Wednesday, August 13, 2008

உலக நாயகனும்..குசேலனும்

எல்லோரும் கிழிகிழி ன்னு கிழிச்சி ஓய்ந்த பிறகு நானென்ன புதுசா விமர்சிக்கப் போகிறேன்.
ஆனா முந்தைய பதிவுகளிலிருந்து கொஞ்சம் விலகி லைட்டான மேட்டர் சொல்லலாம்னுதான்
சினிமா விமர்சனம்.
எத்தனையோ படங்கள் வந்துகிட்டுதான் இருக்கு.ஆனால் ரஜினி ,கமல் படத்துக்கு மட்டும் ஒரு எதிர்பார்ப்பும் ,வந்த பிறகான விமர்சனமும் விதிவிலக்கு.
சிவாஜி,எம்ஜியாருக்குப் பிறகு இந்த ஜோடிகள்தான் அதிக எதிர்பார்ப்பையும்,இரசிகர் வட்டத்தையும் கொண்டவை.
எல்லாப் படங்களையும் போல வந்து போகும் போது விமர்சனத்தின் கடுமை குறைவாகவே இருக்கும்.
உலகத் தரம்,உலக நாயகன்,உலகம் முழுவது ரிலீஸ் இப்படியான எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்ட பிறகு விமர்சிக்க கழுகுப் பார்வைதான் தேவைப் படுகிறது.

முதல்ல கமலின் தசாவதாரம்;கமலின் உழைப்பு நடிப்பின் மீதான சிரத்தை பற்றி என்றுமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை மற்றும் காரெக்டரில் புதுமை புகுத்தியதில் இவரே முன்னோடி.
தசாவதாரத்திலும் அப்படியே.ஆனால் அதை முன்னைக்கு பத்து மடங்கு அதிகமாக செய்திருக்கிறார்.
பத்து வேடங்களிலும் ஒப்பனைக்கும்,பாடி லாங்க்வேஜ்,உச்சரிப்பு என மிக முயன்றிருக்கிறார்.
ஆனால் கதை என்று பார்க்கும் போது ஒன்றுமே இல்லாதது போல தோன்றுகிறது.
இதற்கு முன் 'விக்ரம்' னு ஒரு படத்தில் 'மிசைல்' எனப்படும் ஏவுகணை திருடு போவது போன்ற கதை வந்திருக்கிறது.அந்தப் படமும் சரியான மசாலாக் கலவை,சுஜாதாவின் வசனம்,சத்யராஜின் நடிப்பு என ஓடியது.
தசாவதாரத்தில் மிசைலுக்குப் பதில் வைரஸ் அவ்வளவுதான்.
ஆனால் இத்துடன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்து நம்பி வரலாற்றையும் இருபத்தியொராம் நூற்றாண்டின் சுனாமி தாக்குதலையும் சாமர்த்தியாமாக பிணைத்திருப்பதை
யும் கூட பாராட்டலாம்.ஆனால் இதில் கமல் சொல்ல வருவது என்ன?
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலே அவருக்கே தெளிவில்லையா?
அது போகட்டும் உலகத் தரம் வாய்ந்த ஒரு படத்தில் என் கண்ணுக்கு புலப்பட்ட சில சொதப்பல்கள்.
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷு க்கு NaCl னா என்னன்னு தெரியலை. What is NaCl? எனக் கேட்கிறார்.
விஞ்ஞானி கோவிந்த் ஆய்வக குரங்கு 'ஹனு' வைரஸைத் தின்று துடித்துச் சாகும் போது வைரஸ் பரவாமலிருக்க NaCl என்ற பட்டனை அழுத்தி சரி செய்கிறார்.
ஆனால் அதே விஞ்ஞானி படம் முழுக்க வைரஸ் குப்பியை பெருமாள் சிலைக்குள் வைத்துக் கொண்டு எப்படி அழிப்பது எனத் தெரியாமல் விழிக்கும் போது பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் இரு தொழிலாளிகள் உப்பைத் தேய்த்துக் குளிப்பதைப் பார்த்த பிறகுதான்
'ஆ NaCl கிருமி நீக்கும்' என்பதை உணர்ந்து 'இங்கே பீச்சுக்கு எப்படிப் போகனும்' என்கிறார்.கொடுமையே.
அடுத்து வைரஸ் பரவி உலகமே அழியக்கூடாதுன்னு நினைக்கும் பரோபகாரி சுனாமிக் காட்சியில் கடற்கரையில் அங்கும் இங்கும் அல்லோலப் பட்டு மக்கள் ஓடும் பிண்ணனிக் காட்சியில் நாயகி அசினுடன் ஒதுங்கி காதல் பேசுகிறார்.
கடற்கரையில் அத்தனை ஓலமும் அவலமும் நடந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றாமல் தனியாக என்ன வசனம்?
கடைசிவரை புஷ்ஷும் கலைஞரும் ஏன் ஒன்றாக வந்தார்கள் யாரைப் பாராட்டினார்கள் எனத் தெரியவில்லை.
கமலைப் பாராட்டத் தான் அந்த விழா என்றால் கோவிந்த் அப்படியென்ன சாதித்துவிட்டார்?புரியலை.
அது போல கஜல் பாடகர் தொண்டையைத் துளைத்த குண்டு சரியாக 'கான்சர்' இருந்த பகுதியை மட்டும் அழித்து விட்டதால் ஆப்பரேஷன் தேவையில்லையாம்.அப்படி நடக்க சாத்தியமுள்ளதா மருத்துவர்கள்தான் சொல்லனும்.

அடுத்து குசேலன்;
புராணத்தில் நட்புக்கு துரியோதன் -கர்ணன் போல கிருஷ்ணன் - குசேலன் சொல்வார்கள்.
அப்படியொரு குசேல நட்புத்தான் ரஜனியுடையதாம்.ஆனால் அந்த நண்பனுக்காக ஒரே ஒரு காட்சியில் கூட அவர் நினைக்கவோ,பேசவோ செய்யவில்லை.அதெப்படி கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நண்பன் நினைப்பு வருது?
என்னதான் சூப்பர் ஸ்டாரென்றாலும் அத்தனை இசட் பிரிவு பாதுகாப்பும் தனிப் போலீஸ் படையும் தேவையா? மக்களிடம் நேசமாக உள்ள தலைவர்கள் பெரும் மக்கட் படையையே தன் பின்னால் வைத்திருந்த தலைவர்கள் கூட இப்படியொரு பாதுகாப்பு வேண்ட மாட்டார்கள்.
கதைப்படி சூப்பர் ஸ்டார் அஷோக் குமார் அரசியல் தொடர்புடையவரும் இல்லை.
எந்த ஊரில் இப்படியொரு டூரிஸ்ட் பங்களா இருக்கு.அதுவும் மறையூர் போன்ற படு கிராமத்தில் இப்படியொரு செட்டிங் போட்டு பங்களா ஆளுயர மதிற் சுவர்கள் தேவையா?
குசேலன் என்பது நட்பைக் குறிக்கும் கதையாக இருக்கும் பட்சத்தில் இப்படி செட்டிங்,கிராபிக்ஸ் என கண்கட்டு வித்தைகள் மட்டும் இருந்தால் போதுமா?நட்பின் ஆழத்தைக் காட்டும் ஒரு காட்சிகூட இல்லையே?.
நட்பைக் குறித்த அருமையான படங்கள் பல முன்பே வந்திருக்கின்றன.
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் குறைந்த பட்ஜெட்டில் இப்பவும் வந்து கொண்டுதானிருக்கின்றன.
இந்த இரண்டு படங்களிலும் தரம்,நல்ல கதையம்சம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே.
தங்களின் இரசிகர் வட்டத்தைக் கவர்வதிலும்,ஒரு மாஸ் இமேஜ் உருவாக்குவதிலும் உலகம் முழுக்கப் பேசப்பட வைப்பதிலுமே நோக்கம் இருக்கிறது.
நவீன யுக்திகள்,கணிணி நுட்பங்கள் பிரமிப்பைத் தருகின்றன என்பதில் ஐயமில்லை.
ஆனால் இதுதான் உலகின் சிறந்த படம்,உலகின் சிறந்த கதையம்சம் எனச் சொல்லுமளவுக்கு இரண்டிலுமே ஒன்றுமில்லை.
மூன்று மணி நேரத்தை தொய்வில்லாமல் நகர்த்தி,பார்க்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துவதில் உள்ள 'ரிச்னெஸ்' 'ஹீரோயிசம்' மட்டும் நிச்சயம் உண்டு.

6 comments:

  1. தரமான விமர்சனம் நண்பரே வாழ்த்துக்கள்............... .

    ReplyDelete
  2. //அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷு க்கு NaCl னா என்னன்னு தெரியலை. What is NaCl? எனக் கேட்கிறார்.//

    ஜனாதிபதி ஆவதற்கு முன் இந்தியாவைப் பற்றியே ஒன்றும் அறிந்திராத முட்டாளாச்சே

    ReplyDelete
  3. நண்பரே, அந்த புஷுக்கு Nacl என்றால் என்னவென்று தெரியாமல் இருக்குமா என்ற வரியைத்தவிர நல்ல நச்சென்ற விமர்சனம்.

    ReplyDelete
  4. கமல் முதலிலேயே சொல்கிறார் கயாஸ் தியரியை முயற்சித்திருப்பதாக.
    தொடர்பில்லாத நபர்கள் சம்பந்தப் பட்டாலும். நடைபெறும் எல்லா செயல்களும் தொடர்பானவையாகவே இருக்கும்.

    தொடர்ச்சியான கதை ஒன்று கயாஸ் தியரியில் இருக்காது. இருக்கவம் தேவையில்லை

    சிவாஸி கணேசன் தொடர்பற்ற 9 ரோல்களில் வந்த போது இவரே ஏன் 9 ரோல்களில் வரவேண்டும் என்று யாரும் கேட்கவிலலை.

    ஆனால் கமலைக் கேட்கிறார்கள்.

    சாதனைகளை சீரணிக்க இயலாத சாதனை செய்யத் தைரியமில்லாதவர்களின் வயிற்றெரிச்சல் தான் இது.

    ReplyDelete
  5. சுதந்திரத்தை கொண்டாடுவோம்!

    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
    http://mohideen44.blogspot.com

    ReplyDelete