Monday, March 05, 2007

ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்

ஆட்டக்கடிச்சி,மாட்டைக் கடிச்சி கடைசியிலே மனுஷனைக் கடிச்ச கதைன்னு சொல்றது போல
பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப் படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி,ஏத்துக்கூலி,வண்டி வாடகை ,எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர்.இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும் ,இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டு
வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளூ வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம்.இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை.எடை மோசடி,சுகாதாரமற்ற சூழல் மாறும்.விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்கு தேவையான முன்பணம் கொடுத்து,பின்னர் கொள்முதல் செய்கிறோம் என்வே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
சுத்தம்,சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதை கனவில்கூட நினைக்க முடியுமா?
சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில்,12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும் .இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது.மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம் .கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.

12 comments:

  1. ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகளின் சிரமம் பெரியதா அல்லது அந்த வியாபாரிகளின் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் சேவை பெரியதா? இந்த வாதம் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

    இதே போல் ஸ்பென்சர், சுபிக்ஷா இவர்களைன் வரவால் சிறிய மளிகைக் கடைக்காரர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்றும் சொல்லலாமா? என்னைப் பொருத்தவரை இதன் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றே எண்ணுகிறேன். அப்படி இருந்தாலும் அது பொது மக்களுக்கே அதிக பலனுள்ளதாகவே இருக்கும். வியாபாரிகளை விட பொது மக்களே முக்கியம்.

    ReplyDelete
  2. வாங்க ஓகை ஒரு லட்சம் என்பதூ இன்றைய அளவில் சென்னை வியாபாரிகள் மட்டுமே.
    வாடிக்கையாளர் நலன் கருதி செயல்படும் நிறுவனம் காலப் போக்கில் லாப நோக்கோடு செயல் படத் தொடங்கக் கூடாது அல்லவா.மேலும் எத்தனை பேர் ஸ்பென்ஸரிலும்,சுபிக்ஷாவிலும் பொருட்கள் வாங்குகிறோம்.
    அதிலும் காய்கறிகளைப் பொறுத்தவரை ''கார்டன் பிரஷ்'என்பது சில்லறை மற்றும் சிறுவணிகர்களிடம்தான்.
    இதில் என் கருத்து என்பதைவிட மக்களுக்கு எப்படி பயனளிக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete
  3. அட ...நீங்க வேற இப்படிப் பதிவு போட்டு வெறுப்பேத்தாதீங்க...அங்க காய்கறியெல்லாம் ஒண்ணும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை....அல்லது நான் போன அன்னைக்கு அப்படியா தெரியலை...இதை விட பழமுதிர்சோலை எவ்வளவோ பெட்டர்...ஆனா விலை..ஹி..ஹி

    ReplyDelete
  4. இந்தியாவில் விவசாயத்திற்க்கு அடுத்தபடியாக அதிக ஆட்கள் வேலை செய்வது இந்த சில்லறை வியாபரத்தில்தான். நம்ம ஓகை சார் அவர்களை மக்கள் லிஸ்டில் சேர்ப்பாரா என்று தெரியவில்லை. வால் மார்ட்டின் ஊழியர் கொள்கை மிக மோசமாக அமெரிக்காவில் விமர்சிக்கப் பட்டது என்பதை நான் சொல்லி தெரிய்வேண்டியதில்லை. மேலும் அது இந்தியாவில் என்ன செய்யும் என்பதற்க்கு இந்தியா ஒரு இழிச்சவாய நாடு என்ற ஒன்றே போதும்.

    எல்லாவற்றையும் நியாயமான விலை கொடுத்தே வாங்கும் நம்ம ஓகை சார் சில்லறை வணிகத்திலும் நியயாமாக விலை குறைந்த்து வாங்குவதில் தவறில்லை. ஆனால், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்லையடித்தும், விநியோகம் செய்பவர்களை சுரண்டியும், தனது ஊழியர்களை சுரண்டியுமே வால் மார்ட் முதலான நிறுவனஙக்ள் குறை கூலி பொருட்களை தருகின்றன.

    கோக் முதல் தேவையில்லா இதர சொகுசு பொருட்களுக்கு ப்ராண்ட் நேம் காரணமாகவே அதிக விலை கொடுக்க தயங்காத ஓகை வர்க்கத்தினர், இவர்களிடம் கொள்ளையடித்து மாளிகை கட்டி கோட்டையில் வாழும் சில்லறை வியாபாரிகளை வெறுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை,

    கேவலம் பொட்டலம் கட்டி பல சரக்கு விற்க்க கூட பன்னாட்டு கம்பேனிதானா? பிறகு எப்படித்தான் வல்லரசு என்று வேறு டுப்பாக்கூர் விடுகிறார்களோ

    அசுரன்

    ReplyDelete
  5. இந்த ஏகாதிபத்தியம் இல்ல ஏகதிபத்தியம் அதுக்கும் பார்ப்ப்னியத்துக்கும் ஒரு தத்துவ கள்ளத் தொடர்பு உள்ளது. அது என்னவென்றால்,

    பார்ப்ப்னியம் வர்னாஸ்ரமம் சொல்கிறது,

    "நீ ஒருவனை அடிமையாக வைத்துக் கொள், எனக்கும் அடிமையாக இரு" - இதன் மூலம் தலைமை ஆண்டானாகிய பூசாரி வர்க்கம் தன்னை பாதுகாத்துக் கொள்கிறது,



    ஏகாதிபத்திய உலகமயம் என்ன சொல்கிறது,

    "நீ ஒருவனை சுரண்டிக் கொள், ஒருவனுக்கு உன்னை சுரண்டக் கொடு" - இதன் மூலம் தலைமை சுரண்டல்க் காரர்களான MNC, தரகு முதலாளி கும்பல் தனது சுரண்டலை பாதுகாத்துக் கொள்கீறது.

    நாமோ குறைந்த கூலி, நல்ல குவாலிட்டி என்ற பெயரில் சொந்த சகோதரனின் ரத்தத்தையும், சதையையும் தின்று வருகிறோம். இந்த சதைத் துணுக்குகளில் நமது சதையும் மறைமுகமாக கலந்துள்ளதை உணராமலேயே?

    நல்ல பிழைப்புவாதம், நல்ல தனிமனித வாதம், நல்ல் சுயநலம்.... இவர்கள் எல்லாம் சுதந்திர தினத்தில் மட்டும் பெரிய தேசப் பற்றாளர்கள் போல வேசம் கட்டி போலி ஆவேசம் காட்டும் பொழுது மிக மிக கெவலாமக அருவெறுப்பூட்டுவதாக உள்ளது.

    *****

    நல்ல கட்டுரை, தோழி பொன்ஸ்-ன் கட்டுரை மூலமே இந்த கட்டுரை குறித்து அறிந்தேன். வாழ்த்துக்கள். உண்மை என்று நம்புவதை தைரியமாக தொடர்ந்து எழுத வாழ்த்துகிறேன். உண்மை என்று நம்புவது பொய் எனத் தெரிந்தால் உதறும் நெஞ்சுறுதி பெற வாழ்த்துகிறேன்.

    அசுரன்

    ReplyDelete
  6. சரி வாடிக்கையாள்ருக்கு என்ன கஸ்டம் என்று சொல்லுங்கள் ஒகை அதை பேசலாம்

    அசுரன்

    ReplyDelete
  7. வாங்க சங்கர் குளிர் சாதன வசதி,கணிணி மயமாக்கப்பட்ட பில்லிங்,சுய சேவை ,அலங்காரமான கடை விரிப்பு எல்லாத்துக்கும் சேத்துத் தானே விலை வைக்கணும்.பத்து நாளைக்கு முன்னாடி பாலித்தீன் கவரில் வைக்கப் பட்ட கீரையும்,பச்சைக் காய்கறிகளும் நம்ம தெருவுல முனியம்மா கத்திரிக்கா,வெண்டக்கா,கீரை என்று கூவீக் கொடுக்கும் 'பிரஷ்னெஸ்'க்கு ஈடாகுமா?வெயில்ல சுத்தற அவகிட்ட 5 காசுக்கு பேரம் பேசுவோம் புட் வேர்ல்டு,பழமுதிர் சோலையில் போட்ட விலைக்கு வாங்குவோம்

    ReplyDelete
  8. வாங்க அசுரன் என்னுடைய பதிவின் தலைப்பே 'மனதில் பட்டவை'.என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்கிறேன்.நாளேடுகளிலும்,தொலைக்காட்சியிலும் பார்க்கும் கேட்கும் செய்திகளைத்தான் என் போக்கில் விமர்சிக்கிறேன்.
    தெளிந்த அரசியல் ஞானமோ ,அரசியல் அறிவோ கிடையாது எனினும் மனிதாபிமானம் என்பது கூடப் பிறந்ததாயிற்றே.
    அம்பானி சகோதரர்கள் சொத்துக்கு அடித்தூக் கொண்ட கதை நாடே அறியும்.கோடிஸ்வரனுக்கு சொத்தைப் பிரிப்பதில் கவலை.கூலிக்காரனுக்கு அன்றாட பொழைப்பில் கவலை.100 ரூபாய் முதலீட்டில் காய்கறி தோட்டத்தில் வாங்கி 20,30 லாபம் பார்த்தால்தான் அவர்களின் அன்றைய வயிற்றுப்பாடு தீரும்.
    அடுத்த நாளுக்கு மறுபடியும் போராட்டம் தான்.இப்படித்தானே அவர்தம் வாழ்க்கை ஓடுகிறது.காய்கறி வாங்க காரில் வேலையாளை அனுப்பும் சீமான் கைபடாத பாக்கெட் காய்கறியை இப்படிப்பட்ட ஷாப்புகளில் வாங்கலாம்.
    ஆனால் கீழ்,நடுத்தர வர்க்கம் சிறு வணிகர்களையும்,அவர்கள் இம்மாதிரி மக்களையுமே சார்ந்திருக்கின்றனர்.
    கோடியில் புரளுபவர்கள் கூடையிலும் கை வைக்கின்றனரே என்ற ஆதங்கம் தான்.

    ReplyDelete
  9. அசுரன் அவர்களே,

    // இந்தியாவில் விவசாயத்திற்க்கு அடுத்தபடியாக அதிக ஆட்கள் வேலை செய்வது இந்த சில்லறை வியாபரத்தில்தான். நம்ம ஓகை சார் அவர்களை மக்கள் லிஸ்டில் சேர்ப்பாரா என்று தெரியவில்லை//
    விற்பவர்களைவிட அவர்களிடம் வாங்குபவர்கள் அதிகம். இதுவே என் கருத்தின் அடிப்படை. மக்கள் லிஸ்டில் சேர்ப்பது போன்ற சொல்லாடலுக்கு நான் ஆளில்லை. நான் உணர்ந்த கருத்தையே வெளிப்படுத்துகிறேன். நேரான விவாதத்துக்கு எப்பொழுதும் தயார்.

    //எல்லாவற்றையும் நியாயமான விலை கொடுத்தே வாங்கும் நம்ம ஓகை சார்....//

    என்னைப் பற்றி இம்மாதியான சொல்லாடலை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    //கோக் முதல் தேவையில்லா இதர சொகுசு பொருட்களுக்கு ப்ராண்ட் நேம் காரணமாகவே அதிக விலை கொடுக்க தயங்காத ஓகை வர்க்கத்தினர்,..//

    என் கருத்திலிருந்து மாறுபட்டால் என் தரப்பு விளக்கத்தைத் தர கடமைப்பட்டுள்ளேன். இது போன்று பெயர் குறிப்பிட்ட பொய் விமர்சனங்களை எழுத வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்

    //சரி வாடிக்கையாள்ருக்கு என்ன கஸ்டம் என்று சொல்லுங்கள் ஒகை அதை பேசலாம்//

    வாடிக்கையாளருக்கு கஸ்டம் என்று நான் இங்கு கூறவேயில்லை.
    வால்மார்ட்டைப் பற்றியும் நான் கருத்து கூறவில்லை.

    ReplyDelete
  10. ஒரு தனி மனிதனின் வெற்றி, ஒரு சமுதாயத்தின் வெற்றி என சொல்ல முடியாது. சமுதாயத்தில் இருக்கும் அனைவரும் வெற்றி அடைய வேண்டும். அதைத்தான் ஆங்கிலத்தில் 'Win-Win' என்று சொல்லுவார்கள்.

    ஒரு குழுமம் லாபம் அடைவதற்க்காக 1 லட்சம் பேர் நஷ்டம் அடைய வேண்டும் என்ற கோட்பாடு சரியில்லை. ரிலையன்ஸ் ஒன்னும் சமுக சேவை அமைப்பு கிடையாது. அவர்களும் லாபத்திற்க்காக தான் இந்த தளத்தில் கால் பதிக்கின்றனர்.

    காந்தியின் சுதேசி இயக்கம் இதற்க்காக ஆரம்பிக்கப்பட்டதுதான். இதை எதிர்க்க மற்றோரு காந்தியை தேட வேண்டியதுதான்..

    ReplyDelete
  11. யார் ஒருவர் வியாபாரம் தொடங்கும் போது யாரையோ தெரிந்தோ தெரியாமல் மிதித்துக்கொண்டுதான் வரவேண்டியுள்ளது.
    இது அவர்களின் இன்னொரு வியாபாரம், அவ்வளவு தான்.இதனால் மற்றவர்கள் கஷ்டப்படுவார்கள் என்பது ஏற்றகக்கூடிய வாதம் அல்ல.
    நாளை நம்மில் ஒருவர் வியாபாரம் தொடங்கினால்,அதை எப்படி பார்ப்பது?

    ReplyDelete
  12. உங்கள் எண்ணங்களை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். மாற்றங்கள் மட்டுமே மாறாதவை. மாறுகின்ற சூழலுக்குத் தகுந்தவாறு தன்னை வேகமாக மாற்றிக் கொள்பவனே வெல்வான். தொலைபேசி துறையில் தனியார் வந்தால் BSNL இல் எல்லோருக்கும் வேலை போய்விடும், அது பயங்கர நட்டத்தில் இயங்கும் என ஆரூடம் கூறியவர்கள் இன்று அதே பொதுநிறுவனத்தில் அதிக சம்பளம் பெற்றுக் கொண்டு சந்தைப் பங்கில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்கள். இன்று கைவண்டிக்காரர் வியாபாரம் போகலாம், ஆனால் அவர் மகளுக்கு வேலை கிடைக்க ரிலையன்ஸ் நிறுவனங்கள் வேண்டும்.

    உலகம் ஓடும்போது நாம் மட்டும் 'இருந்த இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே' என இருக்க முடியாது :)

    ஒன்று நிச்சயம். சில்லறை வணிகத்தில் பெருநிறுவனங்கள் நுழையும்போது அரசு தன் பலவேறு தனியாதிக்க கட்டுப்பாட்டு சட்டங்களைக்் கொண்டு கவனமாக அரசாள வேண்டும். அரசே இவர்களின் கைக்குள் அடங்குவதுதான் கவலையளிக்கிறது.

    ReplyDelete