Monday, August 11, 2008

கிளைசெமிக் இண்டெக்ஸ் [glycemic index]

உடல்நலம் குறித்த விழுப்புணர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவது இரத்தச் சர்க்கரையின் கட்டுப்பாடும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும் தான்.
ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகக் கருதப் பட்டது டயபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி.
அதிக அளவு இனிப்பை உண்பதாலேயே வரும் என்ற பொதுவான கருத்தும் உண்டு.ஆனால் என்ன உணவை உண்கிறோம் எப்படி உண்கிறோம் என்பதில்தான் அதை நாம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
இன்று 100க்கு 80 சதவீதம் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களே.
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு காபியோ டீயோ கொடுக்கும் போது தவறாமல் கேட்பது சர்க்கரை சேர்க்கவா வேண்டாமா என்பதே.
இது மருத்துவம் சார்ந்த கட்டுரையோ சர்க்கரை வியாதிக்கான தீர்வோ இல்லை.
சர்க்கரையை கட்டுப்படுத்த அல்லது அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவு உணவுப் பொருட்கள் குறித்ததே.
கார்போஹைட்ரேட்ஸில் நல்லவை கெட்டவை னு தரம் உண்டு.

ஒரு மாவுப் பொருள் உட்கொள்ளப் பட்ட பிறகு வேதியியல் மாற்றத்தால் சிதைவுற்று குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைப் பொருளாக மாறி இரத்தத்தில் எந்த அளவு எவ்வளவு வேகமாக கலக்கிறது என்பதையே இந்த 'கிளைசெமிக் குறியீடு' காட்டுகிறது.
இதுவே GI index எனப் படுகிறது.

குளுக்கோஸின் குறியீட்டை 100 எனக் கொண்டு மாவுச் சத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவை வைத்தே நல்ல கார்போஹைட்ரேட்ஸ் கெட்டவை எனப் பிரிக்கப் படுகிறது.

கிளைசெமிக் குறியீடு 55 வரை உள்ளவை குறைந்த GI வகை 56-69 வரை
உள்ளவை நடுத்தரமானவ 70 க்கு மேற்பட்டவை அதிக GI உள்ளவை.
GI அதிகமாக உள்ள உணவுகள் விரைவில் செரித்து இரத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் உடனடியான சக்தி உடலுக்குக் கிடைத்தாலும் அந்த அதிகப் படியான சர்க்கரையை சமன் செய்ய இன்சுலின் சுரப்பும் அவசியமாகிறது.தேவைக்கு அதிகமான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்படுகிறது.

சீரியல் ,பாஸ்தா,வேகவைத்த உருளைக்கிழங்கு,சோடாபானங்கள்,அரிசி, அடுமனை உணவுகள் வொய்ட் பிரட் போன்றவைகளின் கிளைசெமிக் குறியீடு அதிகம்.
பாப்கார்ன்,ஓட்ஸ்,வாழப்பழம்,அன்னாசி பாஸ்மதி,மூல்கிரி அரிசி இவைகளில் GI மிதமாக உள்ளது.
முழுதானியங்கள்,பழங்கள்,பச்சைக் காய்கறிகள்,கொழுப்பு நீக்கப்பட்ட பால் இவற்றில் 50 க்கும் குறைவாக உள்ளது.

இந்த கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ள உணவை உண்பதால் இரத்த சர்க்கரை அதிகரிப்பு
,உயர் இரத்த அழுத்தம்,இரத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்தல்,உடல் பருமன்,அளவுக்கதிகமான பசி உணர்வு ஏற்படுதலோடு கான்சருக்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.
காலில் இறக்கைக் கட்டி பறக்கும் அவசர யுகத்தில் இதை எல்லாம் கவனிக்க நேரமெங்கே என நினைப்போம்,
சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் போல அதிக GIஉள்ள உணவோடு குறைந்த GI உள்ளதை சேர்த்து சாப்பிடும்போது சமனப் படுகிறது.
பாஸ்தா நூடூல்ஸோடு கொஞ்சம் சாலட்,காலை நேரத்து சீரியலோடு கொஞ்சம் ஓட்ஸ் பார்லி அல்லது ஸ்ட்ராபெர்ரி இப்படி பழகலாம்.

எந்த விதமான கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுகிறோம் என்பதை விட எவ்வளவு அளவு சாப்பிடுகிறோம் அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதும் சேர்ந்தே நம் உணவின் GI அளவை நிர்ணயிக்கிறது.
அதிக நேரம் சமைக்கப்படும் உணவுகளின் நார்ச் சத்தின் தன்மை மாறி அதன் குறியீட்டு அளவும் மாறிவிடுகிறது.உடனடியாக செரிக்கப் பட்டு உணவில் சர்க்கரையின் அளவை துரிதமாக அதிகப் படுத்துகிறது.
இந்த கிளைசெமிக் குறியீட்டை மாற்றக் கூடிய காரணிகள்
1.ஓரே நேரத்தில் எந்த உணவோடு எதைச் சேர்த்து சாப்பிடுகிறோம்
2.எப்படி சமைக்கப் பட்டிருக்கிறது
3.உடலின் உணவை ஏற்றுக் கொள்ளும் தன்மை
4.எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே.

சர்க்கரை நோயின் தாக்கம் எத்தனை கொடியது என்பது தெரியும்.அதனால் இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம் என்பதாலேயே இந்தப் பதிவு.
மேலும் விபரமறிய வலையில் நிறைய தளங்கள் உள்ளன.

3 comments:

  1. மிக பயனுள்ள அவசியமான பதிவு.

    ReplyDelete
  2. நல்ல உபயோகமான பதிவு.... இது போன்று நிறைய எழுதுங்கள்.

    இராம்

    ReplyDelete
  3. நன்றி ராம்ஸ்
    மங்களூர் சிவா

    ReplyDelete