Wednesday, April 11, 2007

மனதைப் பாதித்த மரணங்கள்

மரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.

சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில் நடித்தவர்.டான்ஸ் ஆடுவதற்கான காலேயில்லாமல் டான்ஸ் ஆடியவர்.ஆக்ஸிடெண்டில் பறிபோன ஒற்றைக் காலுடன் டான்ஸ் ஆடி பலரின் கவனத்தையும் கவர்ந்தவர். இயக்குனர் கேயாரின் 'டான்ஸர்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்.அதுமட்டுமல்லாமல் ஐந்தாயிரத்திற்கும் மேல் 'ஸ்டேஜ் ஷோ'க்களில் ஆடியவர் இந்த மாதம் பரமக்குடியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவிற்கு ஆடப்போன இடத்தில் அவர் தங்கியிருந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பொது 'பேலன்ஸ்' தவறி விழுந்து இறந்து விட்டார்.
ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் அதே ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்யத் தோற்று மரணத்தை அழைத்த கொடுமையை என்னென்பது?

இன்னொரு அநியாய மரணம் 'செண்டூர்' வெடிவிபத்து.சாலையோர டீக்கடையில் நின்றவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் என என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே உயிர்விட்ட மக்கள்.எல்லவற்றிலும் தலை விரித்தாடும் அரசியல் சுயநலம் செல்வாக்கால் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அப்பாவிகளின் உயிர் குடித்த அவலம்.

படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட இத்தகைய கொடூர மரணங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நேரடிக்காட்சியாக ஒளிபரப்பப் பட்ட பாகனின் மரணம்.திருவிழாவுக்கான ஒளிபரப்பாக இருந்தாலும் இப்படியொரு கொடுமையைத் தொடர்ந்து படம் பிடித்த அந்தக் கொடுமையை என்ன சொல்வது.துணியைப்போல துவைத்துப் போடப்பட்ட அந்த பாகனின் அலறல் இன்னமும் ஒலிப்பதுபோல் இருக்கிறது.எதிர்பாராமல் நடந்த ஒன்று என்றாலும் அதை ஒளிபரப்பத்தான் வேண்டுமா?
இப்படி பல யானைகளை வைத்து விழா நடத்தும் இடத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.இந்த நிகழ்வுக்குப் பிறகே வன அலுவலர்கள் மயக்க மருந்தை துப்பாக்கியில் பிரயோகித்து மதம் கொண்ட யானையை அடக்கியிருக்கின்றனர்.
வீட்டில் வளர்க்கும் நாய்,பூனைகளே சில நேரம் கட்டுக்கடங்காத போது இத்தகைய பெரிய வனவிலங்குகள் நாட்டிற்குள் தேவையா? யானை ஒரு மங்களகரமான ,பூஜிக்க தக்க ஒன்றாகவே இருப்பினும் அதை வைத்துப் பராமரிப்பதும் பொது இடங்களில் அழைத்து வருவதும் தேவையா?
யானையோ,மாடோ,மயிலோ,மூஞ்சூறோ எது வேண்டுமானாலும் கடவுளின் அம்சமாக வாகனமாக இருக்கட்டுமே அவை அவை அவற்றின் இடத்தில் இருந்தால்தான் பாதுகாப்பு.
வனவிலங்கு சரணாலயங்களிலும் காட்டிலும் இருக்க வேண்டியவை அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட சூழலில் வசிப்பதும்,பல துன்புறுத்தல்களுக்கு உட்படுவதும் அவைகளை மூர்க்கமடைய வைக்கிறது.பக்தி இருக்க வேண்டியதுதான் அது இத்தகைய அவலங்களுக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

பாரதி தொடங்கி இந்த விபரீதம் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

5 comments:

  1. குட்டி என்ற நடன நடிகரின் மரணம் மனதை உலுக்கி விட்டது. நக்கீரன் இதழில் படத்துடன் பார்த்து படித்த செய்தி. ஒரு காலுடன் அத்தனை லாகவமாக நடனமாட முடியும் என்ற செய்தி பலருக்கும் உற்சாகமளிப்பதாக இருந்திருக்கும். அவருடைய பேட்டியைக் கூட ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

    ஒற்றைக் காலால் செய்த சாதனையைக் கொண்டு, மரணத்திடமிருந்து தப்ப இயலாதது - பரிதாபம் தான்.

    நண்பன்

    ReplyDelete
  2. உண்மைதான்.
    மரணத்தை விட, விபத்துகளை விட அதை வைத்து பணம், பரபரப்பு வாங்குபவர்கள் கொடியவர்கள்.

    ReplyDelete
  3. //யானையோ,மாடோ,மயிலோ,மூஞ்சூறோ எது வேண்டுமானாலும் கடவுளின் அம்சமாக வாகனமாக இருக்கட்டுமே அவை அவை அவற்றின் இடத்தில் இருந்தால்தான் பாதுகாப்பு.//
    மனுசனுக்குப் பாதுகாப்புன்னு சொல்லுங்க கௌசி.. அந்த உயிர்களுக்கும் மகிழ்ச்சி. கோயில் யானை, ஆசிரம மயில்னு அதனதன் சுதந்திர வெளியிலிருந்து ஒரு கூட்டுக்குள் அடைத்து வைத்தால் என்றைக்காவது மனிதனுக்கு ஆபத்தைத் தான் உருவாக்கும்!

    நீங்க குறிப்பிட்டிருக்கும் மூன்று மரணங்களுமே எனக்கும் அதிர்ச்சியானவையாகத் தான் இருந்தன..

    ReplyDelete
  4. நன்றி நண்பன் இதுதான் விதி வலியது என்பது.சாதனைக்குக் காரணமான ஒற்றைக்காலே சாவிற்கும் காரணமான கொடுமை

    நன்றி வல்லியம்மா.உணர்வுகளைவிட விளம்பரமும் வியாபாரமும் பெருகிவிட்டது.

    ReplyDelete
  5. வாங்க பொன்ஸ்.சில நாட்களுக்கு முன் பின்னூட்டமிட மாட்டேன் என்று நீங்கள் எழுதிய ஒரு பதிவு படித்த ஞாபகம்.அதற்குப் பதிலாக ஒருதனிப் பதிவே போட நினைத்து அதனால் போலிகளின் அவதூறுக்கு ஆளாகும் அவலம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
    மனசு மாறிட்டீங்களோ?
    உங்கள் வழியில் போங்கள். யாருக்கும் பதில் சொல்லவோ பயம் கொள்ளவோ என்ன வந்தது?நட்பு பாராட்டினால் கை கொடுங்கள்.பகைமை கொண்டால் புறம் தள்ளுங்கள்.

    ReplyDelete