Friday, March 30, 2007

கல்வி நிலையங்களா..கொலைக் கூடாரங்களா?

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வழக்கு.
கல்வி போதிக்கும் ஆசான்களை தாய்,தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செய்கிறோம்.ஆனால் அந்த கல்வி ஆசான்கள் கொலைகாரக் கொடூரனாகிவிடுகின்றனர் பல நேரங்களில்.
இரண்டு தினங்களுக்கு முன் அண்ணாமலை பல்கலை பொறியியற்புல மாணவியின் தற்கொலையும் அது தொடர்பான செய்திகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காப்பியடித்ததால் பிடிபட்டு அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப் பட்டாலும்,ஆசிரியரின் தவறான செயலே காரணம் என்கின்றனர்.சோதனத் தேர்வின் போது காப்பியடிப்பதாக சந்தேகப் பட்ட ஆசிரியர் மாணவியின் ஓவர் கோட்டில் கைவிட்டு 'பிட்' எடுப்பதாக் கூறி முறைகேடாக நடத்திய அவமானம் மாணவியின் உயிருக்கு உலையானதாகவும் பேச்சு.
இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு,பல லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்திருக்கின்றனர்.
கல்விக்கூடங்கள் என்பவை கல்வியோடு பண்பையும்,ஒழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும் வளர்க்கவே என்ற சூழல் மாறி, படிக்கப் போகும் பிள்ளைகள் படித்து முடித்து முழுதாகத் திரும்புவார்களா என்ற அச்சமே இப்போது பிரதானமாகி விட்டது.
ஆசிரியர்களின் கவனக் குறைவினால் பிஞ்சிலே கருகிய நூற்றுக்கனக்கான கும்பகோணம் குழந்தகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.
பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து பலி,மேற்கூறை விழுந்து பலி என இன்னமும்,இன்னமுமே தொடர்ந்து கொண்டுதானிருக்கிற்து.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு மாணவர்களின் உயி பறிக்கும் எமனாக மாறி வருகின்றனர்.
தன் வகுப்பு மாணவியின் பணம் திருடு போனதால் சந்தேகப் பட்டு துணிகளைக் களைய வைத்து அவமானப் பட்ட ஒரு 6ம் வகுப்பு மாணவி விஷம் அருந்திச் சாவு
ஆசிரியர் கண்மண் தெரியாமல் அடித்த்தால் மாணவன் சாவு
ஆசிரியர் அசிங்கமாகத் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை.
ஒரு தொழிற்கல்வி பள்ளியில் மாணவருக்கு வந்த வேலை வாய்ப்புக்கான உத்தரவை ,மாணவன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் ஆசிரியர் தர மறுத்ததால் மாணவர் விஷம் குடித்து மரணம்.
தன்னைக் காதலிக்க மறுத்த சக மாணவியைத் துரத்தியடித்ததில் மாடிப் படிகளில் உருண்டு வீழ்ந்து மரணம்.
பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டு கொலையான மாணவி கிணற்றில் மிதந்தார்.
இப்படி ஒன்றல்ல பலப் பல என அடுக்கிக் கொண்டே போகலாம்.
எங்கே போய்க் கொண்டிருக்கிறது கல்வியின் தரம்.அந்தக் காலகுருகுல முறையில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம்,பண்பாடு,கலாச்சாரம்,விசுவாசம் கிஞ்சித்தும் இந்த கனிணி யுகத்தில் இல்லை.
தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும்,பாலியல் வன் கொடுமைகளும்,கலாச்சார சீர்கேடுகளுமே
பிரதானப்பட்டு கல்விக் கூடங்கள் கொலைகாரர்களின் கூடாரமாகி வருகிறது.
'சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் தோலை உரித்துவிடுங்கள்,என்று மிரட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோரே அனுமதி வழங்கியது ஒரு காலகட்டம். மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து உரிமையெடுக்க தரப்பட்ட அனுமதி.
இன்றோ சொந்த விறுப்பு,வெறுப்புக்காக மாணவர்கள் கொடுமைப் படுத்தப் படுவதைத் தடுக்க அரசே சட்டம் இயற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை.
ஆயிரம் கனவுகளோடு ,மிகுந்த சிரமப்பட்டு படிக்கக் கிடைக்கும் வாய்ப்பைத் தொடர முடியாமல் இன்னும் எத்தனை 'சேத்னா'க்களும்,'நாவரசன்'களும் கொல்லப் படுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது.
ராகிங் என்ற பெயரில் ஆரம்பித்த கொடுமைகள் நீண்டு,பாலியல்,விரோதம்,காதல்தோல்வி என் கிளைப் பரப்பி விஷ விருட்சமாக வேறுன்றி விட்டது.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு குரோதம் பாராட்டி சிக்கலை அதிகமாக்குகின்றனர்.
விடலைப் பருவத்திற்கே உரித்தான அவசர புத்தி,நிலையற்ற மனோபாவம் மாணவர்களை சில வினாடி உந்துதலில் உயிரை மாய்க்கும் முடிவிற்கு தள்ளிவிடுகிறது.
இதுநாள் வரைப் போற்றிப் பாதுகாத்த பெற்றோர்,அரிதாகக் கிடைத்த கல்வி வாய்ப்பை மறந்து விட்டு யாரோ ஒரு சிலரின் பேச்சுக்கும்,ஏச்சுக்கும் அவமானப் பட்டு உயிரை மாய்க்கும் அவலம் பெருகி வருகிறது.
உடனடித்தேவை சட்டங்கள் மட்டும் அல்ல முறையான வழி நடத்துதலும்.
பரஸ்பர புரிந்து கொள்ளுதலும்,செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் போக்கும் வரும்வரை எந்த சட்டங்களும் நிலையான தீர்வளிக்க முடியாது.

Thursday, March 08, 2007

டெஸ்ட் டியூப் பேபிகள்

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
இந்த நாளில் மகளிர் பிரச்சனைகள் அதற்கான பதிவுகள் என்பதே என் விருப்பம்.
பெண்மையின் தவம் தாய்மை என்றால்
அந்த தவத்தின் வரம் தான் மக்கட் பேறு.
எதனையோப் பேருக்கு அந்த இயற்கையின் ஆசீர்வாதம் கிடைக்காமலேப் போகிறது.
இந்த இடத்தில் என் மனம் கவர்ந்த ஒரு பழையத் திரைப் பாடலைப் பற்றிச் சொல்ல ஆசைப் படுகிறேன்.மேலோட்டமாகப் பார்க்கும் போது கொஞ்சமே விரசமாகத் தெரிந்தாலும் கவியரசரின் அந்த கவிதை வரிகளிலும் அர்த்தத்திலும் மனம் மயங்கிப் போகிறது.
'பார் மகளே பார்'என்ற படத்தில் சிவாஜியும்,சௌகாரும் பாடும் பாடல்.அவ்விருவரின் அழகும் காட்சி அமைப்பும் பாடலுக்கு மேலும் அழகூட்டும்
நீரோடும் வைகையிலே.........எனத் தொடங்கும் பாடலின் வரிகள்
''நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
கட்டிலின் மேலே
அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
தொட்டிலின் மேலே
வாரிரோ ஆரிரோ ஆராரோ''
தாம்பத்யத்தின் இந்த தவமும் வரமும் கிடைக்காத எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
சமுதாயத்தின் முன் இவர்களே குற்றவாளிகளாகவும் முன்னிறுத்தப் படுகின்றனர்.பெண்ணுரிமையின் முதல் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பிக்கிறது.இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு அடிகோலும் என்பதாலேயே என்னுடைய பெண்ணுரிமைப் பதிவுகளில் இதைப் பற்றி நான் விவாதிக்கவில்லை.
இயற்கை வஞ்சித்தாலும் அறிவியல் நுட்பங்கள் இம்மாதிரி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதில் வளர்ச்சி கண்டிருக்கிறது.
'டெஸ்ட் டியூப் பேபி' எனப்படும் சோதனைக் குழாய் குழந்தைகள் ஒரு காலத்தில் ஏதோ பாவம் போலவும் ,நெறி பிறழ்தல் போலவும் கருதப் பட்டன.இன்று ஓரளவ பரவலாக அறியப்பட்ட போதும்,இன்னமும் முழுமையாக அதைப் பற்றிய 'தெளிவு' படித்தவர்கள் மத்தியிலேயே காணப்படவில்லை.

பிறவி அல்லது பரம்பரைக் குறைபாடுகளோ அல்லது நோய்த்தாக்குதலினாலோ
இயற்கையாக 'சூல்' கொள்ள முடியாத ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே அவளின் சினை முட்டையையும்[egg],அவள் கணவனின் உயிரணுவையும்[sperm] கலக்கச் செது உருவாகும் 'கருமுட்டை'[fertilised egg or zygote]யை மீண்டும் அவளின் கருவகத்தில் செலுத்தி வளரச் செய்து பிறக்கும் குழந்தைதான் 'டெஸ்ட் டியூப் பேபி'
.

பலர் இன்னமும் ஏதொ முழுக்குழந்தையுமே 10 மாததிற்கு ஒரு பெரிய சோதனைக் குழாயிலேயே வளரும் என்று கூட நினைக்கின்றனர்.
கரு உருவாகும் சூழ்நிலையில் இல்லாத 'சூலகங்கள்'[UTERES] ஒரு முறை கருமுட்டையை வெளியே உருவாக்கி உள் சேர்த்த பிறகு அதை 10 மாதத்திற்கு வளர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது.இதை இயற்கையின் விந்தை என்பதா முரண்பாடு என்பதா?
உயிரணுக்களில் குறைபாடு உள்ள ஆண் அல்லது சினை முட்டை உருவாகாத பெண் இப்படி தம்பதியரில் யாருக்கேனும் நிவர்த்திக்க முடியாத குறை இருக்கும் பட்சத்திலேயே மாற்று வழியாக 'சினைமுட்டை தானம்' அல்லது 'உரிரணுக்கள்' தானம் பெறப்பட்டு இந்த சோதனக்குழாய் முறை செய்யப்படுகிறது.

எல்லா சோதனைக் குழாய் முறைகளுமே 'டோனார்' முறை இல்லை.

இப்படி 'டோனார் இடமிருந்து பெறுவதும் தம்பதியரின் சம்மதம் அறிந்து,தகுந்த டோனார் கண்டறியப் பட்டு மிகுந்த இரகசியம் காக்கப் பட்டு ,சம்மந்தப்பட்ட அனைவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது.
எனவே இது ஏதோ பாவச் செயல் போலவும் ,ஒழுக்க நெறியிலிருந்து விலகுதல் போலவும் பெண்கள் அஞ்ச வேண்டாம்.கிராமப் புறங்களில் 'நாத்து நடவு''என்பார்கள்.
ஓரிடத்தில் விளைவிக்கப் பட்ட நாத்தைப் பிடுங்கி பாத்தியில் நடுவது போலத்தான்.
இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த அறிவுத்திறனோடும் விளங்குகின்றனர் என்பது கண்கூடு.
தாய்மை அடைய முடியாமல்,சமூகத்தின் கேலிக்கும்,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வேதனைப்படும் மகளிர் விரும்பினால் இம்முறையைத் தைரியமாகத் தேர்ந்தெடுக்கலாம்.இதில் எந்த பாவமும் இல்லை.பணம் மட்டுமே இலட்சக் கணக்கில் செலவாகும்.இதன் வெற்றி வாய்ப்பு சதவீதம் 30 -40 ஆக இருந்தாலும் நம்பிக்கையொன்றோ வேண்டியது
இயற்கையின் வஞ்சனையை விஞ்ஞானத்தால் வெல்லுங்கள் தோழியரே!

[வாடகை தாய்கள் மற்றும் தத்தெடுத்தல்....பற்றி எனது அடுத்த பதிவுகளில் பார்ப்போம்]

Wednesday, March 07, 2007

மகளிர் தினம்..ஒரு கண்ணோட்டம்

நாளை மார்ச் 8 மகளிர் தினம்.
வருடத்தில் 365 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் மகளிர்க்கானதா?
மாட்டுப் பொங்கலுக்கும் மகளிர் தினத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
வருடம் முழுவதும் வண்டியிழுத்து,ஏர் ஓட்டி வேலை செய்தாலும் ,வருடத்தில் ஒரு நாள் குளிப்பாட்டி மாலையிட்டு கொம்பு சீவி அலங்கரிக்கப்படும் மாட்டுக்கு மாட்டுப் பொங்கல் மட்டும் விசேஷமானது.மகளிர் தினமும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.
வருடத்தில் ஒரு நாள் 'பிறந்த நாள் ' போல என வாதிடுவோரிடம் கேட்கிறேன் ஆடவர்தினம் என்று ஏதும் உண்டா?
மகளிர்க் கெதிரான வன்முறைகளும்,பாலியல் பலாத்காரங்களும் தொடரும் வரை உண்மையான பெண்ணூரிமையும்,சுதந்திரமும் கிடைக்கும் வரை மகளிர் தினம் என்பது பெயரளவில் மட்டுமே.அது இன்னுமொரு அட்ச்ய திரிதியைப் போல் வாங்கி மகிழ மட்டுமே.
'ஓரு பெண் என்று நள்ளிரவில் தனியாகச் சுதந்திரமாக வெளியே சொல்ல முடியுமோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் பெற்றதாகப் பொருள்' என்று மகாத்மா சொன்னது இன்னும் கனவாகவே உள்ளது.

ஒரு ஆடவன் வளர்ந்து ஆளாகி தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை தேடும் கட்டத்தில் தன்னை நேசிக்கக் கூடிய தன்னோடு தோள் சேர்ந்து வாழக் கூடிய துணையாகத் தேடாமல் தன்னை விட வசதியான ,நிறைய கொண்டுவரக்கூடிய பெண்ணா என்றுதானே பார்க்கிறான்.
அப்படியே வந்தாலும் தனக்கு அடங்கி நடக்ககூடிய ,தனக்கு வேண்டிய வசதிகளை தன் பிறந்தவீட்டிலிருந்து மேலும் மேலும் பெற்றுத் தரக் கூடியவளாக இருக்கவே விரும்புகிறான்.

இந்த நிலை அடிமட்ட வர்க்கத்தில் மட்டுமில்லை.ஒரு பல்கலைகழகத் துணைவேந்தர் முதல் பிரபலமான நடிகர் குடும்பம்வரை வியாபித்துக் காணப்படுகிறது.

நான் அப்படிப்பட்டவன் இல்லை எனக்கும் பெண் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு அடுத்தவர் தயவை எதிர்பார்க்க மாட்டேன் என்று சொல்லக் கூடிய பலரும் தன்னைச் சார்ந்த பெண் தனக்குக் கட்டுப் பட்டிருக்கவே நினைப்பர்.

ஒரு பெண்ணின் உண்மையான சுதந்திரம் என்பது அவளின் கருத்துச் சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது.'பொட்டச்சிக்கு என்ன தெரியும் வாயை மூடிக் கொண்டு பேசாம் இரு' எனும் ஆடவன் குரல் ஒலிக்கும்வரை பெண்ணுரிமை ஏட்டுச் சுரைக்காய்தான்.

பெண்ணுரிமை என்று முழங்குவோர் முதலில் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்.ஒரு ஆணுக்கு எத்துணை உரிமையுண்டோ அத்துணையும் பெண்ணுக்கும் கிடைக்கட்டும்.ஒவ்வொரு குடும்பமும் திருந்தினாலே மொத்தமாக சமுதாய மற்றம் ஏற்படும்.

''அவள் அழகாயில்லாததால் என் தங்கையானாள்' என்று கவிதை எழுதினால் ரசிக்கும் ஆடவர் போக்கு மாறும்வரை,தன் துணையைத்தவிர சக பெண்டிரை தாயாய்,சகோதரியாய் மகளாய்ப் பார்க்கும் வரை மகளிர்தினம் எந்த சமுதாயப் புரட்சியையும் ஏற்படுத்திவிட முடியாது.
பெண்ணென்ற அலட்சியப் போக்கும்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனோபாவமும் மாறி, பெண்களுக்கெதிரான சாதீய,மத,சமுதாய்க் கொடுமைகளும் வன்முறைகளும் களையப்படும்வரை மகளிர் தினம் என்பது பத்தோடு பதின்னொன்றான ஒரு கலாச்சார கொண்டாட்டமே அல்லாது உண்மையான பெண்ணுரிமைக்கோ சமத்துவத்திற்கோ அடிகோலும் வித்தாக முடியாது.

Tuesday, March 06, 2007

தலைக் கவசம் ..ஒரு தெரியாத சங்கதி

தமிழக அரச்சின் சமீபத்திய உத்தரவு ஒன்று அநேகருக்கும் தெரிந்திருக்கும்.
வரும் ஜூன் 1 ந்தேதி முதல் தலைக் கவசம் [ஹெல்மெட்] கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் அவசியம் லைசென்ஸுடன் இனி கவசத்தையும் சுமக்க வேண்டும்.
கடந்த வருடத்தில் மட்டும் சாலை விபத்துக்கள் சுமார் 4500 உயிர்களை பலி கொண்டிருப்பதாக அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து 'டெக்கான்'என்கிற நுகர்வோர் அமைப்பு நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறது.ஆணையை எதிர்த்து அல்ல.மத்திய அரசின் ஒரு ஆணையை அமலாக்கி ,அதன் மூலம் பல நுகர்வோர் பயன் பெறவே கோர்ட்டுக்குப் போயிருக்கின்றனர்.
இப்பவெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் பொருட்களின் மீதான வரி ஏய்ப்பை நுகர்வோர் அறியும் படி ஒரு சில விளம்பரங்களைக் காணலாம்.'ஜஹாஓ கிருஹக் ஜஹாஓ' என்ற இந்தி
வார்த்தையின் தமிழாக்கமாக,'விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள் 'என்று வரும்.
உப்புக்கும் மளிகைப் பொருட்களுக்கும் விழித்திருக்கச் சொல்லும் மத்திய,மாநில அரசுகள் முக்கியமான ஒரு அரசாணை விஷயத்தில் இதுவரை தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது என்பது
'டெக்கான்'அமைப்பு கோர்ட்டுக்குப் போகும் முன்னால் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது தெரியாது. 2005 செப்டம்பர் மாதம்மத்திய மோட்டார் வாகன சட்டம் 138-f ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அதில் ஒரு வாடிக்கையாளர் இரு சக்கரவாகனம் வாங்கும் போது அத்துடன் ஹெல்மெட்டையும் உற்பத்தி செய்த நிறுவனம் தர வேண்டும் என்பதுதான் அது.அதுவும் இந்திய அரசின் தரக் காட்டுப் பாட்டு விதிப்படியான தரத்துடன் இருத்தல் வேண்டும்.
வாகனத்துடன் சீட்,டயர் போன்றவைத் தரப் படுவது போலவஇலவசமாகவேத் தரப்பட வேண்டும்.உற்பத்திச் செலவுடன் விலையைக் கூட்டக் கூடாது.இது ஏப்ரல் 2006 லிருந்து நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் இன்றைய தேதிவரை எந்த நிறுவனமும் அதைக் கடைபிடிக்கவில்லை.நுகர்வோர் அமைப்புகளும் கண்டு கொள்ளவில்லை.
இப்போது கட்டாயமாக தலைக் கவசம் வேண்டுமென்பதால் இது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட இருக்கிறது.
2004 லிலேயே சட்டம் போடப்பட்டதால் அன்றிலிருந்து இன்றுவரை விற்பனையான அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் [சுமார் 19 லட்சம்]ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும்.இனி தயாரித்து வரும் வாகனங்கள் ஹெல்மெட்டுடனே வர வேண்டும் என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
மேலும் இனி வாகனங்களுடன் அளிக்கப்படக் கூடிய இலவச உதிரி பாகங்களின் விபரங்களும் அளிக்கப்பட வேண்டும்.
டீலர்களிடம் கேட்டால் இனி நுகர்வோர் வற்புறுத்தினால் நாங்கள் கம்பெனியிடம் சொல்வோம் என்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை இது குறித்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.தங்களுக்கு ஆதாயமான விஷயங்களுக்குத் தொண்டர்களை உசுப்பி விடும் சுயநல அரசியல்வாதிகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்குத் தேவையான ஒரு பொருளின் அவசியத்தை உணராமல் மெத்தனமாக இருக்கின்றனர்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்,'இது கடந்த ஆட்சியின் குறைபாடு.இப்போதுதான் கவனத்திற்கு வந்திருக்கிறது ஆவன செய்வோம் 'என்கிறார்.
மக்கள் உயிர் பிரச்சனை எனும் போது கூட ஆளுங்கட்சி,எதிர்கட்சி என ஏலம்போடும் சமூக அமைப்பில் இருக்கும் நாம் எப்போது விழிப்பது?
இது போன்ற நுகர்வோர் அமைப்புகள்தான் நம் உரிமையைப் போராடி பெற்றுத்தர வேண்டும்.

Monday, March 05, 2007

ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்

ஆட்டக்கடிச்சி,மாட்டைக் கடிச்சி கடைசியிலே மனுஷனைக் கடிச்ச கதைன்னு சொல்றது போல
பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப் படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி,ஏத்துக்கூலி,வண்டி வாடகை ,எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர்.இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும் ,இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டு
வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளூ வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம்.இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை.எடை மோசடி,சுகாதாரமற்ற சூழல் மாறும்.விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்கு தேவையான முன்பணம் கொடுத்து,பின்னர் கொள்முதல் செய்கிறோம் என்வே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
சுத்தம்,சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதை கனவில்கூட நினைக்க முடியுமா?
சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில்,12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும் .இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது.மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம் .கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.