Monday, August 10, 2009

நட --------- ராஜா

எல்லா காலத்திற்கும் எல்லா வயதினருக்கும் ஏற்ற ஒரு உடற்பயிற்சி இருக்குமானால் அது 'வாக்கிங்' தான் என்பதில் சந்தேகமில்லை.
நடைப் பயிற்சி நம் உடல் உறுப்புகளை மட்டுமல்லாது மனதுக்கும் புத்துணர்வைத் தருகிறது.
மனித உடலின் பல உறுப்புகள் இயல்பாகவே நடத்தலோடு தொடர்புடையவை.
பாதம் ,கால்கள் ,இடுப்புப் பகுதியோடு,வயிற்றுத் தசைகளும் ஒத்துழைக்கின்றன.நடக்கும் போது உதரவிதானம் ,விலா எலும்புகள் நன்றாக வேலை செய்வதால் நாம் வேகமாக மூச்சை இழுத்து விட முடிகிறது.
இப்போதெல்லாம் 'வாக்கிங்' என்பது ஆரோக்யத்துக்காக இல்லாமல் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவும் ஆகி விட்டது.
வேலைக்குப் போகும் பெண்கள் வாக்கிங் போக எனக்கெங்கே நேரமிருக்கு என்பதும்,வீட்டிலிருக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு நூறு முறை நான் அடுப்படிக்கும் தெருவாசலுக்கும் நடையா நடக்கிறேன் இதுல தனியா என்ன வாக்கிங் வேண்டியிருக்குன்னு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அலுவலகம்,அன்றாட வேலை,வீடு இங்கெல்லாம் அடிக்கடி நடப்பது மாடி ஏறி இறங்குவது என்பதெல்லாம் முறையான நடைப் பயிற்சி ஆகாது .உடற்பயிற்சியும் ஆகாது என்பது மருத்துவர்களின் கூற்று.
நாளொன்றுக்கு சுமார் 30 முதல் 45 நிமிடமாவது சீரான வேகத்தில் குறைந்தது 2 கி.மீ தூரம் நடப்பதென்பதே சரியான நடைப் பயிற்சியாகும்.
நடைபயிற்சி என்னென்ன விதமாக நம் உடலுக்கு நன்மை செய்கிறது என்பதைப் பாருங்கள் .பிறகு நாலு தெரு தள்ளிப் போய்வருவது என்றாலும் டூ விலரை எடுக்கும் பழக்கத்தை விட்டுவிடுவீர்கள்.
ஏரோபிக்:
நடைப் பயிற்சி உடலை உறுதியாக வைக்க உதவுகிறது. ஓடுதல்,பளு தூக்குதல் போன்ற மற்ற கடினமான உடற்பயிற்சிகள் போல இல்லாமல் ,நடக்கும் போது உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜன் முழுமையாக கிடைக்கிறது.இதனால் உடலின் எந்த திசுக்களும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் திணறுவது இல்லை.எனவேதான் 80,90 வயதானாலும் நடைப் பயிற்சி சாத்தியம்.
சுவாசம்:
சீரான நடைப் பயிற்சி நுரையீரல் மார்பு தசைகளுக்கு பயிற்சியளித்து நல்ல சுத்தமான காற்றை அதிக அளவில் சுவாசிக்கவும்,தேவையில்லாத காற்றை வெளித்தள்ளவும் செய்கிறது.
இதயம்:
இதயத்திற்கும்,இரத்தக்குழாய்களுக்கும் நல்ல பயிற்சியளித்து அடைப்பு வராமல் தடுக்கிறது.இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை [HDL-high density lipoprotein]அதிகரிக்கச் செய்கிறது.உடல் முழுவதற்கும் சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி செய்வதால் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக் போன்ற அபாயங்களிலிருந்து காக்கிறது.
இரத்தக் கொதிப்பு:
இரத்தக் கொதிப்பு எனப்படும் 'பிளட் பிரஷர்' [BP] சர்வசாதாரண்மாக இளையவர் முதல் முதியவர் வரை உள்ளது.இப்போதுள்ள வாழ்க்கை முறைகள்,உணவுப் பழக்க வழக்கங்களே இதற்கு காரணம்.இந்த பி.பி க்கு ஒரு சிறந்த 'கடிவாளம்' நடைப்பயிற்சி என்றால் மிகையாகாது. மன அழுத்தத்தைக் குறைத்து இரத்தக்குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையை சமனப் படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுப்பதால் குறைந்த அல்லது அதிக இரத்த அழுத்தம் எட்டிப் பார்க்காது.
நீரிழிவு:
சர்க்கரை நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரு மருந்து நடைப் பயிற்சி.நடைப்பயிற்சியால் ஏற்படும் எடைக் குறைப்பு சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது.
எலும்பு:
உடலின் எலும்புகளை மூட்டுக்களை உறுதியாக்குகிறது.வயதான காலத்தில் ஏற்படக்கூடிய ஆஸ்டியோபோரிசிஸ் வராமல் எலும்புகளை உறுதிப் படுத்துகிறது.
சக்தி:
அதிகப்படியான கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மன இறுக்கத்தைத் தளர்த்தி புத்துணர்வைக் கொடுக்கிறது.
எப்படி நடப்பது?:
நிச்சயம் தினசரி பயிற்சியாக இருக்க வேண்டும்.ஆரம்பத்தில் ஆர்வமாக வாக்கிங் செய்து விட்டு விட்டுவிட்டால் அதுவரை கிடைத்த நன்மைகள் காணாமல் போய்,திரும்ப முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.
எடுத்த எடுப்பிலேயே 4,5 கி.மீ நடக்கிறேன் பேர்வழி என ஆரம்பிக்கக் கூடாது.
never bite off more than you can chew என்பது போல் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தையும் , நடக்க வேண்டிய தூரத்தையும் அதிகரிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டியவை:
இருதயக் கோளாறு உள்ளவர்கள்,
அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
உடல் ரீதியான தொந்தரவு உள்ளவர்கள்
நடைப்பயிற்சியின் போது தலை சுற்றல்,மயக்கமடைபவர்கள்
மார்புப் பகுதியில் வலி ,இறுக்கம் உணர்பவர்கள்
இவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு செய்யலாம்.

இனியென்ன?இத்தனை நன்மைகள் இருக்கும் போது அலட்சியம் ஏன்?தொடங்க வேண்டியதுதானே?
நட.....ராஜா

Saturday, August 08, 2009

கிரீன் டீ

தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக அளவில் உட்கொள்ளப்படும் பானம் 'டீ' எனப்படும் தேநீர்.

'கேமில்லா சினன்சிஸ்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆண்டுதோறும் விளையும் பசுமையான பயிரான தேயிலையின் வடி சாறே தேநீர் ஆகும்.
தாவரம் ஒன்றாக இருந்தாலும் அதன் தயாரிப்பு முறையில் மாறுபடும்போது டீ பலவகையாக வகைப் படுத்தப் படுகிறது. ஒய்ட் டீ,மஞ்சள் டீ,கறுப்பு டீ,கிரீன் டீ என வகைப்படுத்தப் படுகிறது.

பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று 'டானின்' வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.

கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய 'பாலிபீனால்கள்' சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
கிரீன் டீயில் உள்ள வேதிப் பொருட்களின் பெயர்கள் நமக்குத் தேவையில்லையென்றாலும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கிரீன் டீயில் எபிகேடசின்,எபிகேடசின் -3-கேலேட், எபிகேலோகேடசின்,எபிகேலோ கேடசின் -3-கேலேட்ஆகியவற்றோடுஃபுளூரைடுகள்,மாங்கனீசு,பொட்டாசியம்,
அரோடினாய்ட்ஸ்,காஃபின்,தெயோப்ஃலின்,தெயோஃபிளேவின்போன்ற சேர்மங்கள் உள்ளன.

உடலுக்குத் தேவையான 'ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்' கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது.வைட்டமின் 'சி' யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் 'ஈ' யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
கிரீன் டீ எந்த அளவிற்கு மருத்துவ குணம் கொண்டது என்பதை பாருங்கள்.
கேன்சர்:
கிரீன் டீயிலுள்ள பாலிபினால்கள் டியூமர் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.அவற்றின் DNA உருவாக்கத்தை தடுப்பதோடு நல்ல திசுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கான்சர் திசுக்களை அழிக்கின்றன.
நீரிழிவு:
கிரீன் டீ பாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும் சர்க்கரையைத் தடுத்து, ஸ்டார்ச் மெதுவாக சிதைவடையச் செய்வதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.அத்துடன் இது 'இன்சுலீனின்'செயல்பாட்டையும்'அதிகரிக்கிறது.
இதயம்:
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புச்சத்து LDL ,டிரைகிளிசரைடுகளின் அளவைக்கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பு எனப்படும் HDL ன் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஆர்த்ரைட்டீஸ்:
ஆர்த்ரைட்டீஸ் எனப்படும் எலும்பு சம்பந்தமான நோய்களிலிருந்தும் காக்கிறது.மூட்டுக்களை பலப்படுத்துவதிலும் கிரீன் டீ யின் பங்கு உண்டாம்.
ஒபிஸிட்டி:
உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி,கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனும் குறைய வாய்ப்பிருக்கிறது.
முதுமை:
வயதாவதைத் தடுக்க முடியாது என்றாலும் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுக்கலாமே.உடல் திசுக்களில் உற்பத்தியாகும் 'ஃபிரீ ராடிகல்' எனப்படும் தனி உறுப்புகளை உறிஞ்சப் படுவதால் ஏற்படும் DNA சிதைவு தடுக்கப்பட்டு எதிர்ப்பு சக்தி கூடுதலாகிறது.
பல்:
கிரீன் டீ யில் உள்ள ஃப்ளூரைடு பற்சிதைவு,பற்குழிகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
வாயில் உற்பத்தியாகக் கூடிய 'பாக்டீரியா'க்கள் வளர்ச்சியைத் தடுக்கவும்,அதன் காரணமாக வரும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள்,வாய் துர்நாற்றம் போகவும் உதவுகிறது.
அழகு:
கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறதாம்.

பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.

Friday, November 21, 2008

புவி வெப்பம் அதிகரித்தால் ?

புவி வெப்பம் [குளோபல் வார்மிங்] அதிகரிப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை நாம் பத்திரிக்கைச் செய்திகள்,கட்டுரைகள் மூலம் அறிந்திருக்கிறோம்.
பல பேர் அது குறித்த பதிவுகள் போட்டிருக்கிறார்கள்.
பல நூறு வார்த்தைகளில் அதன் விளைவுகளைக் கேட்டோ பார்த்தோ தெரிந்து கொள்வதை இந்தப் படங்கள் எப்படி புரிய வைக்கின்றன பாருங்கள்.

மெயிலில் வந்த கடிதத்திலிருந்து....










Saturday, August 16, 2008

நட்சத்திர நன்றி......[.கல்லுடன்]

சின்னச் சின்ன ஆனால் முக்கியமான வியாதிகளுக்கான தகவல்களைத் தந்திருக்கிறேன்.
இந்த வாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் மிக முக்கியமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு உடல் உபாதைக்கான குறிப்பைத் தந்து முடிக்க விரும்புகிறேன்.

அதுதான் ஸ்டோன் எனப்படும் கல் பிரச்சினை.

கல் என்றாலே அது சிறுநீர்ப்பையில் மட்டுமே உண்டாகும் என்ற பழைய கருத்து உண்டு.
மேலும் அந்தக் காலத்தில் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.அரிசியில் கல் இருந்து சரியாகக் களைந்து போடாவிட்டால் கல் உண்டாகும்.அதிலும் ஆண்களுக்குத்தான் வரும் என்று.

பின்னர்தான் தெரிந்தது கல் என்பது நம் உடம்பில் சேரும் சுண்ணாம்புச் சத்து 'கால்சியம் ஆக்ஸலேட் என்ற படிமமாகப் படிந்து அளவில் பெரிதாகிக் கொண்டே வந்து சிறிநீர்த்தாரையில் அடைப்பை ஏற்படுத்தும் போது மிகுந்த வலியைத் தரும் என்பது.

இந்தவலியானது விலாப்பகுதி அல்லது இடுப்பின் பின்புறம் துவங்கி அதிகரிக்கும்.சிலருக்கு வாந்தி ஏற்படும்.வலியின் தீவிரம் அதிகரித்தால் அடிக்கடி காய்ச்சல்கூட வரும்.சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையும் கடுமையான வலியும் உண்டாகும்.

சிறு நீரில் உள்ள யூரிக் அமிலம் கால்சியம் உப்பாக மாறி படிமமாக படிகிறது.
ஆக்ஸாலிக் அமிலம் அல்லது பொதுவாக அமிலத்தன்மை கொண்ட உணவுகள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் இந்த கல் பிரச்சினையை ஏற்படுத்தும்.
சிறுநீரகம் மட்டுமல்லாது,பித்தபை கல்,கால்பிளாடர் எனப்படும் கணையக்கல் என பல விதம் உண்டு.
ஆரம்ப காலத்தில் வலி தெரியாது. நம் உணவில் சேரும் கால்சியத்தின் அளவு மிகும் போது உடலில் உள்ள அமிலத்தன்மையால் உப்பாகி,உப்பு படிந்து கெட்டியாகி சிறு சிறு கற்களாக மாறி நகர முடியாமல் ஓரிடத்தில் அந்த தசைகளை உராயும் போதுதான் வலி தெரியும்.
மிகச் சிறிய அளவானது என்றால் மருந்துகள் மூலம் கரைக்கப்படும்.

அதிகமாக நீர் எடுத்துக் கொள்ளாததும் இப்படி ஓரிடத்தில் உப்பு படியக் காரணம்.
எப்படி அதிகம் தண்ணீரை ஊற்றி குழாய்களில் அடைப்பு இல்லாமல் கழுவுகிறோமோ அப்படி நாம் உட்கொள்ளும் நீர் உப்பைப் படியாமல் வெளியேற்றிவிடும்.
கல்லின் அளவு பெரிதாக இருப்பின் அறுவைச் சிகைச்சை ஒன்றே வழியாகும்.

முட்டைகோஸ்,காலிபிளவர்,கொய்யா,மாதுளம் பழம் நண்டு,பால் இப்படி கால்சியம் செறிந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஆரம்ப நிலை என்றால் மிகுந்த தண்ணீர்,இளநீர்,குளுக்கோஸ் முதலிய பானங்களோடு,வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம்,கொள்ளுப் பயிறின் சூப் அல்லது ரசம் நல்ல பலனளிக்கும்.

அதிகம் எழுத நேரமில்லாது போனாலும் நித்தம் ஒன்றேனும் எழுத வேண்டும் என முடிந்தவரை முயற்சித்து எழுதி விட்டேன்.
நட்சத்திர வாய்ப்பு வழங்கிய தமிழ்மணத்திற்கும்
பதிவுகளைப் படித்த நண்பர்களுக்கும் நன்றி

வலியும்,வலிநிவாரணிகளும்

வலியும் வலி நிவாரணியும் என்று சொன்னதும் வழக்கம் போல ஏதோ மருத்துவக் கட்டுரை என நினைப்பீங்க.
உடல் வலிக்கு எந்த மருந்துக் கடையிலும் மாத்திரை கிடைக்கும்.
ஆனால் மனவலிக்கு ஏது மாத்திரை.
மனவலி எப்போது ஏற்படுகிறது.நாம் ஆசைப்பட்டபடி ஏதும் நடக்கவில்லையென்றாலோ அல்லது வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலோ மனதில் ஏற்படுகின்ற பாரம் அயர்ச்சியே மனவலியாகும்.
எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது வாழவே பிடிக்கவில்லை என்ற எண்ணமும் அல்லது தற்கொலைக்கான முயற்சியும் கூட ஆளாளுக்கு மாறுபடும்.
மன வலியின் வேதனை அதிகமா கொஞ்சமா என்பது அந்த வேதனையின் தன்மையில் மட்டுமல்ல நாம் அதை எப்படி அணுகுகிறோம் என்பதிலும் அடங்கியுள்ளது.
கையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில் கரைத்துப் பருகினால் உப்பின் சுவை கரிக்கும்.ஆனால் அதே உப்பை ஒரு ஏரியில் கரைத்துப் பருகினால் உப்பின் தன்மையே தெரியாது.
உப்பின் அளவு ஒன்றாயினும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் அதன் சுவை மாறுபடுவது போல தோல்வி அல்லது வேதனையின் தாக்கமும் நாம் எப்படி அதை அணுகி சூழ்நிலைகளைச் சமாளிக்கிறோம் என்பதில் மாறுபடுகிறது.
ஒவ்வொருவருமே ஆசைப்பட்டது கிடைக்கனும் என்று நினைப்போம்.ஏதோ அதிசய அலாவுதீன் மாய விளக்கு கொடுப்பது போல வாழ்க்கையில் கேட்டதெல்லாம் கிடைக்கனும்.அது கடவுளின் கருணை என்றும் ,கிடைக்காத போது கடவுளுக்கு கருணையே இல்லையென்றும் புலம்புவோம்.
கேட்டதெல்லாம் தானாகவே கிடைக்க வாழ்க்கையென்ன மாய விளக்கா இல்லை அலாவுதீன் பூதமா?
ஆசைப் படுதல் தப்பில்லை. ஆனால் அதை அடைய நாமென்ன முயற்சி செய்திருக்கிறோம் என்பதே கேள்வி.
இந்த வாழ்க்கை நம்முடையது.இதில் ஏற்படும் எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை உணர்ந்தால் வலிகளை மாற்றி சாதனைகளாக்க முடியும்.
முதலில் வலிகளுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
மனிதர்களா?
சூழ்நிலைகளால் ஏற்படும் மாறுதல்களா?
நிகழ்வுகளா எனப் பார்த்தால்
முதலில் மனிதர்களால் ஏற்படும் வலிகள்
யாரும் நமக்கு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வலி ஏற்படுத்துவதில்லை .சிலநேரம் அப்படி நேர்ந்தாலும் ,பல நேரங்களில் இவர்கள் நமக்கு வேண்டியவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள் என்ற மன்னிக்கும் பாங்கு இருந்தால் வலியின் அளவு குறைந்துவிடும்.
நிகழ்வுகள் என்பது நம் பிரயத்தனத்திற்கு அப்பாற்பட்டவை.நம் கை மீறிய செயல்களோ ,இழப்புகளோ நம்மால் ஏற்படுவதில்லை.அதிலிருந்து மீண்டு வர வேண்டுமே தவிர வருத்தப் பட்டுக் கொண்டிருந்தால் வலி மிகவேச் செய்யும்
சூழ்நிலைகளையும் குறை சொல்லாமல் அந்த எங்கு தப்பு நடந்தது அதை எப்படிச் சரி செய்தால் நல்லது என்று உணர முற்படனும்.
வலிக்கிறதே எனப் புலம்பால் அதிலிருந்து விட்டு ஒதுங்கி நின்று அதன் காரணகாரியங்களை நோக்கும் போது வலியின் தன்மை குறைவதோடு நம்மிலிருந்து வேறுபட்டு புதிய கோணத்தில் பார்க்க முடியும்.
பொதுவாக மனித மனம் உணர்ச்சிகளால் ஆனாதாகையால் எல்லா வலிகளுக்குமே அவையே காரணமாகின்றன.
நம்மை ஆட்டிப் படைக்கும் உணர்ச்சிகளின் கலவையை நேர்மறையாகவும் அல்லது எதிர்மறையாகவும் வகைப் படுத்தலாம்.
ஏலை வாய்ப்பு,உடல்நலம்,வெற்றிகள்,இலாபம் இவை நேர்மறையான உணர்ச்சிகளாக சந்தோஷத்திற்கு அடிகோலும் என்றால்,
தோல்விகள்,வேதனைகள்.இழப்புகள்,அவமானம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகளாக மனதின் வலியை அதிகரிக்கச் செய்யும்.
நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.

ஒரு தோல்வியை நிகழ்வை எப்படி எதிர் கொள்கிறோம் எப்படி சீர்தூக்கிப் பர்க்கிறோம் என்பதில்தான் மன வலிக்கான மருந்து இருக்கிறது.
ஒவ்வொரு செயலிலும் உள்ள திட்டமிடுதல்,அதைப்பற்றிய முழுமையான அறிவு,முழு ஈடுபாடு,நேர ஒழுங்கு இவைகளை வளர்த்துக் கொண்டு
மனதில் உள்ள தாழ்வு மனப் பான்மை,இதைச் செய்ய முடியுமா என்ற பயம்,தகுதிக்கு மீறிய முயற்சி இவைகளைக் களைந்து ஒரு வேலையில் மனம்,சிந்தனை ,ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைத்து முழுமையாக ஈடுபடும்போது வெற்றி நிச்சயம்.

தோல்வியே வந்தாலும் சூழ்நிலைகளை ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அடுத்த முறை புது உத்வேகத்துடன் தன்னம்பிக்கையுடம் செயல்படும் போது பழைய வலிகள் மறைந்து மனநலம் பெருகும்.

Friday, August 15, 2008

ஆஸ்டியோ போரிஸிஸ்

'எங்கிட்ட வாலாட்டினா கையைக்காலை உடைச்சிடுவேன்னு' சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம்.
ஆனால் யாரும் உடைக்காமலேகூட எலும்பு உடையும் அபாயம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?
புல் தடுக்கி விழுபவனை 'புல் தடுக்கி பயில்வான்' னு கிண்டல் செய்வோம்.
ஆனால் சும்மா லேசா அழுத்தி ஊன்றி எழுந்தாலோ,லேசா ஸ்லிப் ஆனாலோ ,மெதுவா கீழே விழுந்தாலோ கூட எலும்பு முறியும் அபாயம் உண்டு.

அந்த அளவுக்கு எலும்பு வலுவிழந்து எளிதில் உடையும் அல்லது நொறுங்கும் தன்மையைத்தான் 'ஆஸ்டோபோரிஸிஸ்,என்கிறோம்.

இது 40-50 ஐத் தாண்டியவர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 100 க்கு 50 சதவீதமும் ஆண்களுக்கு கொஞ்சம் குறைவான சதவீதமும் ஏற்படக் கூடிய வியாதி.



இது ஒரு மௌன சாத்தான்.கையைக் காலை உடைத்துக் கொள்ளும் வரை வெளியே தெரியாது.
BMD எனப்படும் போன் மினரல் டெஸ்ட் மூலமே அறிய முடியும்.
போன் மினரல் என்பது வேறு ஒன்றுமில்லை முக்கியமாக கால்சியம்தான்.
உடம்பில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும் போது இந்த எலும்பு தேய்மானம் அல்லது வலுவிழத்தலும் எற்படுகிறது.
இதற்கு உணவுப் பழக்க வழக்கத்தோடு கால்சியம் சத்து செறிந்த உணவுகள் அவசியம்.அத்தோடு வைட்டமிம் D யும் தேவைப்படுகிறது.

பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் இந்த ஆஸ்டியோபோரிஸிஸ் தாக்கக் காரணம் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் நின்று போதலும் ,ஹார்மோன் மாறுபாடுகளுமேயாகும்.

கருப்பையில் கோளாறு கருப்பை அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட பெண்களுக்கும் ஹார்மோன் குறை பாட்டால் உடலில் கால்சியம் சத்து குறைந்து எலும்பு வலுவிழக்கிறது.
ஆண்களைப் பொறுத்தவரை புகை பிடித்தல்,முக்கியமாக மது அருந்துதல் காரணமாகிறது.
சிலருக்கு பரம்பரையாகவோ அல்லது பிறவிக் கோளாறாகவோக் கூட இருக்கலாம்.

கால்சியம் அதிகம் நிறைந்த பால்,பால் பொருட்கள்,பச்சைக்காய்கறிகள்,கீரைஆகியவை உணவில் அவசியம் தேவை. குறிப்பாக முருங்கைக்கீரை,முட்டைகோஸ்,காலிபிளவர்,கொய்யாப் பழம்,அசைவ வகையில் நண்டு,இறால் இவைகளில் மிகுந்து காணப்படுகிறது.

வைட்டமின் D யும் கால்சியத்துடன் தேவை.அது இலவசமாகவே நமக்கு சூரிய ஒளியில் கிடைக்கிறது.காலையில் ஒரு சில நிமிடங்கள் சூரிய ஒளி படும்படி வெய்யிலில் நின்றாலே நம் தோலானது வைட்டமின் D ஐக் கிரகித்துக் கொள்ளும்.
இத்துடன் இந்த வியாதிக்கான சரியான மருந்துகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்தல் நலம்.
இந்த நட்சத்திர வாரத்தில் ஏதோ பெரிய மருத்துவர் ரேஞ்சுக்கு பதிவு போட்டிருக்காங்களே ன்னு நினைக்க வேண்டாம்.
அனுபவங்களும் கேள்விப் பட்டவைகளையும் பகிர்ந்து கொள்ளும் போது,மற்றவர்களுக்கு விழிப்புணர்வாக எச்சரிக்கையாக இருக்கட்டும் என்ற எண்ணமே காரணம்.

Thursday, August 14, 2008

தொகுப்பாளர்களும் ,ஜாக்கிகளும்

ஒரு தொலைக்காட்சி அல்லது நேரடி நிகழ்ச்சியை கோர்வையாகவும்,சிலசமயம் கவிதை நயமாகவும் தொகுத்து வழங்குவது ஒரு தொகுப்பாளரின் வேலை.
ஆங்கிலமோ அல்லது தமிழோ அதில் நல்ல தேர்ச்சியும்,குரல்வளமும் தொகுப்பாளர்களின் முக்கிய தகுதியாகக் கருதப் படுகிறது.
ஆனால் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை பெண் தொகுப்பாளினிகளுக்கே 'மவுசு' அதிகம்.
அரைகுறையான கவர்ச்சி ஆடையில் வருவது இப்போது அடிப்படைத் தகுதியாகி விட்டது.
ஆங்கிலமும் இல்லாமல் தமிழும் இல்லாமல் இரண்டும் கலந்த தமிங்கலத்தில் பேசுவது,கெக்கே பிக்கே னு வார்த்தைகளுக்கு நடுவில் சிரிப்பது,அடிக்கடி விரித்துப் போடப்பட்ட தலைமுடியையோ அல்லது முன் நெற்றியில் விழும் முடியையோ தள்ளிவிட்டுக் கொண்டே இருப்பது,பேசத் தெரியாத மழலை போல கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவது எல்லாமும் தொகுப்பாளினிகளின் அத்தியாவசிய தேவையாகும்.
தொலை பேசி வழி உரையாடல் நிகழ்ச்சிகளிலும் இவர்கள் அட்டகாசம் தாங்காது.வழக்கமான நெட்வொர்க் குளறுபடியும் சேர்ந்து கொள்ள அந்த முனையில் இருப்பவர் ஒன்று கேட்க இவர் ஏதாவது தன் பாட்டுக்கு சொல்ல பார்க்கும் நமக்குத் தான் பற்றிக் கொண்டுவரும்.
சில நேரம் நிகழ்ச்சிக்கு சம்மந்தமே இல்லாமல் இவங்களாகவே எதையாவது பேசி வழிந்து விட்டு,பேசவந்தவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் 'சரிங்க அடுத்த காலர் கூப்பிடுகிறார் நன்றிங்க' னு முதலாமவரை 'கட்' செய்து விடுவர்.
இப்படித்தான் ஒருமுறை ஒரு எஃப்.எம் ரேடியோவின் விருப்பப் பாடல் நிகழ்ச்சி.
ஜாக்கி கேட்கிறார்.
'ஹலோ உங்க பேரு என்ன?'
''............'
'நீங்க என்ன செய்யறீங்க?'
'சும்மாதான் மேடம் இருக்கேன்'
இவர் ஜாக்கியிடம் கேட்கிறார்'நீங்க என்ன மேடம் பண்றீங்க'
'நானும் சும்மாதான் இருக்கேன்'
போனில் பேசுசியவர் சொல்கிறார்,'அப்படினா நாம ரெண்டு பேரும் சேர்ந்து.....[என்ன சொல்ல நினைத்தார் என்பது அவருக்கே வெளிச்சம்].'
அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் 'வாட்ட்ட்ட்ட்ட்?' அப்படினு பெண் குரல் கொடுக்க
'ஒன்னுமில்லை மேடம் எனக்கு....அந்த பாட்டு போடுங்க'என்று ஜகா வாங்கி விட்டார்.
இன்னொருமுறை
'உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சா'
'இல்லைங்க'
'எத்தனை குழந்தங்க'
'என்ன'
'ஓ சாரி திருமணம் ஆகலைன்னு சொன்னீங்க இல்லை சரியாக் கேட்கலை'
இப்படி பூசி மழுப்பும் வழிசல்கள் வேறு.
தொகுத்து வழங்குவது என்பது ஒரு கலை.
பார்க்கக்கூடிய அழகும்,குரல்வளமும் இருப்பதோடு கண்ணியமான தோற்றமும் கட்டுப்பாடான அதே நேரம் நேயர்களைக் கட்டிப் போடும் சுவாரஸ்யமும் எல்லாமும் இருந்தால்தான் ஒரு நல்ல ஜாக்கியாகவோ அல்லது தொகுப்பாளராகவோ இருக்க முடியும்.
பெப்ஸி உமாவின் பல ஆண்டுகால வெற்றிக்கு இதுவே காரணம்.
ஓரளவு அழகோடு ,நல்ல குரல் வளத்தோடு நேயர்களிடம் மிக அன்பாகவும் பாசமாகவும் அதே நேரம் கண்ணியம் மாறாமலும் பேசியதே அவரின் வெற்றிக்குக் காரணம்.
ஆரம்ப காலகட்டத்தில் ரேடியோவோ அல்லது தொலைக்காட்சியோ தொகுப்பாளினிகள் பலர் அப்படித்தான் இருந்தனர்.
ஆனால் இப்போதோ எஃப்.எம் சேனல்களும் தொலைக்காட்சி சேனல்களும் அதிகரித்து விட்ட நிலையில் அவர்களின் கூத்து தாங்க முடியவில்லை.
அரைகுறை ஆடைகளும்,ஆ..ஊ என்ற கூச்சல்களும்,பாகுபாடின்றி கட்டிப் பிடித்தல் ,இடித்தல் போன்ற சேட்டைகளுமாக ரொம்பத்தான் ரகளை கட்டுகிறார்கள்.
சுவாரஸ்யம் வேண்டுமென்பதற்காக எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம்,எப்படி வேண்டுமானாலும் மாமா,மச்சி எனப் பேசலாம் ,மேடையிலேயே கட்டிப் பிடித்து முத்தமிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நடக்கலாம் எல்லாவற்றையும் இரசிக்க ஆள் இருக்கு என்ற மனப்பாங்கு அதிகரித்து விட்டது.
சேனல்களும் போட்டியான உலகத்தில் ஆடைக் கவர்ச்சி,வார்த்தைகளில் கவர்ச்சி ,செய்கைகளில் கவர்ச்சி இருந்தால்தான் ஒப்பேற்ற முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன.

Wednesday, August 13, 2008

உலக நாயகனும்..குசேலனும்

எல்லோரும் கிழிகிழி ன்னு கிழிச்சி ஓய்ந்த பிறகு நானென்ன புதுசா விமர்சிக்கப் போகிறேன்.
ஆனா முந்தைய பதிவுகளிலிருந்து கொஞ்சம் விலகி லைட்டான மேட்டர் சொல்லலாம்னுதான்
சினிமா விமர்சனம்.
எத்தனையோ படங்கள் வந்துகிட்டுதான் இருக்கு.ஆனால் ரஜினி ,கமல் படத்துக்கு மட்டும் ஒரு எதிர்பார்ப்பும் ,வந்த பிறகான விமர்சனமும் விதிவிலக்கு.
சிவாஜி,எம்ஜியாருக்குப் பிறகு இந்த ஜோடிகள்தான் அதிக எதிர்பார்ப்பையும்,இரசிகர் வட்டத்தையும் கொண்டவை.
எல்லாப் படங்களையும் போல வந்து போகும் போது விமர்சனத்தின் கடுமை குறைவாகவே இருக்கும்.
உலகத் தரம்,உலக நாயகன்,உலகம் முழுவது ரிலீஸ் இப்படியான எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்ட பிறகு விமர்சிக்க கழுகுப் பார்வைதான் தேவைப் படுகிறது.

முதல்ல கமலின் தசாவதாரம்;கமலின் உழைப்பு நடிப்பின் மீதான சிரத்தை பற்றி என்றுமே மாற்றுக் கருத்து இருந்ததில்லை.ஒவ்வொரு படத்திலும் ஒப்பனை மற்றும் காரெக்டரில் புதுமை புகுத்தியதில் இவரே முன்னோடி.
தசாவதாரத்திலும் அப்படியே.ஆனால் அதை முன்னைக்கு பத்து மடங்கு அதிகமாக செய்திருக்கிறார்.
பத்து வேடங்களிலும் ஒப்பனைக்கும்,பாடி லாங்க்வேஜ்,உச்சரிப்பு என மிக முயன்றிருக்கிறார்.
ஆனால் கதை என்று பார்க்கும் போது ஒன்றுமே இல்லாதது போல தோன்றுகிறது.
இதற்கு முன் 'விக்ரம்' னு ஒரு படத்தில் 'மிசைல்' எனப்படும் ஏவுகணை திருடு போவது போன்ற கதை வந்திருக்கிறது.அந்தப் படமும் சரியான மசாலாக் கலவை,சுஜாதாவின் வசனம்,சத்யராஜின் நடிப்பு என ஓடியது.
தசாவதாரத்தில் மிசைலுக்குப் பதில் வைரஸ் அவ்வளவுதான்.
ஆனால் இத்துடன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலத்து நம்பி வரலாற்றையும் இருபத்தியொராம் நூற்றாண்டின் சுனாமி தாக்குதலையும் சாமர்த்தியாமாக பிணைத்திருப்பதை
யும் கூட பாராட்டலாம்.ஆனால் இதில் கமல் சொல்ல வருவது என்ன?
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதிலே அவருக்கே தெளிவில்லையா?
அது போகட்டும் உலகத் தரம் வாய்ந்த ஒரு படத்தில் என் கண்ணுக்கு புலப்பட்ட சில சொதப்பல்கள்.
அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷு க்கு NaCl னா என்னன்னு தெரியலை. What is NaCl? எனக் கேட்கிறார்.
விஞ்ஞானி கோவிந்த் ஆய்வக குரங்கு 'ஹனு' வைரஸைத் தின்று துடித்துச் சாகும் போது வைரஸ் பரவாமலிருக்க NaCl என்ற பட்டனை அழுத்தி சரி செய்கிறார்.
ஆனால் அதே விஞ்ஞானி படம் முழுக்க வைரஸ் குப்பியை பெருமாள் சிலைக்குள் வைத்துக் கொண்டு எப்படி அழிப்பது எனத் தெரியாமல் விழிக்கும் போது பாதாளச் சாக்கடை சுத்தம் செய்யும் இரு தொழிலாளிகள் உப்பைத் தேய்த்துக் குளிப்பதைப் பார்த்த பிறகுதான்
'ஆ NaCl கிருமி நீக்கும்' என்பதை உணர்ந்து 'இங்கே பீச்சுக்கு எப்படிப் போகனும்' என்கிறார்.கொடுமையே.
அடுத்து வைரஸ் பரவி உலகமே அழியக்கூடாதுன்னு நினைக்கும் பரோபகாரி சுனாமிக் காட்சியில் கடற்கரையில் அங்கும் இங்கும் அல்லோலப் பட்டு மக்கள் ஓடும் பிண்ணனிக் காட்சியில் நாயகி அசினுடன் ஒதுங்கி காதல் பேசுகிறார்.
கடற்கரையில் அத்தனை ஓலமும் அவலமும் நடந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றாமல் தனியாக என்ன வசனம்?
கடைசிவரை புஷ்ஷும் கலைஞரும் ஏன் ஒன்றாக வந்தார்கள் யாரைப் பாராட்டினார்கள் எனத் தெரியவில்லை.
கமலைப் பாராட்டத் தான் அந்த விழா என்றால் கோவிந்த் அப்படியென்ன சாதித்துவிட்டார்?புரியலை.
அது போல கஜல் பாடகர் தொண்டையைத் துளைத்த குண்டு சரியாக 'கான்சர்' இருந்த பகுதியை மட்டும் அழித்து விட்டதால் ஆப்பரேஷன் தேவையில்லையாம்.அப்படி நடக்க சாத்தியமுள்ளதா மருத்துவர்கள்தான் சொல்லனும்.

அடுத்து குசேலன்;
புராணத்தில் நட்புக்கு துரியோதன் -கர்ணன் போல கிருஷ்ணன் - குசேலன் சொல்வார்கள்.
அப்படியொரு குசேல நட்புத்தான் ரஜனியுடையதாம்.ஆனால் அந்த நண்பனுக்காக ஒரே ஒரு காட்சியில் கூட அவர் நினைக்கவோ,பேசவோ செய்யவில்லை.அதெப்படி கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் நண்பன் நினைப்பு வருது?
என்னதான் சூப்பர் ஸ்டாரென்றாலும் அத்தனை இசட் பிரிவு பாதுகாப்பும் தனிப் போலீஸ் படையும் தேவையா? மக்களிடம் நேசமாக உள்ள தலைவர்கள் பெரும் மக்கட் படையையே தன் பின்னால் வைத்திருந்த தலைவர்கள் கூட இப்படியொரு பாதுகாப்பு வேண்ட மாட்டார்கள்.
கதைப்படி சூப்பர் ஸ்டார் அஷோக் குமார் அரசியல் தொடர்புடையவரும் இல்லை.
எந்த ஊரில் இப்படியொரு டூரிஸ்ட் பங்களா இருக்கு.அதுவும் மறையூர் போன்ற படு கிராமத்தில் இப்படியொரு செட்டிங் போட்டு பங்களா ஆளுயர மதிற் சுவர்கள் தேவையா?
குசேலன் என்பது நட்பைக் குறிக்கும் கதையாக இருக்கும் பட்சத்தில் இப்படி செட்டிங்,கிராபிக்ஸ் என கண்கட்டு வித்தைகள் மட்டும் இருந்தால் போதுமா?நட்பின் ஆழத்தைக் காட்டும் ஒரு காட்சிகூட இல்லையே?.
நட்பைக் குறித்த அருமையான படங்கள் பல முன்பே வந்திருக்கின்றன.
நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் குறைந்த பட்ஜெட்டில் இப்பவும் வந்து கொண்டுதானிருக்கின்றன.
இந்த இரண்டு படங்களிலும் தரம்,நல்ல கதையம்சம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே.
தங்களின் இரசிகர் வட்டத்தைக் கவர்வதிலும்,ஒரு மாஸ் இமேஜ் உருவாக்குவதிலும் உலகம் முழுக்கப் பேசப்பட வைப்பதிலுமே நோக்கம் இருக்கிறது.
நவீன யுக்திகள்,கணிணி நுட்பங்கள் பிரமிப்பைத் தருகின்றன என்பதில் ஐயமில்லை.
ஆனால் இதுதான் உலகின் சிறந்த படம்,உலகின் சிறந்த கதையம்சம் எனச் சொல்லுமளவுக்கு இரண்டிலுமே ஒன்றுமில்லை.
மூன்று மணி நேரத்தை தொய்வில்லாமல் நகர்த்தி,பார்க்கத் தூண்டும் ஆவலை ஏற்படுத்துவதில் உள்ள 'ரிச்னெஸ்' 'ஹீரோயிசம்' மட்டும் நிச்சயம் உண்டு.

Tuesday, August 12, 2008

ஒபிசிட்டியும் ....BMI யும்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு எய்ட்ஸ் விழிப்புணர்வு இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுவது ஒபிசிட்டி அல்லது ஒபிஸ் எனப்படும் உடல் பருமன் கோளாறுதான்.

இது ஒரு நோயாக கருதப் படாவிட்டாலும் பலப்பல வியாதிகளுக்கு அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

எல்லோருக்கும் இஞ்சி இடுப்பும் ஸ்லிம்மான தோற்றமும் இருக்கனும் என்ற ஆசை இருந்தாலும் நம் வாழ்க்கை முறை உணவுப் பழக்க வழக்கங்கள் பரம்பரை உடல்வாகு என நம் ஆசை நிறைவேறுவதில்லை.

ஓரளவு குண்டாக இருக்கலாம்.ஆனால் ஓபிஸ் [அதிக பருமன்] ஆக இருக்கக் கூடாது.
சிலபேர் சொல்லுவாங்க,'நான் கொஞ்சம் குள்ளம் அதான் குண்டாத் தெரிகிறேன்'
சிலர் நல்ல உயரமா இருப்பதால் எவ்வளவு பருமனாக இருந்தாலும் சட்டெனத் தெரியாது.



LARGER THE WAIST LINE
SHORTER THE LIFE LINE
எனச் சொல்லப் படுகிறது.

ஒல்லியான அல்லது பருமனான உடல்வாகு என்பது பார்க்கின்ற வெளித் தோற்றத்திலேயே தெரியக் கூடியது என்றாலும் உடல்நல அடிப்படையில் பார்த்தால் அதை பிஎம்ஐ எனப்படும் பாடி-மாஸ்-இண்டெக்ஸ் வைத்து கணக்கிட முடியும்.
பிஎம்ஐ என்பது உடம்பு[பாடி வெய்ட்] எடையை உயரத்தின் வர்க்கத்தால் [ஸ்கொயர் ஆப் ஹெய்ட்] வகுத்துக் கிடைப்பது.

BODY WEIGHT/HEIGHT^2= KG/M^2=BMI

இப்ப புதுசா வரும் எல்லா மொபைல் மாடல்களிலும் இந்த BMI அளவைக் காணும் வசதி உள்ளது.நாமே நம் உடல் எடை ,உயரம் கொடுத்து கணக்கிட்டுப் பார்க்கலாம்.ஓரளவு விழிப்புணர்ச்சியாவது கிடைக்கும்.

பிஎம்ஐ மதிப்பு 25 முதல் 29.9 ஆக இருப்பது சராசரி பருமன் எனவும் >30 என்பது ஒபீஸ் எனவும் வரையறுக்கப் பட்டுள்ளது.

உலக ஒபிஸிட்டி விழிப்புணர்வு வாரமாக [world obesity awareness week]ஆக வருடா வருடம் அக்டோபர்15 முதல் 19 வரை கொண்டாடப் படுகிறது.

உலக மக்கட் தொகையில் சுமார் 2.7 பில்லியன் பருமன் கோளாறு உள்ளவர்கள் என்றால் இந்தியாவில் மட்டும் சுமார் 97 மில்லியன் பேர் அதிக உடற்பருமன் கொண்டவர்களாம்.

பொதுவாக உணவுப் பழக்க வழக்கம் உடற்பயிற்சியினமை சோம்பிக் கிடத்தல் காரணமாக இருந்தாலும் மரபணுக் கோளாறும் காரணமாகிறது.
குழந்தைகளைப் பொறுத்த மட்டில் ஜெனெடிக் எனப்படும் மரபணுத் தன்மையால் பருமன் ஏற்பட்டாலும் அவர்களின் உணவுப் பழக்கம்,வாழ்க்கைமுறையே பெரும் காரணமாகிறது.
ஜங்க் புஃட் எனப்படும் அதிக கலோரி கொண்ட சத்தற்ற நொறுக்குத் தீனிகள்,ஐஸ்கிரீம்,பால் பொருட்கள் இனிப்பு வகைகள் அதிகம் உண்பது ,பகல் தூக்கம் முறையான உடற்பயிற்சியின்றி எந்நேரமும் கணிணி விளையாட்டு,வீடியோ கேம்ஸ் ,கார்ட்டூன் சேனல்கள் என ஒரே இடத்தில் பல மணி நேரம் சோம்பிக் கிடப்பதே இளம் வயது ஒபிஸிட்டி க்கு காரணமாகிறது.

பெற்றவர்கள்தான் கடமையுணர்ச்சியோடு புரிய வைத்து நல்ல சத்துள்ள குறைவான கலோரி உணவுப் பொருட்கள்,பழங்கள் சாப்பிடப் பழகவும்,நிறைய நீர் அருந்தவும்,தவறாது உடற்பயிற்சி செய்யவும் பழக்க வேண்டும்.
பெரியவர்களைப் பொறுத்தவரை மேலே சொன்ன காரணங்களோடு ஆண்களானால்,மது ,புகை,போதை மருந்துகள் போன்ற பழக்கங்கள் சேர்ந்து விடுகின்றன.
பெண்களுக்கு இந்தப் பிரச்சினை பருவமடையும் சமயத்திலேயே ஆரம்பித்து விடுகிறது.பின்னர் பிள்ளைப் பேறு சமயத்திலும் ,மாதவிடாய் நிற்கும் சமயம் அல்லது மாதவிடாய்க் கோளாறுகளாலும் இந்த உடற்பருமன் அதிகரித்து விடுகிறது.
சிலருக்கு 'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும் ஹார்மோன் குறைபாடும் காரணமாகிறது.

உடற்பருமன் என்பதை'உடம்புல கொழுப்பு' வச்சிடுச்சு எனக் கொச்சையாகச் சொன்னாலும் உண்மை அதுதான்.
கொழுப்பு என்பது நம் உடலில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் ஆற்றல்.நம் உடல் இயக்கங்களுக்கு வேண்டிய போது செலவிடப் படுகிறது.சொல்லப்போனால் உடலுக்கு வழுவழு தன்மையையும் அழகையும் கொடுக்கிறது.
ஆனால் அதுவே அளவுக்கு அதிகமானால் ஒபிஸிட்டியாகிறது.
உடலில் சராசரியாக 30-35 பில்லியன் கொழுப்பு செல்கள் உள்ளன.நாம் எடை கூடும்போது அவைகளின் எண்ணிக்கையும் உருவளவும் அதிகரிக்கிறது.
பின்னர் எடைக் குறைக்க முற்படும்போது உருவளவு சுருங்குமே தவிர உண்டான செல்களின் எண்ணிக்கை குறவதில்லை.

இப்படிச் சேரும் கொழுப்பு பல வியாதிகளுக்கு கட்டியம் கூறுகிறது.
ஸ்ட்ரோக் எனப்படும் திடீர் அடைப்பு,இதய நோய்கள்,சர்க்கரை வியாதி,கணையக் கோளாறுகள்,ஹார்மோன் அளவில் மாறுபாடு,மூட்டுவலி,வயிறு மற்றும் மலக்குடல் கேன்சர்,கல்லீரல் கெடுதல்,டிஸ்லிப்பிடிமியா எனப்படும் இரத்தத்தில் அதிக கொழுப்பு அல்லது டிரைகிளிசெரைடு எனப்படும் மாரடைப்புக்கு காரணமான கொழுப்பு போன்றவை அதிகமாகிறது.

உடற்பருமனைக் குறைக்க மாத்திரை மருந்து,ஸ்டீம் அல்லது ஆயில் மசாஜ் னு பல வழிகளோடு அறுவை சிகிச்சை முறைகளும் நவீனமாக்கப் பட்டிருந்தாலும் , நல்ல உணவுப் பழக்கத்தோடு நடைப் பயிற்சி,யோகா,நீச்சல்,ஓட்டப் பயிற்சி என உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இயற்கையான முறையில் உடற் பருமனைக் குறைக்க கையாளும் முறைகளே பக்க விளைவுகள் இல்லாத நன்மை பயக்கும்.

Monday, August 11, 2008

கிளைசெமிக் இண்டெக்ஸ் [glycemic index]

உடல்நலம் குறித்த விழுப்புணர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவது இரத்தச் சர்க்கரையின் கட்டுப்பாடும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும் தான்.
ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகக் கருதப் பட்டது டயபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி.
அதிக அளவு இனிப்பை உண்பதாலேயே வரும் என்ற பொதுவான கருத்தும் உண்டு.ஆனால் என்ன உணவை உண்கிறோம் எப்படி உண்கிறோம் என்பதில்தான் அதை நாம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
இன்று 100க்கு 80 சதவீதம் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருப்பவர்களே.
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு காபியோ டீயோ கொடுக்கும் போது தவறாமல் கேட்பது சர்க்கரை சேர்க்கவா வேண்டாமா என்பதே.
இது மருத்துவம் சார்ந்த கட்டுரையோ சர்க்கரை வியாதிக்கான தீர்வோ இல்லை.
சர்க்கரையை கட்டுப்படுத்த அல்லது அதிகரிக்கக் கூடிய உணவுப் பொருட்கள் அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவு உணவுப் பொருட்கள் குறித்ததே.
கார்போஹைட்ரேட்ஸில் நல்லவை கெட்டவை னு தரம் உண்டு.

ஒரு மாவுப் பொருள் உட்கொள்ளப் பட்ட பிறகு வேதியியல் மாற்றத்தால் சிதைவுற்று குளுக்கோஸ் எனப்படும் சர்க்கரைப் பொருளாக மாறி இரத்தத்தில் எந்த அளவு எவ்வளவு வேகமாக கலக்கிறது என்பதையே இந்த 'கிளைசெமிக் குறியீடு' காட்டுகிறது.
இதுவே GI index எனப் படுகிறது.

குளுக்கோஸின் குறியீட்டை 100 எனக் கொண்டு மாவுச் சத்திலிருந்து கிடைக்கும் சர்க்கரையின் அளவை வைத்தே நல்ல கார்போஹைட்ரேட்ஸ் கெட்டவை எனப் பிரிக்கப் படுகிறது.

கிளைசெமிக் குறியீடு 55 வரை உள்ளவை குறைந்த GI வகை 56-69 வரை
உள்ளவை நடுத்தரமானவ 70 க்கு மேற்பட்டவை அதிக GI உள்ளவை.
GI அதிகமாக உள்ள உணவுகள் விரைவில் செரித்து இரத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டுவதால் உடனடியான சக்தி உடலுக்குக் கிடைத்தாலும் அந்த அதிகப் படியான சர்க்கரையை சமன் செய்ய இன்சுலின் சுரப்பும் அவசியமாகிறது.தேவைக்கு அதிகமான சர்க்கரை கொழுப்பாக மாற்றப்படுகிறது.

சீரியல் ,பாஸ்தா,வேகவைத்த உருளைக்கிழங்கு,சோடாபானங்கள்,அரிசி, அடுமனை உணவுகள் வொய்ட் பிரட் போன்றவைகளின் கிளைசெமிக் குறியீடு அதிகம்.
பாப்கார்ன்,ஓட்ஸ்,வாழப்பழம்,அன்னாசி பாஸ்மதி,மூல்கிரி அரிசி இவைகளில் GI மிதமாக உள்ளது.
முழுதானியங்கள்,பழங்கள்,பச்சைக் காய்கறிகள்,கொழுப்பு நீக்கப்பட்ட பால் இவற்றில் 50 க்கும் குறைவாக உள்ளது.

இந்த கிளைசெமிக் குறியீடு அதிகமாக உள்ள உணவை உண்பதால் இரத்த சர்க்கரை அதிகரிப்பு
,உயர் இரத்த அழுத்தம்,இரத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்தல்,உடல் பருமன்,அளவுக்கதிகமான பசி உணர்வு ஏற்படுதலோடு கான்சருக்கான சாத்தியக் கூறுகளும் உண்டு.
காலில் இறக்கைக் கட்டி பறக்கும் அவசர யுகத்தில் இதை எல்லாம் கவனிக்க நேரமெங்கே என நினைப்போம்,
சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் போல அதிக GIஉள்ள உணவோடு குறைந்த GI உள்ளதை சேர்த்து சாப்பிடும்போது சமனப் படுகிறது.
பாஸ்தா நூடூல்ஸோடு கொஞ்சம் சாலட்,காலை நேரத்து சீரியலோடு கொஞ்சம் ஓட்ஸ் பார்லி அல்லது ஸ்ட்ராபெர்ரி இப்படி பழகலாம்.

எந்த விதமான கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுகிறோம் என்பதை விட எவ்வளவு அளவு சாப்பிடுகிறோம் அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதும் சேர்ந்தே நம் உணவின் GI அளவை நிர்ணயிக்கிறது.
அதிக நேரம் சமைக்கப்படும் உணவுகளின் நார்ச் சத்தின் தன்மை மாறி அதன் குறியீட்டு அளவும் மாறிவிடுகிறது.உடனடியாக செரிக்கப் பட்டு உணவில் சர்க்கரையின் அளவை துரிதமாக அதிகப் படுத்துகிறது.
இந்த கிளைசெமிக் குறியீட்டை மாற்றக் கூடிய காரணிகள்
1.ஓரே நேரத்தில் எந்த உணவோடு எதைச் சேர்த்து சாப்பிடுகிறோம்
2.எப்படி சமைக்கப் பட்டிருக்கிறது
3.உடலின் உணவை ஏற்றுக் கொள்ளும் தன்மை
4.எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதே.

சர்க்கரை நோயின் தாக்கம் எத்தனை கொடியது என்பது தெரியும்.அதனால் இது குறித்த விழிப்புணர்வு மிக அவசியம் என்பதாலேயே இந்தப் பதிவு.
மேலும் விபரமறிய வலையில் நிறைய தளங்கள் உள்ளன.

நட்சத்திர வணக்கம்

அறிமுகத்தில் சொல்லியபடி அதிகமாக எழுதும் பதிவர் இல்லை.
எழுதும் பதிவுகளில் ஏதேனும் செய்தி இருக்க வேண்டும் என்பது ஆசை.
பெரும்பாலும் நாளிதழ்,தொலைக்காட்சி செய்திகளின் அடிப்படையிலேயே என் பதிவுகள் அமையும்.
பலரும் அறிந்த செய்திகளாக இருந்தாலும் எனக்கு மனதில் பட்டவைகளைப் பதிவாக்குகிறேன்.
குறைவான பதிவுளே எழுதியிருந்தாலும் பழம்பெரும் பதிவர் :))))))) என்ற அடிப்படையில் கால ஓட்டத்தின் சுழற்சியில் தமிழ்மண நட்சத்திரமாகி விட்டேன்.
நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி
தமிழ்மண அன்பர்களுக்கு நட்சத்திர வணக்கங்கள்.

Saturday, August 09, 2008

சிரிக்க...சிந்திக்க..இரசிக்க

மூன்று பேராசிரியர்கள் ஒரு நீர் வீழ்ச்சியைப் பார்க்க பிக்னிக் போனார்கள்.

ஒருவர் இயற்பியல் பேராசிரியர் அவர் சொன்னார்,'நான் இந்த நீரின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றலையும் கணக்கிட விரும்புகிறேன்' என்று சொல்லியபடியே நீர் வீழ்ச்சியில் குதித்து விட்டார்

இரண்டாவது ஆள் கணிணி வல்லுனர். அந்த நீர்வீழ்ச்சியின் அழகை கிராபிக்ஸில் காட்டப் போகிறேன் என்றபடியே அவரும் குதித்து விட்டார்

மூன்றாவது நபர் ஒரு வேதியியல் பேராசிரியர்.மற்ற இரண்டு பேரும் குதித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் தன் குறிப்பேட்டை எடுத்து இப்படி எழுதினார்

'இரண்டு பேராசிரியர்களும் தண்ணீரில் கரையக் கூடியவர்கள்'


ஒரு வயதான மனிதர் டாக்டரிடம் போனார்.
'டாக்டர் என் கண்ணைச் சுற்றி கருவளையம் புள்ளிகள் ஈறூKKஊ'
டாக்டர் சொன்னார்,'வயசானா அப்படித்தான் வரும்'
வயதானவர்:'எந்த சாப்பாடும் ஒத்துக்கலை'
டாக்டர்:'அதுவும் வயசானதால் தான் உங்க செரிமான திறன் குறைஞ்சிருக்கும்.
வயதானவர்:எனக்கு முதுகு வலி'
டாக்டர்:'வயசாயிடுச்சில்ல'
'என்ன எதுக்கெடுத்தாலும் வயசாயிடுச்சினு சொல்றீங்க எனக் கோபப்பட்டார்.
டாக்டர் சொன்னார்,'கரெக்ட் இதுதான் அறிகுறி.உங்க உபாதையைச் சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டேன் என்கிறீர்களே இதுதான் வயசானதின் அறிகுறி'



ஒரு கணிணி மாணவர் திரைப் படம் தயாரித்தால் எப்படி பெயர் வைப்பாராம்?இப்படித்தான்..

7 GB ஹார்ட் டிஸ்க் காலனி
புதுக்கோட்டையில் இருந்து வைரஸ்
காலமெல்லாம் ஆண்ட்டி வைரஸ் வாழ்க
வைரஸை வேட்டையாடு விளையாடு
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
ஒரு மவுஸின் கதை

Friday, January 04, 2008

கீட்டாமைன்...விஷமாகும் போதைப் பொருள்



கீடாமைன் என்ற போதைப் பொருள் இப்போது இளைஞர்களிடையே பிரசித்தம்.
K அல்லது ஸ்பெஷல் K அல்லது காட் வாலியம் என்று சொன்னால்தான் தெரியும்.

K என்பது ஒரு போதை தரும் வேதிப் பொருள்.இது இயற்கையாக நீர்மநிலையில் இருக்கும்.
இதன் ஃபார்முலா C13H16NCLO ஆகும்

2-(-2குளோரரோஃபீனைல்)-2மெதைல் அமீன்-சைக்ளோஹெக்சே-1-னோன் என்பது இதன் வேதிப் பெயர்.
இதுதான் K ,Special K ,CAT VALIUM என்ற பெயர்களில் மற்ற போதை மருந்துகளுடன் அல்லது புகையிலையுடனும் சேர்த்து எடுத்துக் கொள்ளப் படுகிறது.

இது கண்டு பிடிக்கப் பட்ட போது கால்நடை மருத்துவத்தில் வலி நிவாரணியாகவும் மயக்கமூட்டும் பொருளாகவும் பயன் படுத்தப் பட்டது.

பிறகு மருத்துவத் துறையிலும் மயக்கம் கொடுக்கப் பயன் படுத்தப் படுகிறது.
இது மிக மெதுவாக வினை புரிந்து நரம்பு மண்டலத்தை உணர்விழக்கச் செய்வதால் விபத்து போன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் முன் மருத்துவ குறிப்பு ஏதும் தெரியாத சூழ்நிலைகளில் பாதுகாப்பான மயக்க மூட்டியாகக் கருதப் படுகிறது.

இப்போதோ இந்த வேதிப் பொருள் தரும் போதைக்காக இது 'கிளப் டிரக்'என்ற பெயரில் மரிஜுவானா,ஹெராய்ன் போன்ற வற்றோடு சேர்த்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இயற்கையில் திரவநிலையிலிருக்கும் இது ஆவியாக்கப் பட்டு வெண்மை நிற பொடியாகக் கிடைக்கிறது.
பொடியாகக் கிடைப்பது குடிக்கும் பானங்களில் கலந்து அத்துடன் ஜுர மாத்திரையையும் கலந்து போதை பொருளாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.

திரவ நிலையில் இது ஊசி மூலம் போதைக்காக உட் செலுத்தப் படும் போது மருந்து முழுவதும் செலுத்தப் படுவதற்குள்ளேயே மயக்கம்,தள்ளாடுதல் போன்ற நிலைக்கு உட்பட நேரிடும்.

இந்த போதைப் பொருள் தரும் உச்ச கட்ட போதை 'கே ஹோல்['K Hole ]அதாவது
உடல் வேறு உயிர் வேறாக பறப்பது போன்ற மெய்மறந்த போதைத் தருவதாலேயே இதை நாடும் இளைஞர்கள் இதனாலேற்படும் பின் விளைவுகளை யோசிப்பதில்லை.

இது போதையை ஏற்படுத்து மாயினும்,மனச்சிதைவு,மூளை கலங்கிய நிலைக்கும் ஆளைத் தள்ளிவிடும்.நரம்பு மண்டல பாதிப்புகளோடு சிறுநீர்ப்பை பிரச்சினை,ஹார்மோன்கள் பாதிப்பால் விநதணு குறைபாடுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இந்த மருந்தை முயற்சித்த சில இளைஞர்கள் மரணத்தைத் தழுவியும்,சிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும் ஆகியுள்ளனர்.

மன அழுத்தம்,வேலைப் பளுவினால் அமைதி நாடும் இளைஞர்கள் அறியாமையாலும் அந்த சில மணி நேர போதைக்காகவும் மரணத்தைத் தழுவாமல்,மனச் சிதைவுக்கு ஆளாகமல் இருக்க வேண்டும்.
இசை,ஓவியம்,நடனம் போன்ற வேறு பல ஆக்கபூர்வ கலைகளில் மனதைச் செலுத்தி அமைதி காண முயல வேண்டும்.

Tuesday, November 13, 2007

Nimesulide....தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகள்....

கார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம்
என்ற என் பிரார்த்தனை நேரம் வலைப் பதிவில் தடை செய்யப்பட்ட மாத்திரையான nimesulide என்ற வலிநிவாரணி மருந்தை [antipyretic and analgesic] டாக்டரின் ஆலோசனையின்றி உட்கொண்டு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் கார்த்திக் என்ற 31 வயதேயான இளைஞரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த நிமிசுலைடு வகை மருந்துகள் NONSTEROID ANTI-INFLAMATORY DRUG [NAID] வகையைச் சேர்ந்த மருந்துகளாகும்.

உலகின் தலைசிறந்த 5 வலிநிவாரணிகளில் ஒன்றாக கருதப் பட்டாலும் கல்லீரல் பாதிப்பு சிறுநீரக பாதிப்பு போன்ற பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

இதனுடைய பயங்கரமான பின்விளைவுகளைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் இதை தடை செய்து விட்டன.

2001lலேயே ஸ்பெயின்,பின்லாண்ட் போன்ற நாடுகள் இம்மருந்தை தடை செய்து விட்டன.அதன் பின்னர் அமெரிக்கா,ஆஸ்திரேலியா,கனடா போன்ற நாடுகளும் சிங்கப்பூர்,பங்களாதேஷ்ம் கூட தடை செய்து விட்டிருந்தாலும் இந்தியாவில் மட்டும் இன்னும் புழக்கத்தில் உள்ளது.

மருந்து தரக் கட்டுப்பாட்டுக் கழகம் இதை தடை செய்ய வேண்டிய அவசியத்தை மிக மெதுவாகவும் தாமதமாகவுமே உணர்ந்திருக்கிறது.எனினும் இன்னும் முழுமையாகத் தடை செய்யப் படவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

இம்மருந்து 80 க்கும் மேற்பட்ட வகைகளில் [பெயர்களில்] விற்பனையில் உள்ளதாம்.
அதில் நைஸ்,நிமிலைடு [NISE,NIMILID] பெயர்களில் அதிகம் விற்பனையாகிறது.

மேலும் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பாராசிடமால்[paracetamol]எனப்படும் ஜூர மருந்து வகைகளோடு சேர்க்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

ஜுரம் மற்றும் அதிகப்படியான வலிக்கு மருந்தாக அளிக்கப் படுகிறது.

மற்ற நாடுகளில் தடை செய்யப் பட்டது இங்கு மட்டும் புழக்கத்தில் இருக்க மக்கள் மற்றும் பல மருத்துவர்களின் விழிப்புணர்ச்சியின்மையும் ,அரசியல் ஆதாயங்களும், வியாபார நோக்குமே காரரணம் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சுயமருத்துவம் [self medication]செய்து கொள்ளும் நம்முடைய அதி மேதாவி போக்கும் ஒரு காரணம்.படிக்காதவர்கள் மட்டுமில்லாது மெத்தப் படித்தவர்களிடமும் இந்த அலட்சியப் போக்குக் காணப்படுவதற்கு கார்த்திக் ஒரு உதாரணமாகி விட்டார். இனியாவது விழிப்புணர்வு பெறுவோம்.
கீழே சில தடைசெய்யப்பட்ட மருந்துகளின் அடிப்படை வேதிப் பொருட்கள் அவற்றின் பயன்பாடு அவற்றால் ஏற்படக் கூடிய பக்க விளைவுகள் அவை என்ன பெயர்களில் கிடைக்கின்றன என்ற விபரம் கொடுக்கப் பட்டுள்ளது.

Generic name
Use
Reason for ban
Brand names(s)
1. Analgin
Pain-killer
Bone-marrow depression
Novalgin, Baralgan

2. Cisapride
Acidity, constipation
Irregular heart beat
Ciza, Syspride
3. Droperidol
Anti-depressant
Irregular heart beat
Droperol
4. Furazolidone
Anti-diarrhoeal
Cancer
Furoxone, Lomofen
*
5. Nimesulide
Pain-killer, fever
Liver failure
Nise, Nimulid
6. Nitrofurazone
Anti-bacterial cream
Cancer
Furacin, Emfurazone
,
7. Phenolphthalein
Laxative
Cancer
Jetomisol-P*
8. Phenylpropanolamine
Cold & cough
Stroke
D'Cold*, Vicks Action 500*
9. Oxyphenbutazone
NSAID
Bone marrow depression
Sioril
10. Piperazine
Anti-worms
Nerve damage
Piperazine, Helmazan*
11. Quiniodochlor
Anti-diarrhoeal
Damage to sight
Enteroquinol



  • * Denotes it is a combination product.Analgin, Furazolidone and Nitrofurazone are banned for use even in animals in the United States.Analgin is banned even in Nepal, Vietnam and Nigeria (Reference: MIMS INDIA, September, 2005)

  • Sunday, May 27, 2007

    மலரும் குடும்ப உறவுகள் விரியும் அன்பின் சிறகுகள்

    குடும்பம் என்பது ஒரு அழகான தோட்டம்.உறவுகள் அங்கு பூத்துக் குலுங்கும் மலர்கள்.
    எந்த ஒரு குடும்பத்திலும் பெற்றவர்கள் பிள்ளைகள் மீதும் பிள்ளைகள் பெற்றவர் மீதும் அன்பும் ஆதரவும் கொண்டிருப்பது இயற்கையே.

    ஆனால் அதை எத்தனை குடும்பங்களில் பரஸ்பரம் வெளிப்படுத்தவோ,பகிர்ந்து கொள்ளவோ செய்கின்றனர்?

    இயந்திரத்தனமாகி விட்ட வாழ்க்கையில் வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருப்பதும்,படிப்பு,பணம் சம்பாதித்தல் என்றுமாகவே பெரும் பொழுது கழிந்து விடுகிறது.

    காலையில் சீக்கிரமாகக் கிளம்பிப் போதலும் இரவில் நேரங்கழித்து வருதலும் இருக்கும் போது குடும்பத்துடன் மனம் விட்டுப் பேசவோ மகிழ்ந்திருக்கவோ பொழுதிருப்பதில்லை.

    விடுமுறை நாட்கள் பிள்ளைகளுக்கு ஸ்பெஷல் கிளாஸ் என்பதும் அல்லது நண்பர்களுடன் கிரிக்கெட் என்றும் செலவிடப் படுகிறது.தந்தைக்கு நண்பருடன் அரட்டை அடிக்கவும் தாய்க்கு டி.வியிலும் பொழுது போகிறது.

    எல்லோருமே இப்படியிருப்பதில்லை என்றாலும் பெரும்பாலான குடும்பத்தில் இது வாடிக்கைததானே.

    பழங்கதைகள் பேசுவதும் மலரும் நினைவுகளும் சுகமானவை.

    தன் பெற்றோர் சின்ன பிள்ளைகளாக இருந்த போது என்னென்ன குறும்பு செய்தார்கள் என்று தாத்தா பாட்டி வாயால் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

    எல்லோரும் கூடி நிலாச் சோறு சாப்பிட்டதுண்டா?

    அம்மா அன்னத்துடன் அன்பையும் பிசைந்து உருட்டித் தந்த உருண்டைச் சோறு ருசித்ததுண்டா?

    ஆம் எனில்,நாம் சிறுவர்களாய் இருந்தபோது அனுபவித்த அந்த இன்பம் நம் பிள்ளைகளுக்கும் தானே கிடைக்க வேண்டும்.

    கேலியும்,கிண்டலும் , ஆட்டமும் ,பாட்டும் ,போட்டிகளும் விளையாட்டும் ஏதோ விஷேஷ நாட்களில் கூடியிருக்கும் போது மட்டுமா?

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த வாய்ப்பை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்

    குடும்பம் மொத்தமும் கூடிப் பேசி மகிழும் தருணங்கள் விலை மதிக்க முடியாத சொர்க்க நேரங்கள்.

    சிறு வயதில் நாம் பட்ட துன்பம்,பணப் பற்றாக் குறை பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கம் தப்பில்லை ஆனால் அதற்காக விலை மதிக்க முடியாத தருணங்களையும் சந்தோஷத்தையும் அவர்கள் அறிய வாய்ப்பு இல்லாத வகையில் வாழ்க்கையை இயந்திரத்தனமாக்கிக் கொள்ள வேண்டுமா?

    ஆளுக்கொரு நேரத்தில் உண்டு ஆளுக்கொரு நேரத்தில் உறங்கி எழுந்து ஒரே வீட்டில்
    ஒருவர்முகத்தை மற்றவர் பார்க்கக் கூட நேரமின்றி,விடுமுறை நாட்களில் வாய்ப்பு அமைந்தால் ஏதோ திரு விழாவுக்கு வந்த உறவினரைப் பார்ப்பது போல பார்க்கும் அவலம் இன்றைய வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    வாழ்க்கையின் போக்கை அடியோடு மாற்ற முடியாதாயினும் ,கொஞ்சம் அனுசரித்து நேரம் ஒதுக்கி உறவுகளோடு சேர்ந்திருக்க முனையலாமே?

    ஓடி ஓடி உழைப்பதே குடும்பத்திற்காகத்தானே என வாதிடலாம்.ஆனால் அந்தந்த தருணங்களின் சந்தோஷத்தை அப்போதைக்கப்போதே அனுபவிக்க நேரமில்லாமல் சம்பாதித்து என்ன பயன்?

    மழலையின் பேச்சும்,குழந்தைகளின் கொஞ்சு மொழியும் குறும்புகளும் ஒத்திப் போட்டு சாவகாசமாக ரசிக்கவா?

    எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அப்பா EB யிலும் அம்மா வெளியூரில் ஒரு பள்ளியிலும் வேலை பார்க்கின்றனர்.பையன் +2 படித்துக் கொண்டிருந்தான்.

    தினமும் மதியம் வீட்டுக்கு வரும் தந்தை மகன் சாப்பிட்ட தட்டைப் பார்த்து நேர நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு பள்ளிக்குப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருக்க ,
    அவனோ நண்பர்களுடன் பொழுது போக்கி , பள்ளிக்கே போகாமல் அட்டெண்டென்ஸ் குறைவால் பரீட்சையே எழுத முடியாமல் போனது.

    சாப்பிட்ட தட்டு இருக்கிறதா பையன் வீட்டுக்கு வந்தானா எனப் பார்த்த தந்தை அவன் வேறு என்ன செய்கிறான் எனக் கவனிக்க நேரம் ஒதுக்கவில்லை.யாருக்காக பாடுபடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அவன் படிப்பும் எதிர்காலமும் தான் பாழாய்ப் போனது.

    ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து கொண்டே தனித் தனி தீவுகள் போல அவரவர் வேலை அவர்க்கு என்ற வாழ்க்கையில் சலிப்பு மட்டுமே மிஞ்சும்.

    கூடியிருக்கவும்,குலவி மகிழவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி உறவுகளின் அன்பில் திளைத்து,சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டால் விரிசலுக்கும் பூசலுக்கும் இடமிருக்காது.

    வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாகத் தோன்றும்.

    Wednesday, April 11, 2007

    மனதைப் பாதித்த மரணங்கள்

    மரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.

    சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில் நடித்தவர்.டான்ஸ் ஆடுவதற்கான காலேயில்லாமல் டான்ஸ் ஆடியவர்.ஆக்ஸிடெண்டில் பறிபோன ஒற்றைக் காலுடன் டான்ஸ் ஆடி பலரின் கவனத்தையும் கவர்ந்தவர். இயக்குனர் கேயாரின் 'டான்ஸர்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்.அதுமட்டுமல்லாமல் ஐந்தாயிரத்திற்கும் மேல் 'ஸ்டேஜ் ஷோ'க்களில் ஆடியவர் இந்த மாதம் பரமக்குடியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவிற்கு ஆடப்போன இடத்தில் அவர் தங்கியிருந்த லாட்ஜின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் பொது 'பேலன்ஸ்' தவறி விழுந்து இறந்து விட்டார்.
    ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்து ஆடி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் அதே ஒற்றைக் காலில் பேலன்ஸ் செய்யத் தோற்று மரணத்தை அழைத்த கொடுமையை என்னென்பது?

    இன்னொரு அநியாய மரணம் 'செண்டூர்' வெடிவிபத்து.சாலையோர டீக்கடையில் நின்றவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் என என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே உயிர்விட்ட மக்கள்.எல்லவற்றிலும் தலை விரித்தாடும் அரசியல் சுயநலம் செல்வாக்கால் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அப்பாவிகளின் உயிர் குடித்த அவலம்.

    படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட இத்தகைய கொடூர மரணங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது நேரடிக்காட்சியாக ஒளிபரப்பப் பட்ட பாகனின் மரணம்.திருவிழாவுக்கான ஒளிபரப்பாக இருந்தாலும் இப்படியொரு கொடுமையைத் தொடர்ந்து படம் பிடித்த அந்தக் கொடுமையை என்ன சொல்வது.துணியைப்போல துவைத்துப் போடப்பட்ட அந்த பாகனின் அலறல் இன்னமும் ஒலிப்பதுபோல் இருக்கிறது.எதிர்பாராமல் நடந்த ஒன்று என்றாலும் அதை ஒளிபரப்பத்தான் வேண்டுமா?
    இப்படி பல யானைகளை வைத்து விழா நடத்தும் இடத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லை.இந்த நிகழ்வுக்குப் பிறகே வன அலுவலர்கள் மயக்க மருந்தை துப்பாக்கியில் பிரயோகித்து மதம் கொண்ட யானையை அடக்கியிருக்கின்றனர்.
    வீட்டில் வளர்க்கும் நாய்,பூனைகளே சில நேரம் கட்டுக்கடங்காத போது இத்தகைய பெரிய வனவிலங்குகள் நாட்டிற்குள் தேவையா? யானை ஒரு மங்களகரமான ,பூஜிக்க தக்க ஒன்றாகவே இருப்பினும் அதை வைத்துப் பராமரிப்பதும் பொது இடங்களில் அழைத்து வருவதும் தேவையா?
    யானையோ,மாடோ,மயிலோ,மூஞ்சூறோ எது வேண்டுமானாலும் கடவுளின் அம்சமாக வாகனமாக இருக்கட்டுமே அவை அவை அவற்றின் இடத்தில் இருந்தால்தான் பாதுகாப்பு.
    வனவிலங்கு சரணாலயங்களிலும் காட்டிலும் இருக்க வேண்டியவை அவற்றின் இயல்பான வாழ்க்கை முறையிலிருந்து மாறுபட்ட சூழலில் வசிப்பதும்,பல துன்புறுத்தல்களுக்கு உட்படுவதும் அவைகளை மூர்க்கமடைய வைக்கிறது.பக்தி இருக்க வேண்டியதுதான் அது இத்தகைய அவலங்களுக்கு காரணமாய் இருக்கக் கூடாது.

    பாரதி தொடங்கி இந்த விபரீதம் இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

    Sunday, April 08, 2007

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனவா???

    கடவுள் அமைத்து வைத்த மேடை
    இணைக்கும் கல்யாண மாலை..
    இன்னார்க்கு இன்னாரென்று
    எழுதி வைத்தானே தேவன் அன்று..
    இது கமல் ஒரு படத்தில் பாடும் பாடல்.

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது பழைய வழக்கு.
    சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டு,மண்டபத்திலோ கோயிலிலோ உறுதிபடுத்தப் பட்டு நீதிமன்றங்களில் முடிவுக்கு வருகின்றன என்பது இன்றைய நடைமுறை.

    முன்பெல்லாம் திருமணம் பால்யத்திலே செய்யப்பட்டு பெண்கள் வயதுக்கு வரும்வரை பிறந்த வீட்டிலிருந்துவிட்டு பூப்பெய்திய பின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.

    இன்னாளில் பால்ய விவாகங்கள் இல்லையென்றாலும் , சிதம்பரத்து தீட்ஷிதர் குடும்பங்களில் சபையில் பூஜை செய்யும் தகுதி வேண்டி இன்னமும் நடைமுறையில் உள்ளது.

    இப்போதெல்லாம் பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களில் எழுதும் அளவிற்கு விழிப்புணர்வு வந்து விட்டது. திருமணச் சடங்குகளும் பல வழிகளில் முற்போக்குச் சிந்தனையுடன் மாற்றம் கண்டிருக்கின்றன.

    முன்பெல்லாம் பெற்றவர் நிச்சயித்து பெரும்பாலும் அத்தை,மாமன்வழி உறவுகளிலேயே திருமணம் முடிப்பர்.பெண்கள் திருமணம்வரை மாப்பிள்ளை முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.என் உறவுக்கார பாட்டியைப் பற்றி கிண்டலாகச் சொல்வார்கள்,'பாட்டி தாத்தா முகத்தக் கூட நேரா பார்க்கமாட்டாள் ஆனாலும் பத்து புள்ளை பெற்றுவிட்டாள்' என்று.

    அதற்குப் பிறகு காதல் திருமணங்கள் பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியபோதும் பரவலாக வரவேற்கப்பட்டே வந்திருக்கிறது.காதலில்தான் இப்போது எத்தனைவகை.
    பார்த்த காதல்,பார்க்காத காதல் ,கேட்ட காதல்,கேட்காத காதல் ,போன் காதல்,இண்டெர்நெட் காதல் என்று பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது.

    நிச்சயிக்கப்பட்டதோ அல்லது காதல்வகைப் பட்டதோ
    அந்த திருமண முறைகளில் எத்துணை முன்னேற்றம்.

    பத்து நாள் நடக்கும் கல்யாண கலாட்டக்கள் இப்போது அரிது.எழுத்தாளர் சாவியின்'வாஷிங்டனில் திருமணம்' படித்தவர்கள் அதன் அருமை பெருமைகளை அறிவர்.
    இப்போது இரண்டே நாள். முதல்நாள் ரிசப்ஷன் மறுநாள் கல்யாணம் மூன்றாம் நாள் மாப்பிள்ளையும் பொண்ணும் அமெரிக்காவில் என்றாகிவிட்டது.

    சாத்திர சம்பிரதாயங்களோடு செய்யப்படும் திருமணங்கள்

    சீர்திருத்த முறைப்படி மந்திரம் ஓதாமல் பெரியவர்கள் ஆசியுடன் செய்யப்படும் திருமணங்கள்

    வாழ்க்கைத்துணை ஒப்பந்த என்ற முறைப்படி மணமக்கள் திருமண உறுதிமொழி எடுத்து செய்யப்படும் தமிழர் திருமணமுறைகள்

    இரண்டே இரண்டு சாட்சிக் கையெழுத்துக்களுடன் நடத்தப்படும் பதிவுத் திருமணங்கள்

    இப்போது புதிதாக இன்னொரு புரட்சியாக வந்திருக்கும் 'டைனமிக்'திருமணச் சடங்குகள் [மாப்பிள்ளை வீட்டார்,மணப்பெண் வீட்டார் அனைவரும் வயது வித்தியாசமின்றி கட்டி அணைத்து உறவு பாராட்டுவதுதான் 'டைனமிக்கின் சிறப்பம்சம்']

    இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல இன்னொரு புதிய திருமணக் கலாச்சாரம்
    ஆரம்பித்திருக்கிறது.

    அதுதான்'லிவிங் டுகெதர்' முறை.

    திருமணம் செய்யாமலே ஒரு ஆணும்,பெண்ணும் சேர்ந்து வாழும் முறை.ஒரு வயது வந்த பெண் ஆடவருடன் பேசினாலே கதைகட்ட காத்திருக்கும் இந்த சமுதாயத்தில் 'லிவிங் டுகெதர்' என்பதற்கு மிகுந்த மனத்திண்மை வேண்டும்.மேல் நாடுகளில் இது சர்வசாதாரணமாக இருக்கலாம் ஆனால் நம்முடைய பண்பாட்டிற்கும்,கலாச்சாரத்திற்கும் இது இன்னமும் ஏற்புடையதல்ல.

    இருப்பினும் அங்கொன்று இங்கொன்றென சிலர் அவ்வாறு வாழ்கின்றனர்.சமீப காலத்தில் ஒரு சின்னத்திரை ஜோடி [ராஜ் கமல்-பூஜா] இது பற்றி பேட்டியும் கொடுத்திருந்தனர்.

    அனைவருக்கும் பரிச்சயமான இன்னொரு மூத்த கலையுலக ஜோடி
    கமல்-கௌதமி.இருவரும் இருவரின் பிள்ளைகளோடும் ஒன்றாய் வாழ்வதைப் பார்க்கும்பொது எப்போதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

    'உன் பிள்ளைகளும் என் பிள்ளைகளும்
    நம் பிள்ளைகளோடு
    விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்'

    திருமண பந்தம் எப்படி ஆரம்பிக்கிறது என்பதல்ல பிரச்சினை.நிச்சயிக்கப்பட்ட பந்தமோ
    காதல் திருமணமோ,தாலிகட்டாத சீர்திருத்த கல்யாணமோ அல்லது ல்விங் டுகெதர் முறையோ எதுவாயினும் தம்பதியர் எவ்வாறு வாழ்கின்றனர்.தம் மணவாழ்வில் திருப்தியடைகின்றனரா?கருத்தொருமித்து அனுசரித்துப் போகின்றனரா
    என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
    எத்தனைச் சீக்கிரம் ஒரு பந்தம் உருவாகிறதோ
    அதே வேகத்தில் முறிவும் ஏற்பட்டுவிடுகிறது.

    காதல் திருமணம் என்றால் அப்படித்தான் என்றும்,இல்லை நிச்சயிக்கப் பட்டதில் புரிதல் இருக்காது அதுதான் காரணம் என்றும் பட்டிமன்ற விவாதத்திற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கலாம் .ஆனால் பிரிவதற்காகவா ஒரு பந்தம்?

    சீதா,நளினி சரிதா,பிரசாந்த்,சொர்ணமால்யா என்று கலைத்துறையினர் மட்டுமல்ல சாதாரண நடுத்தரவர்க்கமும் குடும்பநல கோர்ட் ஏறிக் கொண்டுதானிருக்கிறது.
    இதற்கு என்னதான் தீர்வு?பலமுறை யோசித்து ஒருவர் குணம் மற்றவருக்கு உடன்பாடானதா என்று அறிந்து திருமணபந்தம் ஏற்படவேண்டும்.அதற்காக நமக்கு ,நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத லிவிங் டூகெதர் முறை சரியென்று சொல்லவில்லை.தம்பதியர் ஒருவர் உணர்வை மற்றொருவர் புரிந்து மதித்து நடந்தாலே போதும்

    'ஒத்த கருத்துடையவராக இல்லாத போதும்
    ஒத்துப் போகும் தன்மை இருக்க வேண்டும்'

    அப்போதுதான் திருமணங்கள் உண்மையிலேயே சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக இருக்கும்.

    Friday, March 30, 2007

    கல்வி நிலையங்களா..கொலைக் கூடாரங்களா?

    மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வழக்கு.
    கல்வி போதிக்கும் ஆசான்களை தாய்,தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செய்கிறோம்.ஆனால் அந்த கல்வி ஆசான்கள் கொலைகாரக் கொடூரனாகிவிடுகின்றனர் பல நேரங்களில்.
    இரண்டு தினங்களுக்கு முன் அண்ணாமலை பல்கலை பொறியியற்புல மாணவியின் தற்கொலையும் அது தொடர்பான செய்திகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    காப்பியடித்ததால் பிடிபட்டு அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப் பட்டாலும்,ஆசிரியரின் தவறான செயலே காரணம் என்கின்றனர்.சோதனத் தேர்வின் போது காப்பியடிப்பதாக சந்தேகப் பட்ட ஆசிரியர் மாணவியின் ஓவர் கோட்டில் கைவிட்டு 'பிட்' எடுப்பதாக் கூறி முறைகேடாக நடத்திய அவமானம் மாணவியின் உயிருக்கு உலையானதாகவும் பேச்சு.
    இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு,பல லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்திருக்கின்றனர்.
    கல்விக்கூடங்கள் என்பவை கல்வியோடு பண்பையும்,ஒழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும் வளர்க்கவே என்ற சூழல் மாறி, படிக்கப் போகும் பிள்ளைகள் படித்து முடித்து முழுதாகத் திரும்புவார்களா என்ற அச்சமே இப்போது பிரதானமாகி விட்டது.
    ஆசிரியர்களின் கவனக் குறைவினால் பிஞ்சிலே கருகிய நூற்றுக்கனக்கான கும்பகோணம் குழந்தகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.
    பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து பலி,மேற்கூறை விழுந்து பலி என இன்னமும்,இன்னமுமே தொடர்ந்து கொண்டுதானிருக்கிற்து.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு மாணவர்களின் உயி பறிக்கும் எமனாக மாறி வருகின்றனர்.
    தன் வகுப்பு மாணவியின் பணம் திருடு போனதால் சந்தேகப் பட்டு துணிகளைக் களைய வைத்து அவமானப் பட்ட ஒரு 6ம் வகுப்பு மாணவி விஷம் அருந்திச் சாவு
    ஆசிரியர் கண்மண் தெரியாமல் அடித்த்தால் மாணவன் சாவு
    ஆசிரியர் அசிங்கமாகத் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை.
    ஒரு தொழிற்கல்வி பள்ளியில் மாணவருக்கு வந்த வேலை வாய்ப்புக்கான உத்தரவை ,மாணவன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் ஆசிரியர் தர மறுத்ததால் மாணவர் விஷம் குடித்து மரணம்.
    தன்னைக் காதலிக்க மறுத்த சக மாணவியைத் துரத்தியடித்ததில் மாடிப் படிகளில் உருண்டு வீழ்ந்து மரணம்.
    பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டு கொலையான மாணவி கிணற்றில் மிதந்தார்.
    இப்படி ஒன்றல்ல பலப் பல என அடுக்கிக் கொண்டே போகலாம்.
    எங்கே போய்க் கொண்டிருக்கிறது கல்வியின் தரம்.அந்தக் காலகுருகுல முறையில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம்,பண்பாடு,கலாச்சாரம்,விசுவாசம் கிஞ்சித்தும் இந்த கனிணி யுகத்தில் இல்லை.
    தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும்,பாலியல் வன் கொடுமைகளும்,கலாச்சார சீர்கேடுகளுமே
    பிரதானப்பட்டு கல்விக் கூடங்கள் கொலைகாரர்களின் கூடாரமாகி வருகிறது.
    'சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் தோலை உரித்துவிடுங்கள்,என்று மிரட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோரே அனுமதி வழங்கியது ஒரு காலகட்டம். மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து உரிமையெடுக்க தரப்பட்ட அனுமதி.
    இன்றோ சொந்த விறுப்பு,வெறுப்புக்காக மாணவர்கள் கொடுமைப் படுத்தப் படுவதைத் தடுக்க அரசே சட்டம் இயற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை.
    ஆயிரம் கனவுகளோடு ,மிகுந்த சிரமப்பட்டு படிக்கக் கிடைக்கும் வாய்ப்பைத் தொடர முடியாமல் இன்னும் எத்தனை 'சேத்னா'க்களும்,'நாவரசன்'களும் கொல்லப் படுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது.
    ராகிங் என்ற பெயரில் ஆரம்பித்த கொடுமைகள் நீண்டு,பாலியல்,விரோதம்,காதல்தோல்வி என் கிளைப் பரப்பி விஷ விருட்சமாக வேறுன்றி விட்டது.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு குரோதம் பாராட்டி சிக்கலை அதிகமாக்குகின்றனர்.
    விடலைப் பருவத்திற்கே உரித்தான அவசர புத்தி,நிலையற்ற மனோபாவம் மாணவர்களை சில வினாடி உந்துதலில் உயிரை மாய்க்கும் முடிவிற்கு தள்ளிவிடுகிறது.
    இதுநாள் வரைப் போற்றிப் பாதுகாத்த பெற்றோர்,அரிதாகக் கிடைத்த கல்வி வாய்ப்பை மறந்து விட்டு யாரோ ஒரு சிலரின் பேச்சுக்கும்,ஏச்சுக்கும் அவமானப் பட்டு உயிரை மாய்க்கும் அவலம் பெருகி வருகிறது.
    உடனடித்தேவை சட்டங்கள் மட்டும் அல்ல முறையான வழி நடத்துதலும்.
    பரஸ்பர புரிந்து கொள்ளுதலும்,செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் போக்கும் வரும்வரை எந்த சட்டங்களும் நிலையான தீர்வளிக்க முடியாது.

    Thursday, March 08, 2007

    டெஸ்ட் டியூப் பேபிகள்

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
    இந்த நாளில் மகளிர் பிரச்சனைகள் அதற்கான பதிவுகள் என்பதே என் விருப்பம்.
    பெண்மையின் தவம் தாய்மை என்றால்
    அந்த தவத்தின் வரம் தான் மக்கட் பேறு.
    எதனையோப் பேருக்கு அந்த இயற்கையின் ஆசீர்வாதம் கிடைக்காமலேப் போகிறது.
    இந்த இடத்தில் என் மனம் கவர்ந்த ஒரு பழையத் திரைப் பாடலைப் பற்றிச் சொல்ல ஆசைப் படுகிறேன்.மேலோட்டமாகப் பார்க்கும் போது கொஞ்சமே விரசமாகத் தெரிந்தாலும் கவியரசரின் அந்த கவிதை வரிகளிலும் அர்த்தத்திலும் மனம் மயங்கிப் போகிறது.
    'பார் மகளே பார்'என்ற படத்தில் சிவாஜியும்,சௌகாரும் பாடும் பாடல்.அவ்விருவரின் அழகும் காட்சி அமைப்பும் பாடலுக்கு மேலும் அழகூட்டும்
    நீரோடும் வைகையிலே.........எனத் தொடங்கும் பாடலின் வரிகள்
    ''நான் காதலென்னும் கவிதை சொன்னேன்
    கட்டிலின் மேலே
    அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்
    தொட்டிலின் மேலே
    வாரிரோ ஆரிரோ ஆராரோ''
    தாம்பத்யத்தின் இந்த தவமும் வரமும் கிடைக்காத எத்தனையோ பெண்கள் உள்ளனர்.
    சமுதாயத்தின் முன் இவர்களே குற்றவாளிகளாகவும் முன்னிறுத்தப் படுகின்றனர்.பெண்ணுரிமையின் முதல் வீழ்ச்சி இங்குதான் ஆரம்பிக்கிறது.இது தேவையற்ற சர்ச்சைகளுக்கு அடிகோலும் என்பதாலேயே என்னுடைய பெண்ணுரிமைப் பதிவுகளில் இதைப் பற்றி நான் விவாதிக்கவில்லை.
    இயற்கை வஞ்சித்தாலும் அறிவியல் நுட்பங்கள் இம்மாதிரி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பதில் வளர்ச்சி கண்டிருக்கிறது.
    'டெஸ்ட் டியூப் பேபி' எனப்படும் சோதனைக் குழாய் குழந்தைகள் ஒரு காலத்தில் ஏதோ பாவம் போலவும் ,நெறி பிறழ்தல் போலவும் கருதப் பட்டன.இன்று ஓரளவ பரவலாக அறியப்பட்ட போதும்,இன்னமும் முழுமையாக அதைப் பற்றிய 'தெளிவு' படித்தவர்கள் மத்தியிலேயே காணப்படவில்லை.

    பிறவி அல்லது பரம்பரைக் குறைபாடுகளோ அல்லது நோய்த்தாக்குதலினாலோ
    இயற்கையாக 'சூல்' கொள்ள முடியாத ஒரு பெண்ணின் கருப்பைக்கு வெளியே அவளின் சினை முட்டையையும்[egg],அவள் கணவனின் உயிரணுவையும்[sperm] கலக்கச் செது உருவாகும் 'கருமுட்டை'[fertilised egg or zygote]யை மீண்டும் அவளின் கருவகத்தில் செலுத்தி வளரச் செய்து பிறக்கும் குழந்தைதான் 'டெஸ்ட் டியூப் பேபி'
    .

    பலர் இன்னமும் ஏதொ முழுக்குழந்தையுமே 10 மாததிற்கு ஒரு பெரிய சோதனைக் குழாயிலேயே வளரும் என்று கூட நினைக்கின்றனர்.
    கரு உருவாகும் சூழ்நிலையில் இல்லாத 'சூலகங்கள்'[UTERES] ஒரு முறை கருமுட்டையை வெளியே உருவாக்கி உள் சேர்த்த பிறகு அதை 10 மாதத்திற்கு வளர்ப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறது.இதை இயற்கையின் விந்தை என்பதா முரண்பாடு என்பதா?
    உயிரணுக்களில் குறைபாடு உள்ள ஆண் அல்லது சினை முட்டை உருவாகாத பெண் இப்படி தம்பதியரில் யாருக்கேனும் நிவர்த்திக்க முடியாத குறை இருக்கும் பட்சத்திலேயே மாற்று வழியாக 'சினைமுட்டை தானம்' அல்லது 'உரிரணுக்கள்' தானம் பெறப்பட்டு இந்த சோதனக்குழாய் முறை செய்யப்படுகிறது.

    எல்லா சோதனைக் குழாய் முறைகளுமே 'டோனார்' முறை இல்லை.

    இப்படி 'டோனார் இடமிருந்து பெறுவதும் தம்பதியரின் சம்மதம் அறிந்து,தகுந்த டோனார் கண்டறியப் பட்டு மிகுந்த இரகசியம் காக்கப் பட்டு ,சம்மந்தப்பட்ட அனைவரின் ஒப்புதலோடும் நடைபெறுகிறது.
    எனவே இது ஏதோ பாவச் செயல் போலவும் ,ஒழுக்க நெறியிலிருந்து விலகுதல் போலவும் பெண்கள் அஞ்ச வேண்டாம்.கிராமப் புறங்களில் 'நாத்து நடவு''என்பார்கள்.
    ஓரிடத்தில் விளைவிக்கப் பட்ட நாத்தைப் பிடுங்கி பாத்தியில் நடுவது போலத்தான்.
    இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த அறிவுத்திறனோடும் விளங்குகின்றனர் என்பது கண்கூடு.
    தாய்மை அடைய முடியாமல்,சமூகத்தின் கேலிக்கும்,ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி வேதனைப்படும் மகளிர் விரும்பினால் இம்முறையைத் தைரியமாகத் தேர்ந்தெடுக்கலாம்.இதில் எந்த பாவமும் இல்லை.பணம் மட்டுமே இலட்சக் கணக்கில் செலவாகும்.இதன் வெற்றி வாய்ப்பு சதவீதம் 30 -40 ஆக இருந்தாலும் நம்பிக்கையொன்றோ வேண்டியது
    இயற்கையின் வஞ்சனையை விஞ்ஞானத்தால் வெல்லுங்கள் தோழியரே!

    [வாடகை தாய்கள் மற்றும் தத்தெடுத்தல்....பற்றி எனது அடுத்த பதிவுகளில் பார்ப்போம்]

    Wednesday, March 07, 2007

    மகளிர் தினம்..ஒரு கண்ணோட்டம்

    நாளை மார்ச் 8 மகளிர் தினம்.
    வருடத்தில் 365 நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டும்தான் மகளிர்க்கானதா?
    மாட்டுப் பொங்கலுக்கும் மகளிர் தினத்திற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
    வருடம் முழுவதும் வண்டியிழுத்து,ஏர் ஓட்டி வேலை செய்தாலும் ,வருடத்தில் ஒரு நாள் குளிப்பாட்டி மாலையிட்டு கொம்பு சீவி அலங்கரிக்கப்படும் மாட்டுக்கு மாட்டுப் பொங்கல் மட்டும் விசேஷமானது.மகளிர் தினமும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.
    வருடத்தில் ஒரு நாள் 'பிறந்த நாள் ' போல என வாதிடுவோரிடம் கேட்கிறேன் ஆடவர்தினம் என்று ஏதும் உண்டா?
    மகளிர்க் கெதிரான வன்முறைகளும்,பாலியல் பலாத்காரங்களும் தொடரும் வரை உண்மையான பெண்ணூரிமையும்,சுதந்திரமும் கிடைக்கும் வரை மகளிர் தினம் என்பது பெயரளவில் மட்டுமே.அது இன்னுமொரு அட்ச்ய திரிதியைப் போல் வாங்கி மகிழ மட்டுமே.
    'ஓரு பெண் என்று நள்ளிரவில் தனியாகச் சுதந்திரமாக வெளியே சொல்ல முடியுமோ அன்றுதான் உண்மையான சுதந்திரம் பெற்றதாகப் பொருள்' என்று மகாத்மா சொன்னது இன்னும் கனவாகவே உள்ளது.

    ஒரு ஆடவன் வளர்ந்து ஆளாகி தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை தேடும் கட்டத்தில் தன்னை நேசிக்கக் கூடிய தன்னோடு தோள் சேர்ந்து வாழக் கூடிய துணையாகத் தேடாமல் தன்னை விட வசதியான ,நிறைய கொண்டுவரக்கூடிய பெண்ணா என்றுதானே பார்க்கிறான்.
    அப்படியே வந்தாலும் தனக்கு அடங்கி நடக்ககூடிய ,தனக்கு வேண்டிய வசதிகளை தன் பிறந்தவீட்டிலிருந்து மேலும் மேலும் பெற்றுத் தரக் கூடியவளாக இருக்கவே விரும்புகிறான்.

    இந்த நிலை அடிமட்ட வர்க்கத்தில் மட்டுமில்லை.ஒரு பல்கலைகழகத் துணைவேந்தர் முதல் பிரபலமான நடிகர் குடும்பம்வரை வியாபித்துக் காணப்படுகிறது.

    நான் அப்படிப்பட்டவன் இல்லை எனக்கும் பெண் சுதந்திரத்தில் நம்பிக்கை உண்டு அடுத்தவர் தயவை எதிர்பார்க்க மாட்டேன் என்று சொல்லக் கூடிய பலரும் தன்னைச் சார்ந்த பெண் தனக்குக் கட்டுப் பட்டிருக்கவே நினைப்பர்.

    ஒரு பெண்ணின் உண்மையான சுதந்திரம் என்பது அவளின் கருத்துச் சுதந்திரத்தில் ஆரம்பிக்கிறது.'பொட்டச்சிக்கு என்ன தெரியும் வாயை மூடிக் கொண்டு பேசாம் இரு' எனும் ஆடவன் குரல் ஒலிக்கும்வரை பெண்ணுரிமை ஏட்டுச் சுரைக்காய்தான்.

    பெண்ணுரிமை என்று முழங்குவோர் முதலில் தன் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்.ஒரு ஆணுக்கு எத்துணை உரிமையுண்டோ அத்துணையும் பெண்ணுக்கும் கிடைக்கட்டும்.ஒவ்வொரு குடும்பமும் திருந்தினாலே மொத்தமாக சமுதாய மற்றம் ஏற்படும்.

    ''அவள் அழகாயில்லாததால் என் தங்கையானாள்' என்று கவிதை எழுதினால் ரசிக்கும் ஆடவர் போக்கு மாறும்வரை,தன் துணையைத்தவிர சக பெண்டிரை தாயாய்,சகோதரியாய் மகளாய்ப் பார்க்கும் வரை மகளிர்தினம் எந்த சமுதாயப் புரட்சியையும் ஏற்படுத்திவிட முடியாது.
    பெண்ணென்ற அலட்சியப் போக்கும்,இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற மனோபாவமும் மாறி, பெண்களுக்கெதிரான சாதீய,மத,சமுதாய்க் கொடுமைகளும் வன்முறைகளும் களையப்படும்வரை மகளிர் தினம் என்பது பத்தோடு பதின்னொன்றான ஒரு கலாச்சார கொண்டாட்டமே அல்லாது உண்மையான பெண்ணுரிமைக்கோ சமத்துவத்திற்கோ அடிகோலும் வித்தாக முடியாது.