குடும்பம் என்பது ஒரு அழகான தோட்டம்.உறவுகள் அங்கு பூத்துக் குலுங்கும் மலர்கள்.
எந்த ஒரு குடும்பத்திலும் பெற்றவர்கள் பிள்ளைகள் மீதும் பிள்ளைகள் பெற்றவர் மீதும் அன்பும் ஆதரவும் கொண்டிருப்பது இயற்கையே.
ஆனால் அதை எத்தனை குடும்பங்களில் பரஸ்பரம் வெளிப்படுத்தவோ,பகிர்ந்து கொள்ளவோ செய்கின்றனர்?
இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும்,படிப்பு,பணம் சம்பாதித்தல் என்றுமாகவே பெரும் பொழுது கழிந்து விடுகிறது.
காலையில் சீக்கிரமாகக் கிளம்பிப் போதலும் இரவில் நேரங்கழித்து வருதலும் இருக்கும் போது குடும்பத்துடன் மனம் விட்டுப் பேசவோ மகிழ்ந்திருக்கவோ பொழுதிருப்பதில்லை.
விடுமுறை நாட்கள் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்பதும் அல்லது நண்பர்களுடன் கிரிக்கெட் என்றும் செலவிடப் படுகிறது.தந்தைக்கு நண்பருடன் அரட்டை அடிக்கவும் தாய்க்கு டி.வியிலும் பொழுது போகிறது.
எல்லோருமே இப்படியிருப்பதில்லை என்றாலும் பெரும்பாலான குடும்பத்தில் இது வாடிக்கைததானே.
பழங்கதைகள் பேசுவதும் மலரும் நினைவுகளும் சுகமானவை.
தன் பெற்றோர் சின்ன பிள்ளைகளாக இருந்த போது என்னென்ன குறும்பு செய்தார்கள் என்று தாத்தா பாட்டி வாயால் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?
எல்லோரும் கூடி நிலாச் சோறு சாப்பிட்டதுண்டா?
அம்மா அன்னத்துடன் அன்பையும் பிசைந்து உருட்டித் தந்த உருண்டைச் சோறு ருசித்ததுண்டா?
ஆம் எனில்,நாம் சிறுவர்களாய் இருந்தபோது அனுபவித்த அந்த இன்பம் நம் பிள்ளைகளுக்கும் தானே கிடைக்க வேண்டும்.
கேலியும்,கிண்டலும் , ஆட்டமும் ,பாட்டும் ,போட்டிகளும் விளையாட்டும் ஏதோ விஷேஷ நாட்களில் கூடியிருக்கும் போது மட்டுமா?
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வாய்ப்பை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்
குடும்பம் மொத்தமும் கூடிப் பேசி மகிழும் தருணங்கள் விலை மதிக்க முடியாத சொர்க்க நேரங்கள்.
சிறு வயதில் நாம் பட்ட துன்பம்,பணப் பற்றாக் குறை பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கம் தப்பில்லை ஆனால் அதற்காக விலை மதிக்க முடியாத தருணங்களையும் சந்தோஷத்தையும் அவர்கள் அறிய வாய்ப்பு இல்லாத வகையில் வாழ்க்கையை இயந்திரத்தனமாக்கிக் கொள்ள வேண்டுமா?
ஆளுக்கொரு நேரத்தில் உண்டு ஆளுக்கொரு நேரத்தில் உறங்கி எழுந்து ஒரே வீட்டில்
ஒருவர்முகத்தை மற்றவர் பார்க்கக் கூட நேரமின்றி,விடுமுறை நாட்களில் வாய்ப்பு அமைந்தால் ஏதோ திரு விழாவுக்கு வந்த உறவினரைப் பார்ப்பது போல பார்க்கும் அவலம் இன்றைய வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
வாழ்க்கையின் போக்கை அடியோடு மாற்ற முடியாதாயினும் ,கொஞ்சம் அனுசரித்து நேரம் ஒதுக்கி உறவுகளோடு சேர்ந்திருக்க முனையலாமே?
ஓடி ஓடி உழைப்பதே குடும்பத்திற்காகத்தானே என வாதிடலாம்.ஆனால் அந்தந்த தருணங்களின் சந்தோஷத்தை அப்போதைக்கப்போதே அனுபவிக்க நேரமில்லாமல் சம்பாதித்து என்ன பயன்?
மழலையின் பேச்சும்,குழந்தைகளின் கொஞ்சு மொழியும் குறும்புகளும் ஒத்திப் போட்டு சாவகாசமாக ரசிக்கவா?
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அப்பா EB யிலும் அம்மா வெளியூரில் ஒரு பள்ளியிலும் வேலை பார்க்கின்றனர்.பையன் +2 படித்துக் கொண்டிருந்தான்.
தினமும் மதியம் வீட்டுக்கு வரும் தந்தை மகன் சாப்பிட்ட தட்டைப் பார்த்து நேர நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு பள்ளிக்குப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்க ,
அவனோ நண்பர்களுடன் பொழுது போக்கி , பள்ளிக்கே போகாமல் அட்டெண்டென்ஸ் குறைவால் பரீட்சையே எழுத முடியாமல் போனது.
சாப்பிட்ட தட்டு இருக்கிறதா பையன் வீட்டுக்கு வந்தானா எனப் பார்த்த தந்தை அவன் வேறு என்ன செய்கிறான் எனக் கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை.யாருக்காக பாடுபடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அவன் படிப்பும் எதிர்காலமும் தான் பாழாய்ப் போனது.
ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து கொண்டே தனித் தனி தீவுகள் போல அவரவர் வேலை அவர்க்கு என்ற வாழ்க்கையில் சலிப்பு மட்டுமே மிஞ்சும்.
கூடியிருக்கவும்,குலவி மகிழவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி உறவுகளின் அன்பில் திளைத்து,சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டால் விரிசலுக்கும் பூசலுக்கும் இடமிருக்காது.
வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும்.