Sunday, February 18, 2007

பெண்ணுரிமை..ஒரு பார்வை

சகோதரி லட்சுமியின் பெண்ணுரிமை பற்றி பேசுவது தேவையா
என்ற பதிவும்,பால பாரதியின் 'ஆதலினால்' பதிவும் என்னுடைய இந்தப் பதிவுக்கு காரணமானது.
முதலில் பா.பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.[நட்சத்திர வாரத்திற்கும்,பெண்ணியம் பற்றிய கருத்துக்கும்].
சாதி,மத பாகுபாடுபோல் ஆண் பெண் பாகுபாடும் ஒரு விவாதப் பொருளாகிப் போனது வேதனைகுறிய விஷயம்.
இந்த சமூகத்தில் ஒரு ஆண் செய்வதை பெண் செய்தால் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விடுவர்.பா.பாரதியின் நண்பரைப்போல் 1,2,3 முறை என ஒரு பெண் காதல் வயப்பட்டால் அதைப் பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.கூசாமல் பட்டம் கட்டி விடுவர்.இதையே ஒரு ஆண் செய்யும் போது தப்பாகத் தெரியாது. அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.ஒரு சிலரைத் தவிர,மொத்தத்தில் பெண்கள் காதலுக்கு நேர்மையானவர்களே.அந்த ஒரு சிலரை வைத்து பெண்களை எடைபோடுவது சமூக இயல்பாகி விட்டது.
அனைத்துத் துறையிலும் பெண்கள் சாதித்தே வருகின்றனர்.
பெண்ணுக்கு பெண் எதிரியாம்.ஆணுக்கு ஆண் எதிரியாவதில்லையா? எந்த ஒரு கோணத்திலிருந்து விவாதித்தாலும்,அது ஆண்பெண் இருவருக்குமானது தானே.
பெண்ணிடம் சில மேன்மைகளும்,ஆணிடம் சில ஆளுமைகளும் இருக்கலாம்.ஆனால் யாரும் யாரைவிடவும் உயர்த்தி,தாழ்த்தி இல்லை.
அவதூறுகளுக்கும்,ஆபாசங்களுக்கும் அஞ்சியே எப்போதும் பெண் அமைதி காத்து,கவசம் அணிகிறாள்.
பெண்ணுரிமை பேசும் எந்த ஆண்மகனும் தன் வீட்டுப் பெண் அடங்கி [அடக்கமாக] இருக்கவே விரும்புவான். அடுத்த வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும் யாரும் தன் வீட்டுப் பெண் விமர்சிக்கப் படுவதை விரும்ப மாட்டார்கள்.
காதலோ,கற்பு நெறியோ கல்வியோ,வேலை வாய்ப்போ
திருமணமோ,குடும்ப பாரம் சுமத்தலோ பிள்ளை வளர்ப்போ,வரவுசெலவோ இருவருக்கும் பொது என்ற மனப்பான்மை வரும்வரை பெண்ணுரிமை என்பது விவாதமாகவே தான் இருக்கும்.
புஷனைக் கூடையில் சுமந்து செல்ல பெண்கள் நளாயினிகள் இல்லை.தப்பென்றால் தட்டிக் கேட்போம்.
தவறென்றால் திருத்தியும் கொள்வோம்.
உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.
ஒரு பெண் கணவனுக்கு மனைவியாகவோ,பிள்ளைக்குத் தாயாகவோ ஒரு குடும்பத்தின் அங்கமாகும் போது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும்.அதுதான் உண்மையான பெண்ணுரிமை.

27 comments:

  1. //உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.//

    இது செம பாயின்டு! :)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி மதுரா .உங்க பதிவுகள் படிச்சிருக்கேன்.வித்தியாசமான நடைன்னாலும் கொஞ்சம் புரிஞ்சிக்க நேரமாகுது.
    நமக்கு நாமே எடுத்துக் கொள்வதுதான் உரிமைன்னு தெரியாதா நமக்கு?அன்புக்கு நாம் அடிபணிவதை 'அடிமைத்தனம்' என்ற கூத்துதான் நடந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  3. //உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.//

    அதே உரிமைகளை போரிட்டு பெறுவது அதைவிட சிறந்த்து.

    ReplyDelete
  4. நாட்டுக்கு உரிமை வேண்டி போராடலாம்.அய்யகோ தாயாய்,துணைவியாய்,மகளாய்,சகோதரியாய் ,நட்பாய் வாழும் நாங்கள் போராடித்தான் பெறவேண்டுமா?
    நல்ல கூத்து மாசிலா.நான் எங்களுக்கு [பெண்களுக்கு] உரிமை கொடுக்க நீங்கள் [ஆண்கள்] யார் என்கிறேன்.இருவரும் சமம்தானே?

    ReplyDelete
  5. ஆட்டோகிராபின் கதையில் நாயகனுக்கு பதில் நாயகி இருந்தால் இப்படி போற்றப் பட்டு இருக்குமா? .

    \\அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.//

    பாருங்க இப்படியும் எழுத வேண்டி இருப்பது பெண்களுக்கு தான்.

    \\அய்யகோ தாயாய்,துணைவியாய்,மகளாய்,சகோதரியாய் ,நட்பாய் வாழும் நாங்கள் போராடித்தான் பெறவேண்டுமா?
    நல்ல கூத்து மாசிலா.நான் எங்களுக்கு [பெண்களுக்கு] உரிமை கொடுக்க நீங்கள் [ஆண்கள்] யார் என்கிறேன்.இருவரும் சமம்தானே? //

    உண்மைதான் இந்த வரிசையில் உள்ள எல்லாரிடம் போராட பெண்கள் விரும்பாததால் தான் இன்னமும் பேசும் பொருளாகவே இருக்கிறது.

    ReplyDelete
  6. நன்றாகச் சொன்னீர்கள் லட்சுமி.ஆட்டோகிராப் கதையோ இல்லை நண்பர் பால பாரதியின் பதிவோ ஒரு பெண்ணூக்கானதாக திரிச்சி[மாற்றி] எழுதப்பட்டிருந்தால்? இருக்கவே இருக்கே.....என்ற பட்டம்.

    ReplyDelete
  7. //தாயாய்,துணைவியாய்,மகளாய்,சகோதரியாய் ,நட்பாய் வாழும் நாங்கள் போராடித்தான் பெறவேண்டுமா?// இது உணர்வுகள் அடிப்படையில் இயங்குவது. நான் சொல்ல வந்தது ஏனைய உரிமைகளை பற்றியது.
    எ.கா : முடிவெடுப்பது.

    ReplyDelete
  8. //அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.ஒரு சிலரைத் தவிர,மொத்தத்தில் பெண்கள் காதலுக்கு நேர்மையானவர்களே.//

    இவ்வரிகளுடன் வேறுபடுகிறேன். ஒரு காதல் தோல்விக்குப் பிறகு, ஒரு பெண்ணுக்கோ ஆணுக்கோ, வேறொரு காதல் உறவை ஏற்படுத்திக் கொள்வதில் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது / இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. மேலும், நீங்கள் கூறும் 'ஒரு சிலரை' நேர்மையற்றவர்களாகக் கருதுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மூன்றாவதாகக் கூற விரும்புவது, 'ஒரு சிலரைத் தவிர மற்றவர்களெல்லாம் நல்லவர்களே' என்று நீங்கள் பெண்களுக்கு அளித்துக் கொள்ளும் சான்றிதழ் எல்லா தரப்பினருக்கும் பொருந்தக்கூடியது - நீங்கள் demonize செய்திருக்கும் ஆண்களையும் சேர்த்து :)

    ReplyDelete
  9. இது குறித்த என் பதிவுகளில் ஒன்று இங்கே:http://reallogic.org/thenthuli/?p=126

    ReplyDelete
  10. நன்றாகவே புரிகிறது மாசிலா. எடுத்துக்காட்டே வேண்டாம்.நானும் வாழ்க்கையை உணர்வு/உணர்ச்சிகளின் கலவையாகத்தான் பார்க்கிறேன்.ஆனால் நீங்கள் சொல்லும் முடிவெடுக்கும் உரிமைக்கூட கேட்டுத்தான் பெற வேண்டுமா?அல்லது குடும்ப/பொது விஷயங்களில் முடிவெடுக்க உரிமை அளிக்கப் படுதல் மட்டுமே பெண்ணுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய கவுரவமா?[போனால் போகிறது என்ற மனப்பான்மையில்].லேடிஸ் பர்ஸ்ட் என்பது ஆண்கள் கொடுக்கும் மிகப் பெரிய வரமா? மனமும் மனம் சார்ந்த உணர்வுகளும் சமமாகப் பார்க்கப்பட்டு பரிசீலிக்கப் பட்டு ஏற்புடையவை அங்கீகரிக்கப் பட வேண்டுமேயன்றி நான் ஆண் என்ற அகங்காரம் அவர்களுக்கோ ,நான் பெண் என்ற தாழ்வுணர்ச்சி இவர்களுக்கோ வரக்கூடாது.அன்பின் பரிமாணத்தில் விட்டுக் கொடுத்தல் வேறு.போனால் போகிறது என்பது வேறல்லவா?

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி பத்மா அர்விந்த்.
    இன்னாரின் மனைவி என்று சொல்வார்களே தவிர நான் அவள் கணவன் என்று அழைக்கப்பட ஒப்புவார்களா?

    ReplyDelete
  12. 'வாய்ஸ் ஆப் விங்க்ஸ்' வரகைக்கு நன்றி. உங்களுக்கு ஒன்று தெரியுமா?உலகிலேயே எல்லா வேதனைகளுக்குமான மிகச் சிறந்த 'மருந்து'காலம் தான்.மரணம் போன்ற வேதனையைக்கூட காலப் போக்கில் மறந்து இயல்புக்கு திரும்பிவிடுகிறோம்.அப்படியிருக்க 'காதல்' எம்மாத்திரம்? தோற்றவன் மீண்டும் காதலித்தால் குற்றம் என்று நிச்சயம் சொல்ல மாட்டேன்.ஆனாலும் காதலில் அதிக சதவீதம் நேர்மையாக இருப்பவர்கள் பெண்கள் என்கிறேன். ஒரு ஆண் பல பெண்களுடன் பழகும்போது,அல்லது காதலித்துப் பிரியும்போது அவன் பாவம் பலமுறை காதலித்து தோற்றான் என்று சொல்லும் சமூகம் இதையே ஒரு பெண் ஓரிரு முறை காதலித்து தோற்றால் எப்படிப் பார்க்கும்.
    பச்சையாகச் சொல்வதானால்,'அவள் பல பேரோடு சுத்திக்கிட்டிருந்தா கேரக்டர் மோசம்'இப்படித்தானே?
    இதைத்தான் சொல்கிறேன்,ஒரே தப்பை ஆணுக்கு ஒரு கண்ணோட்டத்திலும்,பெண்ணுக்கு ஒரு கண்ணோட்டத்திலும் பார்க்கும் வரை பெண்ணுரிமையோ,சமத்துவமோ அடைந்து விட்டதாக சொல்லமுடியாது.

    ReplyDelete
  13. //இன்னாரின் மனைவி என்று சொல்வார்களே தவிர நான் அவள் கணவன் என்று அழைக்கப்பட ஒப்புவார்களா// இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. இருந்தாலும் பதில இங்கே: அது இடத்தை பொறுத்தது. பெண்ணின் நன்பர்கள், அலுவலகம் ஆகிய இடங்களில் இன்னாருடைய கணவன் என்றும், ஆணின் நண்பர்கள் அலுவலகம் ஆகிய இடங்களில் இன்னாருடைய மனைவி என்றும், பிள்ளைகலின் பள்ளிகளில் இன்னாருடைய பெற்றோர்கள் என்றும்தான் அழைக்கப்படுவார்கள். இதில் உரிமை பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் மிகவும் மேலோட்டமாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  14. //அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.//
    முடிந்த காதலுக்கு பிறகு புதிதாய் துவங்க ஆணுக்கு உரிமையுள்ளது போல பெண்ணுக்கும் உரிமையுண்டு.

    //காதலோ,கற்பு நெறியோ கல்வியோ,வேலை வாய்ப்போ
    திருமணமோ,குடும்ப பாரம் சுமத்தலோ பிள்ளை வளர்ப்போ,வரவுசெலவோ இருவருக்கும் பொது என்ற மனப்பான்மை வரும்வரை பெண்ணுரிமை என்பது விவாதமாகவே தான் இருக்கும்.
    புஷனைக் கூடையில் சுமந்து செல்ல பெண்கள் நளாயினிகள் இல்லை.தப்பென்றால் தட்டிக் கேட்போம்.
    தவறென்றால் திருத்தியும் கொள்வோம்.
    உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.//

    பெண் விடுதலைக்கு இதுவே அடிப்படை.

    சில இடங்களில் உதாரணங்களோடு விரிவாக எழுதினால் நலமாக இருக்கும். இது என் கருத்து மட்டுமே.

    யார் சொன்னது நீங்க அறிவாளி இல்லைன்னு. உங்களைப்பற்றிய பகுதியில் இருக்கும் வார்த்தையை கேட்டேன்...

    ReplyDelete
  15. சாரி பத்மா அர்விந்த் சிறு தடங்கல் காரணமாக என் பின்னூட்டம் தடைபட்டது.நீங்கள் சொன்னதுபோல் நான் மேம்போக்காக சிந்திக்கலாம்.வயது,அனுபவம்,வாழ்க்கைமுறைகளே நம் கண்ணோட்டத்தை நிர்ணயிக்கின்றன.படித்த வேலையிலிருக்கும்,தன் காலில் நிற்கும் பெண்களுக்கு உரிமை என்பது வேறு.தானே எடுத்துக் கொள்ளும் தைரியம் அவர்களுக்கு உண்டு.நான் சொல்ல வந்தது வேறு.
    பெண்ணுரிமை என்பது எல்லாப் பரிமாணங்களிலும் மிளிர வேண்டும்.
    குடும்பம்,சமூகம்,அரசியல் என்று.
    என்னிடம் ஏன் கேட்டீர்கள் என்பது உங்கள் கேள்வி.
    பத்மா அர்விந்த்,கௌசிமோகன்[நான்],மதி கந்தசாமி.துளசிகோபால்,வல்லி சிம்ஹன்,கவிதா கஜானனன்,உஷா ராமச்சந்திரன்,இதோ இன்றைக்கு புதிதாக கோகிலா கார்த்திக் இப்படி[வலையில் பார்த்த பெயர்கள்] நம் பெயரோடு சேர்த்திருப்பது கணவர் [அ] தந்தை பெயர்தானே.[நாம் விரும்பிச் சேர்க்கிறோம் என்பது வேறு]
    ஆனால் ஏன் எந்த ஆணும் தன் பெயருக்குப் பின்னால் மனைவி பெயரையோ,தாயின் பெயரையோ சேர்ப்பதில்லை.நம் பிள்ளைகளின் பள்ளி,நண்பர் வட்டம் என்பது ஒரு குறுகிய வட்டம்.அங்கு நாம் முன்மொழியப்படலாம்.பெயரில் என்ன வந்தது எனக் கேட்கலாம்.பெயரில் ஆரம்பித்துத்தான் எல்லாமே.வெட்டியாய் வேலையில்லாமல் சுற்றினாலும் குடும்பத்தலைவன் ஆண்தானே?நாலு வீடு பத்து தேய்த்து உழைத்தாலும் பெண் அடுத்துத்தானே?
    வீட்டில் தொடங்கி ,சமுதாயம்,நாடு என்று எங்கும் எதிலும் பெண்கள் ஆணுக்குப் பின்னால்தானே.

    [பெயரை வைத்து சொல்லத் தோன்றியது.பிடிக்கவில்லையெனில் மன்னிக்கவும்]

    ReplyDelete
  16. நீங்கள் கேட்டதில் எந்த தவறும் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகளைன் பெயருக்கு முன்னால் தாயின் பெயரையும் இனிஷியலாக்கலாம் என்று சட்டம் இருப்பதாக அறிகிறேன். அடுத்த தலைமுறைக்கு தானே மாறும். இப்போதைக்கு என்னை பொறுத்தவரை குடும்ப பெயராக மட்டுமே பயன் படுகிறது. சேர்த்துதான் கையெழுத்து இடவேண்டும் என்பது இல்லை, தேவையும் இல்லை.இதற்கும் வேலைக்கும் படிப்பிற்கும் சம்பந்தம் இல்லை. நிறைய படிக்காத குடும்பதலைவிகள் சிந்தனை விரிந்து இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதற்கு விரிவான பதிவொன்றை தருகிறேன். மற்றபடி உங்கள் பதிவில் சில இடங்களில் நீங்கள் செய்யலாம், நாங்கள் செய்யகூடாதா என்ற தொனி இருப்பதாக பட்டது. தவறென்று சொல்ல எதுவும் இல்லை.
    இப்படிப்பட்ட தொனியால், விவாதம் திசை திரும்ப இங்கே வாய்ப்புண்டு:) பிறகு பேசுவோம்.

    ReplyDelete
  17. கொளசி
    நீங்கள் எதனால் கேட்டீர்கள் என்று புரிந்தாலும் பலபேருக்காக விரிவாக சொல்லவைக்க வேண்டும் என்பதும் என் கேள்விக்கு காரணம்.

    ReplyDelete
  18. நன்றி திரு.என்னுடைய பதிவில் பேசியதைவிட பின்னூட்டங்களில் கொஞ்சம் அதிகம் பேசியிருக்கிறேன்.
    தப்போ சரியோ என்வாதத்தை முன்வைக்கிறேன்.இது வலை தந்த சுதந்திரம்.ஆண்,பெண் இருவரும் சமம் என்று நான் கருதும்போது 'உரிமை'பற்றிபேசுவதில் எனக்கு உடன்பாடில்லை.பலர் விட்டுக் கொடுத்தலையும்,அனுசரித்துப் போவதையும் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரமாகக் கருதுவது வேடிக்கையாக உள்ளது.இதில் மட்டுமே உண்மையான உரிமை கிடைப்பதாய் நான் நினைக்கவில்லை.சுதந்திரம் என்பதற்கும்,உரிமைக்கும் நிறையவே வேறுபாடு உள்ளது.
    விரிவாகப் பேசத்தேவையில்லையென கருதுவதால் இது போதும்.
    [திரு என்னை நெளிய வைத்துவிட்டீர்கள். பின்னூட்டத்தின் சில பகுதி மட்டும் டெலிட் செய்யும் வழி தெரியாததால் பிரசுரித்து விட்டேன்.
    நம் பார்வைகளும் கோணங்களும் மற்றவருடன் ஒத்துப் போகும்போது பாராட்டத்தோன்றும்.அப்படியே கருதுகிறேன்.

    ReplyDelete
  19. சரியாகச் சொன்னீர்கள் பத்மா.பலபேர் காதல்தோல்வி விஷயத்தைப் பெரிதாக்கி,பெண்களுக்கும் அந்த உரிமை வேண்டும் என்பதாக நினைக்க வைத்து விட்டேன்.
    திருவும் அப்படி சொல்லியிருக்கிறார்.
    புரிதலுக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி[சகோதரி].

    ReplyDelete
  20. பெண்ணுரிமைப் பற்றி நினைக்கவோ பேசவோ முடியாத காலத்திலேப் பெண்ணுரிமைக்காகப் போராடியதற்காகப் படித்த பெண்தலைவர்கள் நடத்திய பெண்கள் மாநாட்டிலே 1938 லே பெரியார் என்ற பட்டம் தரப்பட்டது.கருத்தடை பற்றித் தீவிரமாகப்பிரச்சாரம் செய்தவர்.அவரை உலகப் புகழ் பெற்ற டாக்டர்.சந்திரசேகர் மக்கள் தொகைக்கட்டுப்பாட்டிற்கு உழைத்தவர் சென்று பார்த்தபோது கேட்டார்.நீங்கள் பெண்ணுரிமை,பெண்ணுரிமை என்று பேசுகிறீர்களே பெண்களுக்கு என்ன உரிமைதான் வேண்டும் என்று.
    உடனே பெரியார் சொன்னாராம் ஒன்றும் அதிகமாக வேண்டாங்க.ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அது மட்டும் போதுங்க என்றாராம்.சந்திரசேகர் சிரித்துக்கொண்டே உங்களை ஏன் பெரியார் என்று சொல்கிறார்கள் என்று புரிகிறது என்றாராம்.
    பெண்ணுரிமை பற்றி நினைக்கும் போது உங்கள் மனைவியை நினைக்காதீர்கள்.உங்கள் மகளை,தங்கையை நினையுங்கள் என்று சொன்னார் ஆண்களிடம்.
    பெண்களிடம் யாரோவந்து உங்களுக்கு உரிமையெல்லாம் வாங்கித் தர மாட்டார்கள்.உரிமைகள் நீங்கள் போராடிப் பெற வேண்டியது,நீங்களாகவே எடுத்துக் கொள்ள வேண்டியது என்றார்.

    ReplyDelete
  21. \\பெண்ணுரிமை,பெண்ணுரிமை என்று பேசுகிறீர்களே பெண்களுக்கு என்ன உரிமைதான் வேண்டும் என்று.
    உடனே பெரியார் சொன்னாராம் ஒன்றும் அதிகமாக வேண்டாங்க.ஆண்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கிறதோ அது மட்டும் போதுங்க என்றாராம்.//
    நன்றாகச் சொன்னீர்கள் தமிழன்.பெரியாரின் சிந்தனைக்கு ஈடாகாது.
    சரிபாதி பங்கு பிரித்துக் கொடு என்பதோ,அதைச் செய்ய,இதைச் செய்ய சுதந்திரம் என்பது மட்டுமே பெண்ணுரிமையில்லை என்பதுதான் என் வாதமும்.ஆணுக்கு உள்ள சகல உரிமையும் மறுக்கப்படாமல் இருப்பதுதான் உண்மையான பெண்ணுரிமை.இதை யாரும் யாருக்கும் தரவோ,பெறவோ வேண்டியதில்லை.தானாகவே அனுபவப்பட /கோரப்பட வேண்டும்.

    ReplyDelete
  22. நன்றி தமிழன்

    ReplyDelete
  23. அங்க முத்துலெட்சுமி அவர்களின் பதிவு படிச்சிட்டு பின்னூட்டம் போட முடியலியேன்னு பாத்தா உங்க பதிவு.

    பெண்ணுரிமைக்காக பெண்கள் இன்னும் போராட வேண்டும் என்பது நினைக்கவே தான் துன்பம்.

    //உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.//
    கிழக்கு நாடுகளில், நம் நாட்டைப் பொறுத்த வரை, விலங்குகளை உடைப்பது அவ்வளவு கடினம் இல்ல: பகிடி பேசறவங்களை கண்டுக்காமப் போகணும்; உண்மையான பெண்ணுரிமை பேசுபவர்களோடு நட்பாக/உறவாக இருக்கணும். காலம் கனியும் போது, தூற்றியவர் மாலைகளோடு வருவர். வாழ்வில கண்டது/வென்றது. என் பாயிண்டு: தூற்றுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

    //நம் பெயரோடு சேர்த்திருப்பது கணவர் [அ] தந்தை பெயர்தானே...// அதுவும் choice-ல விட்டுடலாம். நான் கோர்ட்டுக்குப்போய் என் பெயரின் நடுவில் (middle name) என் கணவர் பெயரை வைத்துக் கொண்டு விட்டேன் - அலுவல் சார் பெயரில் என் கணவரின் அடையாளம் கிடையாது; என் குழந்தைகளுக்கு (last name) என் கணவரின் பெயரில்லை. இதனால் என் கணவர் துளி வருத்தப் படவில்லை. ஆனால் உலகளாவிய நிஜம் ஆணைச் சார்ந்து பெண் வாழ்வது தான்....

    கெ.பி.

    ReplyDelete
  24. கெ.பி இதுவரை உங்கள் பெயர் பார்த்த நினைவில்லை.வருகைக்கு மிக்க நன்றி.பரஸ்பர புரிதலோடு,உரிமையோடு பலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களின் சதவீதம் மிகக் குறைவே. ஆனால் உலகளாவிய மாற்றம் என்று வரும்?
    நமக்காக நாமே போராட,வாதாட வேண்டியிருப்பதுதான் அவலம்.

    ReplyDelete
  25. கெளசி,
    நன்றாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு சின்ன விஷயம்- நல்லா பாருங்க நான் எழுதுவது ராமசந்திரன் உஷா என்ற பெயரில். ஆர். உஷா என்ற என் பெயரின் விரிவாக்கம். ராமசந்திரன் அப்பா பெயர். பாஸ்போர்ட் முதற்கொண்டு, அனைத்திலும் ராமசந்திரன் உஷா என்று இருந்ததால், அப்படியே எழுது பெயராய் பாவிக்கத் தொடங்கினேன். கல்யாணம் ஆனதும் மாற்றிக் கொள்ளவில்லை. கணவர் பெயர் என்றால் பின்னால் தானே வரும் :-)

    ReplyDelete
  26. வருகைக்கு நன்றி உஷா.இடமற்றம் செய்யப் போவதாக இருந்தீர்களே எல்லாம் நல்லபடியாக முடிந்ததா?
    உஷா முன்னால் எழுதவா இல்லை பின்னாலா என்பது வாதமில்லை .தந்தையின் பெயர் முன்னால் போட்டும் இல்லை பின்னால் போட்டும் எழுதலாம்.நம்மில் பலர் நமக்கு முகவரி தந்தவர் என்றவகையில் தந்தை இனிஷியல் திருமணத்திற்குப் பிறகும் மாற்ற விரும்புவதில்லை.என் கேள்வி ஏன் உங்கள் அன்னையின் பேரை உங்க பேரோடு சேர்த்துப் போட்டுப் பழகவில்லை என்பதே.பத்மா அர்விந்த் சொன்னது போல் இப்பவெல்லாம் தாயின் இனிஷியல் போட உரிமையுண்டு.எங்கள் குடும்பத்தில் வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் தாய்,தந்தை இருவரின் இனிஷியலும் சேர்த்து இரட்டை இனிஷியல் வைக்கின்றனர்.இது வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும்,இதோடு முடிந்து போகிறதா பெண்ணுரிமை? இது பேரோடு முடிந்து போகும் பெயரளவு மாற்றம் மட்டுமே .சமத்துவம் மட்டுமே முழு உரிமைதரும்.

    ReplyDelete
  27. கௌசி,

    உங்கள் பெண்ணுரிமையைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கண்டேன்.

    ஒரு பெண்ணாக இருப்பதால், இன்னமும் விரிவாக அலசி இருப்பீர்களோ என நினைத்தேன்.

    எடுத்துக் கொள்வது தான் உரிமை என்பது உண்மையானாலும், எடுத்துக் கொண்டதை தக்க வைக்க அதற்கான மனமும், பலமும், சக்தியும் தேவை. அவற்றை கரைத்து, கலைக்க இந்த சமூகத்தால் வெகு எளிதாக முடியும்.

    பெண் உரிமை, காதல், திருமணம் என்ற தளங்களில் மட்டும் இல்லை. இவற்றில் உரிமை கொடுப்பதற்கோ, தடுப்பதற்கோ, ஆண்கள் தயங்க மாட்டார்கள். தட்டுவதற்கு எழும்பும் இரண்டாவது கையாக அவர்கள் தானே இருக்க முடியும்.

    சிந்தனை தளத்தில் எழுச்சி பெற முடிந்தால் மட்டுமே உரிமைகளை உணரவும் அனுபவிக்கவும் முடியும்.

    இல்லையென்றால்?

    நம்மூரில், பசுமாடுகளுக்குக் கூடத்தான் பலத்த மரியாதை கிடைக்கிறது. அதற்காக ஆறறிவு படைத்த மனிதம் ஆகி விட முடியுமா?

    பெண்களை நம் சமூகம் பசுக்களாகத் தான் பார்க்கிறது. மரியாதை கொடுப்பார்கள் - தங்கள் தேவைகளுக்காக மட்டுமே.

    இன்னும் சற்று விரிவாக சிந்தியுங்கள், சகோதரி.

    வாழ்த்துகள்

    அன்புடன்
    நண்பன்

    ReplyDelete