Monday, January 29, 2007

சத்தியத்தின் வயது நூறு

மகாத்மாகாந்திஜி தொடங்கிய சத்யாகிரக போராட்டத்தின் வயது நூறு.இதை இரண்டு நாள் விழாவாக இன்றும் நாளையும் தில்லியில் கொண்டாடுகிறார்கள்.
இதைப் போற்றும் முகமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று தீண்டாமை உறுதிமொழி எடுக்கப் பட்டது.
இந்நாளில் மார்ட்டீன் லூதர் கிங்கின் ஒரு கவிதை..இதோ

''சம வாய்ப்புக்கான கனவு
சொத்துக்கள் சமமாக பங்கீடு
செய்வதற்கான கனவு
ஒரு சிலர்மட்டுமே சுகபோகத்தில் வாழாதிருக்கும் கனவு
ஒரு மனிதனின் நிறங்கொண்டு
அவன் குணத்தை அளவிடாதிருக்கும் கனவு
நாட்டின் வளங்கள் அனைத்தும்
ஒரு சிலரின் உரிமையாகாமல்
மனுக்குல மேம்பாட்டிற்கான
கருவியாகும் கனவு
ஒவ்வொரு மனிதனும் மாண்போடும்
முழு ஆளுமையோடும் வாழ்வதற்கான கனவு
.... ..... ....... ....... ....... ....... ...... என்று
மக்களை பாகுபடுத்தாத கனவு.....
மார்ட்டின் லூதர்கிங்

Sunday, January 14, 2007

முகம் தெரியாத நண்பர்களுக்கு...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

முகம் தெரியாத உறவுகளாய்
.நண்பர்களாய்இருக்கும்..
என்னை எனக்கே என்
எழுத்துக்களின் மூலம் தெரியச் செய்த
அன்பான தமிழ்மண அன்பர்களுக்கு...வாசகர்களுக்கு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Saturday, January 06, 2007

பால் அருந்தும் அன்னங்கள்

தமிழ்மணத்தில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது மனதில் தோன்றியது இந்தப் பதிவுக்கான கரு.
ஒரு ஊரில் தலை சிறந்த ஒரு ஓவியர் இருந்தாராம்.
அவருடைய ஓவியங்கள் பலராலும் இரசிக்கப்பட்டு வந்தன.
இருந்தும் அந்த ஓவியருக்கு தன் ஓவியங்களை எந்த அளவிற்கு மக்கள் இரசிக்கிறார்கள் என அறியும் ஆசை வந்தது.
தன்னுடைய மிகச் சிறப்பான ஓவியம் ஒன்றை நகரின் முக்கிய வீதியில் வைத்து அதன் அருகில்
"இந்த ஓவியத்தில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் கருதும் பகுதியை பச்சை வண்ணத்தின் மூலம் குறிப்பிடவும்"
என்று ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார்.
மறுநாள் ஓவியர் கடை வீதிக்கு வந்து பார்த்தபோது,ஓவியம் முழுவதும் பச்சை வண்ணமயமாக காணப்பட்டது.
சந்தோஷமடைந்தாலும்,ஓவியருக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை நன்றாக இல்லாத பகுதியை மட்டும் குறிப்பிட சொல்லியிருக்க வேண்டுமோயென்று.
மறுபடியும் அதே ஓவியத்தின் மற்றொரு பிரதியை அங்கு வைத்து,நன்றாக இல்லாத பகுதியை சிவப்பு வண்ணத்தில் குறிக்கும்படி ஒரு போர்டும் வைத்தார்.
மறுதினம் பார்க்கையில் முன்பு போலவே ஓவியம் முழுதும் சிவப்பு மையினால் மெழுகப் பட்டிருந்தது.
பிறகுதான் ஓவியர் உணர்ந்தார் மனிதர்களுடைய பார்வைகளும் கோணமும் இரசனையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதை.

இதைப் போலத்தான் இருக்கிறது தமிழ்மணப் பதிவுகளும் ,இரசனையும்.
இலக்கியம்,தமிழ் ,ஆன்மிகம்,ஈழம்,பெரியாரிஸம்,பார்ப்பனீயம்சினிமா,நகைச்சுவை கணிணி தொழில்நுட்பம்,சமையல்,அனுபங்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் பதியப்படுகின்றன.
பிடித்தவர்கள் பிடித்ததைப் படிக்கவோ பின்னூட்டம் இடவோ செய்யலாம்.
பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம்.
ஆனால் சில பதிவுகளில் ஆபாசமான்,தரக்குறைவான மூன்றாந்தர பின்னூட்டங்கள் வருகிறது.
குறைந்தபட்சம் பதிவர்களாவது அதை நீக்கி விடலாம்.அவர்களும் செய்வதில்லை ஏனோ?
இதை எழுதவோ,விமர்சிக்கவோ கூட எனக்கு அதிகாரம் இல்லைதான் ஏனெனில் அது அது அவரவர் விருப்பம்.
இருந்தாலும் மனதில் பட்டதால் சொல்கிறேன்
பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டுமே பருகுமாம் அன்னப் பறவை. அதுபோல எவ்வளவோ பதிவுகள் தினமும் பதிவிடப் படுகிறது.நமக்கு பிடித்ததை உடன்பாடானதை படிக்கலாம்.
மாறுபட்ட கருத்து இருந்தால் விமர்சிக்கலாம்,ஆனால் வரைமுறை மீறவேண்டாம் என்பது என் சொந்தக் கருத்து
[இதற்கு எத்தனை வசவு வருமோ]
அன்னியனாய்...தண்டிக்காமல் அன்னப் பறவையாய் இருப்போம்[இது சமுதயத்திற்கு அல்ல.தமிழ்பதிவுகளுக்கு மட்டுமே]