Monday, August 10, 2009

நட --------- ராஜா

எல்லா காலத்திற்கும் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு உடற்பயிற்சி இருக்குமானால் அது 'வாக்கிங்' தான் என்பதில் சந்தேகமில்லை.
நடைப் பயிற்சி நம் உடல் உறுப்புகளை மட்டுமல்லாது மனதுக்கும் புத்துணர்வைத் தருகிறது.
மனித உடலின் பல உறுப்புகள் இயல்பாகவே நடத்தலோடு தொடர்புடையவை.
பாதம் ,கால்கள் ,இடுப்புப் பகுதியோடு,வயிற்றுத் தசைகளும் ஒத்துழைக்கின்றன.நடக்கும் போது உதரவிதானம் ,விலா எலும்புகள் நன்றாக வேலை செய்வதால் நாம் வேகமாக மூச்சை இழுத்து விட முடிகிறது.
இப்போதெல்லாம் 'வாக்கிங்' என்பது ஆரோக்யத்துக்காக இல்லாமல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவும் ஆகி விட்டது.
வேலைக்குப் போகும் பெண்கள் வாக்கிங் போக எனக்கெங்கே நேரமிருக்கு என்பதும்,வீட்டிலிருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு நூறு முறை நான் அடுப்படிக்கும் தெருவாசலுக்கும் நடையா நடக்கிறேன் இதுல தனியா என்ன வாக்கிங் வேண்டியிருக்குன்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அலுவலகம்,அன்றாட வேலை,வீடு இங்கெல்லாம் அடிக்கடி நடப்பது மாடி ஏறி இறங்குவது என்பதெல்லாம் முறையான நடைப் பயிற்சி ஆகாது .உடற்பயிற்சியும் ஆகாது என்பது மருத்துவர்களின் கூற்று.
நாளொன்றுக்கு சுமார் 30 முதல் 45 நிமிடமாவது சீரான வேகத்தில் குறைந்தது 2 கி.மீ தூரம் நடப்பதென்பதே சரியான நடைப் பயிற்சியாகும்.
நடைபயிற்சி என்னென்ன விதமாக நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதைப் பாருங்கள் .பிறகு நாலு தெரு தள்ளிப் போய்வருவது என்றாலும் டூ விலரை எடுக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள்.
ஏரோபிக்:
நடைப் பயிற்சி உடலை உறுதியாக வைக்க உதவுகிறது. ஓடுதல்,பளு தூக்குதல் போன்ற மற்ற கடினமான உடற்பயிற்சிகள் போல இல்லாமல் ,நடக்கும் போது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைக்கிறது.இதனால் உடலின் எந்த திசுக்களும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் திணறுவது இல்லை.எனவேதான் 80,90 வயதானாலும் நடைப் பயிற்சி சாத்தியம்.
சுவாசம்:
சீரான நடைப் பயிற்சி நுரையீரல் மார்பு தசைகளுக்கு பயிற்சியளித்து நல்ல சுத்தமான காற்றை அதிக அளவில் சுவாசிக்கவும்,தேவையில்லாத காற்றை வெளித்தள்ளவும் செய்கிறது.
இதயம்:
இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் நல்ல பயிற்சியளித்து அடைப்பு வராமல் தடுக்கிறது.இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை [HDL-high density lipoprotein]அதிகரிக்கச் செய்கிறது.உடல் முழுவதற்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி செய்வதால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக் போன்ற அபாயங்களிலிருந்து காக்கிறது.
இரத்தக் கொதிப்பு:
இரத்தக் கொதிப்பு எனப்படும் 'பிளட் பிரஷர்' [BP] சர்வசாதாரண்மாக இளையவர் முதல் முதியவர் வரை உள்ளது.இப்போதுள்ள வாழ்க்கை முறைகள்,உணவுப் பழக்க வழக்கங்களே இதற்கு காரணம்.இந்த பி.பி க்கு ஒரு சிறந்த 'கடிவாளம்' நடைப்பயிற்சி என்றால் மிகையாகாது. மன அழுத்தத்தைக் குறைத்து இரத்தக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை சமனப் படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுப்பதால் குறைந்த அல்லது அதிக இரத்த அழுத்தம் எட்டிப் பார்க்காது.
நீரிழிவு:
சர்க்கரை நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு மருந்து நடைப் பயிற்சி.நடைப்பயிற்சியால் ஏற்படும் எடைக் குறைப்பு சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது.
எலும்பு:
உடலின் எலும்புகளை மூட்டுக்களை உறுதியாக்குகிறது.வயதான காலத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரிசிஸ் வராமல் எலும்புகளை உறுதிப் படுத்துகிறது.
சக்தி:
அதிகப்படியான கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மன இறுக்கத்தைத் தளர்த்தி புத்துணர்வைக் கொடுக்கிறது.
எப்படி நடப்பது?:
நிச்சயம் தினசரி பயிற்சியாக இருக்க வேண்டும்.ஆரம்பத்தில் ஆர்வமாக வாக்கிங் செய்து விட்டு விட்டுவிட்டால் அதுவரை கிடைத்த நன்மைகள் காணாமல் போய்,திரும்ப முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.
எடுத்த எடுப்பிலேயே 4,5 கி.மீ நடக்கிறேன் பேர்வழி என ஆரம்பிக்கக் கூடாது.
never bite off more than you can chew என்பது போல் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும் , நடக்க வேண்டிய தூரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை:
இருதயக் கோளாறு உள்ளவர்கள்,
அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
உடல் ரீதியான தொந்தரவு உள்ளவர்கள்
நடைப்பயிற்சியின் போது தலை சுற்றல்,மயக்கமடைபவர்கள்
மார்புப் பகுதியில் வலி ,இறுக்கம் உணர்பவர்கள்
இவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு செய்யலாம்.

இனியென்ன?இத்தனை நன்மைகள் இருக்கும் போது அலட்சியம் ஏன்?தொடங்க வேண்டியதுதானே?
நட.....ராஜா

3 comments:

  1. நல்லதொரு நன்மை பயக்கும் பதிவு.

    ReplyDelete
  2. நல்ல பதிவு...

    same topic - i have written some time before

    http://trichisundar.blogspot.com/2009/04/blog-post_29.html

    ReplyDelete