் படுகிறது.சொல்லப்போனால் உடலுக்கு வழுவழு தன்மையையும் அழகையும் கொடுக்கிறது.
ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் ஒபிஸிட்டியாகிறது.
உடலில் சராசரியாக 30-35 பில்லியன் கொழுப்பு செல்கள் உள்ளன.நாம் எடை கூடும்போது அவைகளின் எண்ணிக்கையும் உருவளவும் அதிகரிக்கிறது.
பின்னர் எடைக் குறைக்க முற்படும்போது உருவளவு சுருங்குமே தவிர உண்டான செல்களின் எண்ணிக்கை குறவதில்லை.

இப்படிச் சேரும் கொழுப்பு பல வியாதிகளுக்கு கட்டியம் கூறுகிறது.
ஸ்ட்ரோக் எனப்படும் திடீர் அடைப்பு,இதய நோய்கள்,சர்க்கரை வியாதி,கணையக் கோளாறுகள்,ஹார்மோன் அளவில் மாறுபாடு,மூட்டுவலி,வயிறு மற்றும் மலக்குடல் கேன்சர்,கல்லீரல் கெடுதல்,டிஸ்லிப்பிடிமியா எனப்படும் இரத்தத்தில் அதிக கொழுப்பு அல்லது டிரைகிளிசெரைடு எனப்படும் மாரடைப்புக்கு காரணமான கொழுப்பு போன்றவை அதிகமாகிறது.

உடற்பருமனைக் குறைக்க மாத்திரை மருந்து,ஸ்டீம் அல்லது ஆயில் மசாஜ் னு பல வழிகளோடு அறுவை சிகிச்சை முறைகளும் நவீனமாக்கப் பட்டிருந்தாலும் , நல்ல உணவுப் பழக்கத்தோடு நடைப் பயிற்சி,யோகா,நீச்சல்,ஓட்டப் பயிற்சி என உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இயற்கையான முறையில் உடற் பருமனைக் குறைக்க கையாளும் முறைகளே பக்க விளைவுகள் இல்லாத நன்மை பயக்கும்.

2 comments: